பௌத்தமதம் தமிழ்நாடு வந்த வரலாறு
கி.மு. ஐந்தாம் நூறாண்டில் கௌதம புத்தரால் வட இந்தியாவில் தோன்றிய பௌத்த மதம், தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் எப்போது வந்தது? இந்த மதத்தை முதல் முதல் இங்குக்கொண்டு வந்தவர் யார்? இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம்.
கடைச்சங்க காலத்திற்குப் பின்னர்தான், அதாவது கி.பி. மூன்றாம் நூறாண்டுக்குப் பிறகுதான், பௌத்த மதம் தமிழ்நாட்டில் வந்திருக்கக்கூடும் என்று சிலர் கருதுகின்றனர். அவ்வாறு அவர்கள் கருதுவதற்குக் காரணம் யாதெனில், கடைச்சங்க நூல்களில் பௌத்த மதத்தைப் பற்றிக் கூறப்படாததுதான். ஆனால், இவர்கள் கருத்துத் தவறெனத் தெரிகின்றது. பௌத்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப் படவில்லையாயினும், அச்சங்க காலத்து நூல்களில் காணப் படுகின்றன. அதாவது, கடைச்சங்க காலத்து நூல்களாகிய மணிமேகலை சிலப்பதிகரம் மதுரைக்காஞ்சி என்னும் நூல்களில் இந்த மதத்தைப்பற்றிக் கூறப்பட்டுள்ளன. அன்றியும், பௌத்த மதப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் கடைச்சங்கத் தொகை நூல்களுட் காணப்படுகின்றன. மணிமேகலை என்னும் பௌத்த காவியத்தை இயற்றிய பௌத்தராகிய கூலவாணிகர் சாத்தனார் அருளிச் செய்த செய்யுள்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை என்னும் நூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. இளம்போதியார் என்பவரும் கடைச்சங்க காலத்திலிருந்த பௌத்தப் புலவர். இவரது பெயரே இவர் பௌத்தர் என்பதைத் தெரிவிக்கின்றது. (போதி = அரச மரம்; அரசமரத்தின் கீழே புத்தர் ஞானம் பெற்றபடியால் பௌத்தர் அரசமரத்தைத் தொழுவது வழக்கம்.) இந்த இளம்போதியார் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றிணை என்னும் கடைச்சங்கத் தொகை நூலில் 72ஆம் பாட்டகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, கடைச்சங்க நூல்களில் பௌத்தப் புலவர்களின் செய்யுள்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றபடியினால், அச்சங்க காலத்துக்குப் பிறகுதான் பௌத்த மதம் தமிழ்நாடு வந்திருக்கக் கூடும் என்பது தவறாகின்றது.கடைச்சங்க காலத்திலேயே, அதாவது கி.பி முதல்லாவது, அல்லது இரண்டாவது நூற்றாண்டிலேயே பௌத்தம் தமிழ்நாட்டில் இருந்தது என்பது நன்கு விளங்குகின்றது ஆயினும், பௌத்த மதம் தமிழ்நாட்டிற்கு முதல் முதல் எப்போது வந்தது என்னும் கேள்விக்கு இது விடையன்று.இக் கேள்விக்கு விடை தமிழ்நூல்களில் காணக் கிடைக்கவில்லை. ஆகையால், புறச்சான்றுகளைக் கொண்டு ஆராய்வோம். நற்காலமாக, அசோக சக்கரவர்த்தி எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்கின்றன. அசோக சக்கரவர்த்தி மௌரிய மன்னர்களுள் தலைசிறந்தவர். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கி.மு 273 முதல் 232 வரையில்) தமிழ் இந்தியாவைத் தவிர ஏனைய இந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ்வைத் துலகாண்ட ஒப்பற்ற மன்னர். அன்றியும் இவர், பௌத்த மதத்தை மேற்கொண்டு, இந்தியா தேசத்திலும் அதற்காப்பாற்பட்ட தேசங்களிலும் இந்தப் பௌத்த மதத்தைப் பரவச்செய்தார். இவர் பாரத நாட்டில் வெவ்வேறிடங்களில் எழுதுவித்துள்ள கல்வெட்டுச் சாசனங்களில் இரண்டு நமது ஆராச்சிக்கு உதவி செய்கின்றன என்று சொன்னோம். சௌராஷ்டிரா தேசத்திலுள்ள கிர்னார் நகரத்துக்கருகில் உள்ள பாறையொன்றில் எழுதப்பட்ட அசோக சாசனத்தில் (Edict ii) கீழ்க் கண்ட பகுதி காணப்படுகின்றது:-
"காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர் பெருமா னுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லா விடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப்பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப் பட்டன. அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களாம்."
