பௌத்த மதம் மறைந்த வரலாறு
பௌத்த மதம் தமிழ்நாட்டில் வந்த வரலாற்றினையும் அது பரவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும் மேலே ஆராய்ந்தோம். செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம் பிற்காலத்தில் எவ்வாறு மறைந்து விட்டது என்பதை இங்கு ஆராய்வோம்.
பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப் பற்றி இந்நூல் இணைப்பில் காண்க.) இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தை உண்டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதத்தையுண்டாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மதத்தையுண்டாக்கிய கோசால மக்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர். இந்த மதங்கள் உண்டான காலத்திலே வைதீக மதமும் இருந்தது. இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிற்கு வந்தன. பௌத்த மதம் அசோக சக்கரவர்த்தி காலத்திலே தமிழ்நாட்டில் பரவச் செய்யப்பட்டது என்று அறிந்தோம். ஜைன மதம், அசோக சக்கரவர்த்தியின் பாட்டனான சந்திரகுப்த அரசன் காலத்தில் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உள்ளன. சற்றேறத்தாழ இதே காலத்தில்தான் வைதீக பிராமண மதமும், ஆசீவக மதமும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும். அக் காலத்தில், வடநாட்டு மதங்களினின்று வேறு பட்டதும் தனிப்பட்டதுமான ஒரு மதத்தைத் தமிழர் மேற்கொண்டிருந்தனர். வடநாட்டு மதங்களின் தொடர்பற்ற புராதன மதமாக இருந்தது அக்காலத்துத் தமிழர் மதம். வடநாட்டினின்று தென்னாடு போந்த மேற்கூறிய நான்கு மதங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கொள்கையுடையவை. ஒன்றோடொன்று பெரும்பகை கொண்டவை. இந்த மதங்கள் செற்றங் கொண்டு ஒன்றையொன்று அழித்தொழிக்க அற்றம் பார்த்திருந்தன. அமைதியாக வாழத்தெரியாமல், ஒன்றையொன்று இழித்துப் பழித்துப் பேசி வந்தன. அமைதியாக இருந்த தமிழ்நாட்டில் இந்த வடநாட்டு மதங்கள் வந்து சமயப்பூசல்களைக் கிளப்பிவிட்டன. தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்களைத் தத்தம் மதத்தில் சேர்த்து, தத்தம் மதத்திற்குச் செல்வாக்கும் சிறப்பும் தேடிக்கொள்ள இந்த மதங்கள் முயற்சி செய்தன. பொதுமக்களின் அன்பையும் ஆதரவையும் பெறவும், அரசர்களையும் செல்வர்களையும் வசப்படுத்திச் செல்வாக்கடையவும் இவை முயன்றன. தமிழர் கொண்டாடும் திருவிழாக்களையும் பண்டிகைகளையும் தக்க அமயமாகக் கொண்டு இந்த வடநாட்டு மதங்கள் தத்தம் கொள்கைகளைத் தமிழ்மக்களுக்குப் போதித்து வந்ததாகத் தெரிகின்றது. இவ்வித சமயப் போட்டியில் செற்றமும் கலகமும் ஏற்பட்டன. இந்தக் கலகங்களை அடக்க அரசன் தலையிட வேண்டியது ஆயிற்று.
"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின்;
பற்றா மாக்கள் தம்முட னாயினும்,
செற்றமுங் கலாமுஞ் செய்யா தகலுமின் "
(மணிமேகலை 01-60-63)
(மணிமேகலை 01-60-63)
என்று அரசன் திருவிழாக் காலங்களில் பறையறைவித்தான் என்பதை மணிமேகலை என்னும் காவியத்தினால் அறிகின்றோம். என்றாலும், சமயப்போர் நின்றபாடில்லை.
தமிழ்நாட்டில், செல்வாக்குப் பெறுவதற்காகப் போட்டியிட்ட நான்கு வடநாட்டுச் சமயங்களில் முதல் முதல் வெற்றி பெற்றுச் செல்வாக்கடைந்தது பௌத்த மதம். இந்தச் சமயம் செல்வாக்கடைந்த காரணத்தை முன் அதிகாரத்தில் கூறினோம். இச்சமயப் போட்டியில் முற்றும் பின்னடைந்துவிட்டது ஆசீவகமதம். ஆகவே, பௌத்தம், ஜைனம், வைதீகம் என்னும் மூன்று மதங்களுக்கு மட்டுந்தான் பிற்காலத்தில் சமயப்போர் நிகழ்ந்து வந்தது. பௌத்தமதம் முதன்முதல் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுத் தமிழ்நாட்டில் விளங்கியது என்று கூறினோம். ஆனால், இதன் செல்வாக்கைக் கண்டு ஜைன மதமும், வைதீக சமயமும் பின்னடைந்துவிடவில்லை. இவை வாளா இராமல், பௌத்தத்தை எதிர்த்துத் தாக்கிய வண்ணமாய், அதன் வீழ்ச்சிக்கு வழிகோலிக் கொண்டேயிருந்தன. தனது நிலையைக் காத்துக் கொள்ளப் பௌத்தம் இந்த இரண்டு பிறவிப்பகையுடன் போராட வேண்டியிருந்தது. கடைசியாக, நாளடைவில், பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு வழியும் ஏற்பட்டு விட்டது.