இந்தச் சாசனத்தில், அசோக சக்கரவர்த்தி தமது நாட்டிலும், தமிழ்நாட்டிலும், ஏனைய நாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தார் என்பது மட்டும் கூறப்படுகின்றது. ஆனால், கீழ்கண்ட இன்னொரு சாசனத்தில், இவர் தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் பரப்பிய செய்தி காணப்படுகின்றது. பிஷாவர் நகரத்துக்கருகில் காணப்படுகின்ற இந்தச் சாசனம் (Rock Edict iii), போர்செய்து பலரைக் கொன்று அதனால் பெறும் மறவெற்றியைவிட, அறத்தைப் போதித்து அதனால் பெறும் அறவெற்றியே தமக்கு விருப்பமானது என்பதைத் தம் பிள்ளைக்கும் பேரப்பிள்ளைக்கும் அசோக மன்னர் தெரிவிக்கிற செய்தியைக் கூறுகின்றது. இவ்வாறு கூறுகின்ற இந்தச் சாசனத்தில் நமது ஆராய்ச்சிக்கு உதவி செய்கின்ற பகுதியும் காணப்படுகின்றது. அது வருமாறு:-
"தரும விஜயம் (அறவெற்றி) என்னும் வெற்றியே மாட்சி மிக்க அரசரால் (அசோக மன்னரால்) முதல் தரமான வெற்றியென்று கருதப்படுகின்றது. இந்த வெற்றி இந்த இராச்சியத்திலும், இதற்கப்பாற்பட்ட அறுநூறு யேசனை தூரத்திலுள்ள அண்டியொகஸ் என்னும் யவன அரசனுடைய தேசத்திலும் அதற்கும் அப்பால் டாலமி, அண்டிகொனஸ், மகஸ், அலெக்ஸாந்தர் என்னும் பெயருள்ள நான்கு அரசர்களின் தேசங்களிலும், இப்பால் தெற்கேயுள்ள சோழ, பாண்டிய, தாம்பிரபரணி (இலங்கை) வரையிலும் இந்த (அற) வெற்றி அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது."
இந்த சாசனம் கி.மு. 258 இல் எழுதப்பட்டது. அசோகமன்னர், தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தரும விஜயத்தை - அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப் பரவச் செய்வதால் வந்த அறவெற்றியை - கைப்பற்றினார் என்னும் செய்தியை இச் சாசனம் தெரிவிக்கின்றது. இதன் திரண்ட பொருள் என்னவென்றால், அசோக சக்கரவர்த்தி தூதர்களை (பிக்ஷுக்களை) அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும் பரவச் செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சியாளர் அனைவரும் இக்கருத்தையே இச் சாசனப்பகுதி விளக்குவதாகக் கூறுகின்றனர்.
அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ்நாட்டிற்கு வந்தது என்பதற்கு வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. 'மகாவம்சம்', 'தீபவம்சம்' என்னும் பௌத்த நூல்கள் இலங்கையில் பௌத்த மதம் வந்த வரலாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர் எவ்வாறு போற்றிப் பாதுகாத்து வந்தனர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன. இலங்கைத்தீவு தமிழ்நாட்டையடுத்துள்ளதாகையாலும், தமிழ்நாட்டினைக் கடந்தே இலங்கைக்குச் செல்ல வேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்தமதம் வந்த அதே காலத்தில்தான் தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும் என்று துணியலாம். ஆகவே தீபவம்சமும், மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக சக்கரவத்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும் தேரரின் தலைமையில் மூன்றாவது பௌத்த மகாநாடு கூடியதென்றும், ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத ஆராய்ச்சி நடைபெற்றதென்றும், மகாநாடு முடிந்த பின்னர் பௌத்த மதத்தைப் பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும், இந்த நூல்கள் கூறுகின்றன.
காஸ்மீரம், காந்தாரம் என்னும் நாடுகளுக்கு மஜ்ஜந்திகர் என்னும் தேரரும், மகிஷ மண்டலத்துக்கு மகாதேவர் என்னும் தேரரும் அனுப்பப் பட்டனர். வனவாசி நாட்டிற்கு ரக்கிதர் என்னும் தேரரும், அபரந்தக தேசத்திற்குத் தம்மரக்கிதர் என்னும் தேரரும், மகாராட்டிர தேசத்திற்கு மகாதம்மரக்கிதர் என்னும் தேரரும், யோன தேசத்திற்கு மகாரக்கிதர் என்னும் தேரரும் அனுப்பப் பட்டனர்.இமாலயத்தைச் சேர்ந்த நாட்டிற்கு மஜ்ஜிம என்னும் தேரரும், சுவன்னபூமி நாட்டிற்குச் சோணர், உத்திரர் என்னும் தேரர்களும் அனுப்பப் பட்டனர். பெரிய தேரராகிய மகிந்தரும் அவரின் சீடர்களாகிய இட்டியர், உத்தியர், சம்பலர், பத்தசாலர் என்பவர்களும் இலங்கைத் தீவுக்குப் பௌத்தமதத்தைப் பரவச் செய்ய அனுப்பப் பட்டனர். மகிந்தர் முதலியவர்கள், தாம் அடைந்திருந்த இருத்தியினாலே, ஆகாயவழியாகப் பறந்து இலங்கையை யடைந்தனர் என்று மகாவம்சம் என்னும் நூல் (12 ஆம் அதிகாரம்) கூறுகிறது.
(இதில் கூறப்படுகிற காந்தாரதேசம் என்பது பஞ்சாப் தேசத்து வடபுறத்தில் உள்ள பெஷாவர், ராவல்பிண்டி என்னும் நாடுகளாகும். காஸ்மீரம் என்பது இப்போதுள்ள காஸ்மீரதேசம். மகிஷ்மண்டலம் என்பது இப்போதைய மைசூர் நாடு என்று கருதுவர் சிலர். ஆனால் விந்தியமலைக்கு தெற்கில் இருந்ததும் மகிஷ்மதி என்னும் தலைநகரைக் கொண்டிருந்ததுமான மகிஷ்மண்டலம் என்னும் தேசமாகும் என்று ஆராய்சியாளர் கூறுவர். வனவாசி என்பது இப்போதைய வடகன்னட ஜில்லாவைக் சேர்ந்த பகுதி. இங்கு இப்போதும் பனவாசி என்னும் பட்டினம் இருக்கிறது. அபராந்தக (மேற்குக் கோடி) தேசம் என்பது குஜராத்து, கத்தியவார், கச்சு, சிந்து என்னும் நாடுகளைச் சேர்ந்த பாகம். மகாராட்டிரம் என்பது இப்போது மராட்டி பாஷை பேசுகிற மகாராட்டிர தேசம் ஆகும். யோன தேசம் என்பது யவன நாடு. இது இந்திய தேசத்துக்கப்பால் வடமேற்குப் பக்கத்தில் உள்ள தேசம். இமாலயம் என்பது இமயமலைச்சாரலைச் சேர்ந்த நாடுகள். சுவர்ணபூமி என்பது பர்மா தேசம் என்று கருதுவர் சிலர். ஆனால், கர்ணசுவர்ண எனப்படும் வங்காளதேசம் என்றும், மத்திய இந்தியாவில் உள்ளதும் கங்கையாற்று ஒரு கிளையாக உள்ளதும் ஆன சோணை நதி (இரண்ய வாஹ) யைச் சூழ்ந்த நாடு என்றும் ஆராய்ச்சி வல்லார் கருதுவர். இலங்கை அல்லது தம்பபண்ணி (தாம்ரபரணி) என்பது இப்போதைய சிங்களத் தீவு ஆகும்.)