ஜைனம், வைதீகம் என்னும் புறப்பகை ஒருபுறமிருக்க, அகப்பகையும் தோன்றிவிட்டது. பௌத்தத்திற்குள்ளேயே சில பிரிவும் உண்டாயின. ஈனயானம், மகாயானம் என்னும் இரண்டு பெரும் பிரிவுகள் தோன்றி அவற்றினின்றும் உட்பிரிவுகள் பல கிளைத்து வளர்ந்தன. சிராவகயானம், மகாயானம், மத்திரயானம் என்னும் மூன்று பிரிவுகளை நீலகேசியுரையினால் அறிகின்றோம். 'ஐயுறுமமணரும், அறுவகைத் தேரரும்' என்று ஆறுவகைப் பிரிவினரான தேரர்கள் (தேரர் - பௌத்த பிக்குகள்) இருந்ததாகத் திருஞான சம்பந்தர் தமது தேவாரத்தில் கூறுகின்றார். இந்தப் பௌத்த உட்பிரிவினர் தமக்குள்ளேயே தர்க்கம் செய்து போரிட்டுக் கொண்டனர். இந்த உட்பிரிவுகளால் அந்த மதத்தின் வலிமை குன்றிவிட்டது. உடம்பிலே தோன்றிய நோய் நாளடைவில் உடலையே அழித்துவிடுவதுபோல, இந்த உட்பிரிவுகளே பௌத்த மதத்தின் வீழ்ச்சிக்கு முதற்காரணமாயிருந்தன.
அன்றியும், பொதுமக்களாலும் அரசர்களாலும் செல்வர்களாலும் அளிக்கப்பட்ட செல்வத்தினால், பௌத்த விகாரைகளில் வசித்த பிக்ஷுக்கள் தங்கள் கடமையை மறந்து, செல்வத்தின் இன்பங்களைத் துய்க்கத் தொடங்கி விட்டார்கள். ஆகவே, இவர்களிடத்தில் பொது மக்களிடமிருந்து மதிப்புக் குன்றவும், பௌத்தம் தன் செல்வாக்கினை இழக்க நேரிட்டது. இவைபோன்ற குற்றங் குறைகளும் உட்பிரிவுகளும் ஏற்படாமலிருந்தால், பௌத்த மதம் தனது புறப்பகை மதங்களுடன் போரிட்டுக் கொண்டே இன்றளவும் ஓரளவு நிலைபெற்றிருப்பினும் இருக்கும். ஆயினும், குறைபாடுகளும் உட்பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டபடியால் அது புறப்பகையாகிய ஜைன வைதீக மதங்களுடன் போராட முடியாமல் வீழ்ச்சியடைந்து விட்டது.
கி.பி ஐந்தாவது அல்லது ஆறாவது நூற்றாண்டிற்குப் பின்னர் பௌத்தத்தின் சிறப்புக் குன்றவும், ஜைன மதம் தலையெடுத்துச் செல்வாக்குப் பெறத் தொடங்கிற்று. ஆனால், அப்பொழுதும் வைதீக மதம் உயர்நிலை அடைய முடியாமலேயே இருந்தது. பௌத்த மத வீழ்ச்சிக்குப் பிறகு, ஜைன மதம் செல்வாக்குப் பெற்றது. பெற்றதும், தனது கொள்கைக்கும் வளர்ச்சிக்கும் பெருந்தடையாயிருந்த பௌத்தத்தை முன்னைவிடக் கடுமையாகத் தாக்கி, அதை நிலைகுலையச் செய்துவிட்டது. பௌத்தக் கோயில்கள் ஜைனக் கோயில்களாக மாற்றப்பட்டன. பௌத்த பிக்ஷுக்கள் வசித்த மலைக்குகைகள், ஜைனக்குகைகளாக மாற்றப்பட்டன. அகளங்கர் என்னும் ஜைனர், கி.பி 8 ஆம் நூற்றாண்டில் காஞ்சீபுரத்தில் உள்ள காமக்கோட்டத்தில், பௌத்தருடன் சமயவாதம் செய்து அவரைத் தோற்பித்துச் சிங்கள நாட்டிற்குத் துரத்திவிட்டார் என்னும் செய்தி பலர் அறிந்ததொன்றே. ஆனால், பௌத்தத்தை வீழ்ச்சியடையச் செய்து ஜைனம் வெற்றிக்கொடி நாட்டியபோதிலும், பௌத்தம் முழுவதும் அழிந்துவிடவில்லை. வலிமையிழந்த அந்த மதம் தமிழ்நாட்டில் ஓரளவில் ஊடாடிக் கொண்டிருந்தது.