இவ்வாறு இந்தியாவிலும் அதற்கு அண்மையிலும் உள்ள நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்களை அனுப்பிய மூன்றாவது பௌத்த சங்கம், தமிழ் நாட்டிற்குப் பிக்ஷுக்களை அனுப்பியதாக இலங்கை நாட்டு நூலாகிய மகாவம்சம் கூறவில்லை. ஏன்? இதன் காரணம் என்ன? ஆனால், மேலே காட்டியபடி, அசோக சக்கரவர்த்தி எழுதியுள்ள கல்வெட்டுச் சாசனங்கள் இரண்டும் (Edicts ii, and iii) தமிழ்நாட்டிலே பௌத்த பிஷுக்கள் அனுப்பப்பட்டதாகக் கூறுகின்றன. அன்றியும் அசோக சக்கரவர்த்தியும் அவரால் அனுப்பப்பட்ட மகேந்திர தேரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் தமிழ்நாட்டிலே இருந்தன என்று வேறு சான்றுகள் தெரிவிக்கின்றன. யுவாங் சுவாங் என்னும் சீனநாட்டுப் பௌத்தர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து பௌத்தசமய ஆராய்ச்சி செய்தார். அவர் எழுதியுள்ள தமது யாத்திரைக் குறிப்பில் கீழ்கண்ட செய்திகள் கூறப்படுகின்றன. (யுவாங் சுவாங் கி.பி 640 இல் காஞ்சிபுரத்திற்கு வந்தார்.) காஞ்சிபுரத்திலே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட நூறு அடி உயரம் உள்ள பௌத்த ஸ்தூபி இருந்ததையும், சோழ நாட்டிலே அசோக சக்கரவர்த்தி கட்டிய ஒரு பௌத்த விகாரை இருந்ததையும் இவர் குறிப்பிடுகிறார். அன்றியும், பாண்டி நாட்டின் தலைநகருக்கு (மதுரைக்கு) அருகிலே அசோக சக்கரவர்த்தியின் தம்பியாகிய மகேந்திரரால் கட்டப்பட்ட ஒரு சங்காராமம் (பௌத்த விகாரை) இருந்ததாகவும் அதற்குக் கிழக்கே அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபி இருந்ததாகவும் இவை இரண்டும் இவர் காலத்தில் இடிந்து சிதைந்து புல் பூண்டு முளைத்துக் காணப்பட்டன என்றும் இவர் குறிப்பிடுகிறார் 1.
1. Beal Records if the western world ii. p. 231
பர்மா தேசத்துப் பௌத்தப் பிக்குப் பரம்பரையைக் கூறுகிற வரலாறு (Talaing Records) காஞ்சிபுரத்துக்கு அருகிலே பதரதிட்டை என்னும் இடத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தம்மபாலர் என்னும் பௌத்த பிக்கு வசித்திருந்தார் என்று கூறுகிறது. இந்தத் தர்மபாலர் என்பவர் பேர்போன ஆசாரிய தம்மபாலர் ஆவர். இவர் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்த பிக்ஷு. இவர் பௌத்த வேதமாகிய திரிபிடகத்தின் சில பகுதிகளுக்குப் பாலி மொழியில் உரை எழுதியிருக்கிறார். இவர் கி.பி 5ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர். தாம் எழுதிய நூலில், அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் தாம் தங்கியிருந்து இந்நூலை எழுதியதாகக் கூறியிருக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததாகக் கூறப்படுகிற இந்திரவிகாரை என்பது மகேந்திர தேரரால் கட்டப்பட்ட விகாரை என்று ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்.
இவ்வாறு அசோக சக்கரவர்த்தியின் சாசனங்களும், ஏனையோர் சான்றுகளும் தமிழ்நாட்டிலே அசோக சக்கரவர்த்தியும் அவர் அனுப்பிய மகேந்திரரும் கட்டிய விகாரைகளும் தூபிகளும் இருந்த செய்தியைக் கூறுகின்றன. ஆகவே, எனைய நாடுகளுக்குப் பௌத்த பிக்ஷுக்கள் அனுப்பப்பட்டது போலவே தமிழ்நாட்டிற்கும் அனுப்பபட்டிருக்கவேண்டும். அவ்வாறு அனுப்பட்டவர்கள் மகேந்திர தேரரும் அவருடன் வந்த பிக்ஷுக்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், இச் செய்திகளை இலங்கை நூலாகிய மகாவம்சம் ஏன் கூறாமல் மறைத்துவிட்டது? இதன் காரணம் யாது?
பண்டைக் காலத்தில் தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச் சென்று அடிக்கடி அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான இலங்கையாருக்கும் போர் நிகழ்ந்து வந்தபடியாலும், மகேந்திரர் தமிழ்நாட்டில் பௌத்த மதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள், பகைமை காரணமாகக் கூறமல் விட்டன. மகத நாட்டிலிருந்து நேரடியாக பௌத்த மதம் தமது இலங்கைத் தீவுக்கு வந்தது என்னும் பெருமையையடைவதற்காக இலங்கை பிக்குகள் இதனை மறைத்துவிட்டார்கள் என்று வின்ஸென்ட் ஸ்மித் என்பவர் கூறுகிறார். 1 (1. P45 Asoka 3rd Edition by Vincent A. Smith.)
இவர் கருத்தையே ஆராய்ச்சி வல்லார் ஒப்புக் கொள்கின்றனர். வட இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர், கடல் வழியாகப் பிராயணம் செய்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக்குச் செல்லும் வழியில் உள்ளதும் அக்காலத்தில் பேர்பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கியிருக்கக்கூடும் என்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப்பட்டவைதாம் அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ்நூல்களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பிக்ஷுக்கள் ஆகாய வழியாகப் பறந்து நேரே இலங்கைக்கு வந்ததாக மகாவம்சம் என்னும் இலங்கை நூல் கூறுகிறதென்றாலும், அசோகர் அனுப்பிய பௌத்த பிக்ஷுக்கள் இலங்கைக்குப் போகும் வழியில் தமிழ்நாட்டிலே தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்திருக்க வேண்டும் என்று கருதுவர் அரசாங்க சிலாசாசன ஆராய்ச்சியாளர். 2. (2. EP. Rep 1097 Page 61)
அவ்வாறு கருதுவர் வேறு சிலரும். 3. (3. Asoka;s Mission to Ceylon and some connected problem by Jothirmay Sen. Indian Historical querterly Vol V.PP 667-678) மகேந்திரர் நேரே இலங்கைக்கு ஆகாய வழியாகப் பறந்து சென்றார் என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுவது ஐயப்படுவதற்குரியது என்றும், தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தான் மகேந்திரர் இலங்கைக்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் மற்றோர் ஆராய்ச்சியாளரும் கருதுகிறார். அவர் கூறுவதன் சாரமாவது: அசோகருடைய இரண்டு (Rock Edicts ii, and iii) சாசனங்களில் கூறப்படுகிற தம்பபன்னி (தாம்பிரபரணி) என்பது தம்பபன்னி தீவாக (இலங்கைத் தீவாக) இருக்க வேண்டும் என்பதில்லை. அது தாம்பிரபரணி பாய்கிற, தற்போது திருநெல்வேலி என்று வழங்கப்படுகிற ஜில்லாவாகும். யுவாங் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் கூறுகிற மலயகூடம் என்னும் தேயமும் இதுவாகும். இங்கிருந்து படகேறிச் சிறிது தூரத்தைக் கடந்தால் தம்பன்னிக்கு (இலங்கைக்குச்) செல்லலாம். 1 1. Pages 60,62 on the Chronicles of Ceylon by Bimala Chrun Law
பாண்டியநாட்டில் மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக் குகைகளில் பிக்குகள் படுத் துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கி யமைக்கப்பட்ட படுக்கைகளும் அப்படுக்கையின் கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை, இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக்காலத்தில் அமைக்கப்பட்ட குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள் ஊருக்குள் வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக மலைப் பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம். இலங்கையிலும் பாண்டி நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் அமைப்பைக் கொண்டு இவை பௌத்தத் துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப் பாண்டி நாட்டுக் குகைகளில் காணப்படும் எழுத்துக்களைக் கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு காணப்படும் பாண்டிநாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக்கருகில் இருக்கின்றது. 'அரிட்டாபட்டி' என்னும் பெயர், பௌத்த மதத்தைப் பரவச் செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும் பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில் தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆனது பற்றியே இக்குகைக்கருகில் உள்ள சிற்றூர் 'அரிட்டாபட்டி' என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல் மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டிநாட்டில் உள்ள 'அரிட்டாபட்டி' என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.
மேலே எடுத்துக்காட்டிய சான்றுகளினாலே, யாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கப் பெற்றோம். அதாவது தமிழ்நாட்டில் பௌத்தமதம் எந்தக் காலத்தில் வந்தது? இந்த மதத்தைக் கொண்டுவந்து இங்குப் புகுத்தியவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு, கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ்நாட்டில் வந்ததென்றும், இதனை இங்குக் கொண்டு வந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் 1 மற்றும் அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவார் என்றும் விடை கண்டோம்.
1. இந்த மகிந்தர் (மகேந்திரர்) அசோக சக்கரவர்த்தியின் மகனார் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. இந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோக மன்னருடைய தம்பியார் என்று கூறுகின்றன. மகனார் ஆயினும் ஆகுக; தம்பியார் ஆயினும் ஆகுக இவர் அசோக மன்னருடைய உறவினர் என்பது மட்டும் உறுதி.
No comments:
Post a Comment