இவ்வாறு மூன்று அல்லது நான்கு நூற்றாண்டுகள் சென்றன. பிறகு இதுகாறும் பின்னணியில் இருந்த வைதீக மதம் மெல்ல மெல்ல வலிமை பெறத் தொடங்கி, ஜைன மதத்தை வீழ்த்தி, உன்னத நிலையடையத் தொடங்கிற்று. இக்காலத்தில்தான் பௌத்தமதம் அடியோடு வீழ்ச்சியடைந்து முற்றும் மறைந்துவிட்டது.
வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய்ப் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கிறிஸ்துவுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ் நாடுவந்த வைதீக பிராமண மதம் கி.பி ஆறாவது, அல்லது ஏழாவது நூற்றாண்டு வரையில் பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது.
கி.பி ஆறாவது, அல்லது ஏழாவது நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்கொலை செய்வதை நிறுத்தியதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட (தமிழ்த்) தெய்வங்களைத் தன் மதக் கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்றுவிட்டது. இந்த மாறுதலுடன், 'பக்தி' இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப் பெறவும், பண்டைப் பகையுள்ள ஜைன, பௌத்த மதங்களைக் கடுமையாகத் தாக்கித் தோற்பிக்கவும் முடிந்தது. சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர், திருமங்கையாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்கள் தோன்றிப் புதிய இந்து மதத்தை நிலை நாட்டவும், ஜைன பௌத்த மதங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள். கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தப் புதிய வைதீக இந்து மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போர் தொடங்கி வெற்றி பெற்றது. இந்து மதத்தின் வெற்றிக்குக் காரணம் யாதெனின், அக்காலத்தில் இந்து மதம் பிரிவினையின்றி ஒரே மதமாக இருந்ததேயாகும். திருமால், சிவன் என்னும் இருதேவர் அதில் இருந்த போதிலும், வைணவமதம் என்றும் சைவமதம் என்றும் பிற்காலத்துப் பிரிந்து நின்றதுபோல, அக்காலத்தில் இந்து மதம் பிரிந்திருக்கவில்லை. புதிய வைதீக மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போராடிய காலத்தில், வைணவம், சைவம் என்றும், வடகலை, தென்கலை என்றும் வீரசைவம், சித்தாந்த சைவம் என்றும், ஸ்மார்த்த மதம் என்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆகவே ஒற்றுமையுடன் போரிட்ட படியால், ஜைன, பௌத்த மதங்களை அது வீழ்ச்சியடையச் செய்து விட்டது. தமிழ்நாட்டில் ஜைனமதம், என்றும் தலைதூக்க முடியாதபடியும் ஏற்கனவே ஜைனமதத்தால் வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும்படியும் இதனால் நேர்ந்தது. சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்க வாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்த பொன்னால் அமைந்த புத்தச்சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக்கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்தமதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.
கலிகால சாகித்ய பண்டித பராக்கிரம பாகு என்னும் இலங்கை மன்னன், கி.பி 1256 இல் சோளி (சோழ) தேசத்திலிருந்து பௌத்த பிக்ஷுக்களை இலங்கைக்கு வரவழைத்துப் பௌத்த மதத்தை வலிவுறச் செய்தான் என்று இலங்கைச் சரித்திரத்தினால் அறியப்படுகின்றதாகலின், கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் சோழ தேசத்தில் பௌத்த மதம் நிலைபெற்றிருந்தது என்று துணியலாம். கி.பி பதினான்காம் நூற்றாண்டு வரையில் தமிழ்நாட்டில் சிற்சில இடங்களில் பௌத்தரும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்தன. பின்னர், நாளடைவில், பௌத்தம் தமிழ்நாட்டில் மறைந்து விட்டது; மறக்கவும் பட்டது. ஆனால் அதன் பெரிய கொள்கைகள் மட்டும் இன்னும் இந்துமதத்தில் போற்றப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment