பின்னிணைப்பு
5. மணிமேகலை நூலின் காலம் மணிமேகலையின் காலத்தை ஆதாரத்துடன் ஆராய்ந்து எழுதுவதென்றால், அது பெரியதொரு தனி நூலாக முடியும். ஆதலின், மிகச் சுருக்கமாக எழுதுவோம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டவை என்பதே பலரின் கொள்கை. ஆயினும் சிலர் மட்டும் ஐயப்பாட்டிற்கிடமான சில ஆதாரங்களைக் காட்டி, இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவர். ஈண்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மணிமேகலை எழுதப்பட்டதென்பதற்கான ஆதாரங்களை முதலில் எடுத்துக்காட்டிப் பின்னர், இதனைப் பிற்காலத்து நூல் என்று கூறுவோரின் கூற்று ஆதாரமற்றதென்பதை விளக்குவோம். 'மணிமேகலை'யை இயற்றிய ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரும், 'சிலப்பதிகாரத்தை' இயற்றிய இளங்கோ அடிகளும் நண்பர்களென்பதும், சிலப்பதிகாரக் காவியத்தின் தொடர்ச்சியே மணிமேகலைக் காவியம் என்பதும் யாவரும் ஒப்புக்கொண்ட உண்மை. அன்றியும் இளங்கோ அடிகளின் தமையனான சேரன் செங்குட்டுவனுக்கும் சீத்தலைச் சாத்தனார் உற்ற நண்பர். கன்ணகியின் வரலாற்றினைச் சீத்தலைச்சாத்தனார் சொல்லக் கேட்டுக் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி அவளுக்குக் கோயில் அமைத்த செங்குட்டுவ மன்னன், இலங்கைத் தீவை அரசாண்டிருந்த கஜபாகு (கயவாகு) என்னும் அரசனைப் பத்தினிக் கடவுளான கண்ணகியின் விழாவுக்கு அழைத்திருந்தான். கஜபாகு மன்னனும் இவ்விழாவுக்கு வந்திருந்ததோடு, இலங்கைக்குச் சென்று அங்கும் கண்ணகி வணக்கத்தை ஏற்படுத்தினான். இன்றைக்கும் சிங்களவர் 'பத்தினித் தெய்யோ' (பத்தினி தெய்வம்) என்று கண்ணகியைக் கொண்டாடி வருகின்றனர். பத்தினி தெய்வ வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்திய கஜபாகு வேந்தன் கி.பி. 171 முதல் 193 வரையில் இலங்கையை அரசாண்டான். இவனுக்கு 'கஜபாகு காமினி' என்னும் பெயரும் உண்டு. எனவே, கஜபாகு நண்பனான சேரன் செங்குட்டுவனும், இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் ஒரே காலத்தவர் என்பது பெறப்பட்டது. ஆகவே, மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றியிருக்க வேண்டும். மணிமேகலை நூலில் இருபத்தேழாவது காதையில் "வேத வியாகனுங் கிருத கோடியும் ஏதமில் சைமினி யெனுமிவ் வாசிரியர் பத்து மெட்டு மாறும் பண்புறத் தத்தம் வகையாற் றாம்பகர்ந் திட்டனர் " என வரும் அடிகளிற், 'கிருதகோடி' என்னும் ஆசிரியரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. "கிருத கோடி என்பது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப் 'போதாயனர்' என்பவர் இயற்றிய உரை. 'பிரபஞ்ச ஹ்ருதயம்' என்னும் சமஸ்கிருத நூலில், மீமாம்சை சாஸ்திரம் முழுவதுக்கும் போதாயனர் என்பவர் ஒரு பாஷ்யம் (விரிவுரை) எழுதினார் என்றும், அந்த உரைக்கு 'கிருதகோடி' என்பது பெயர் என்றும், இந்த உரை மிக விரிவாக இருந்தது பற்றி 'உபவர்ஷர்' என்பவர், அதனைச் சுருக்கி அமைத்தனர் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. வேதாந்த சுத்திரத்திற்கு இராமாநுசர் எழுதிய 'ஸ்ரீபாஷ்யம்' என்னும் உரையிலும், போதாயனர் வேதாந்த சூத்திரத்திற்குப் 'பிரம்மசூத்திரம்' என்னும் விருத்தியுரை எழுதினார் என்றும், அந்த விரிவுரையைப் 'பூர்வாசாரியர் சுருக்கமாக அமைத்தார்' என்றும் கூறியிருக்கின்றார். இங்கு இவர் 'பூர்வாசாரியார்' என்று கூறுவது உபவர்ஷரை. இந்த உபவர்ஷர் என்பவர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் அல்லர் என்பது ஆராய்ச்சி வல்லோர் முடிவு. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்த உபவர்ஷருக்கு, முன் மீமாம்சை சாத்திரத்துக்கு ஒரே ஓர் உரை இருந்ததென்றும், அது போதாயனர் எழுதிய 'கிருதகோடி' என்னும் உரை என்றும், இந்தக் 'கிருதகோடி' உரை எழுதிய போதாயனர் கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் இரண்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்றும் ஆராய்ச்சிவல்ல அறிஞர் முடிவு கட்டியுள்ளனர். எனவே, கிருதகோடி ஆசிரியரைக் குறிப்பிடுகின்ற 'மணிமேகலை' அவ்வுரை பெரிதும் வழக்காற்றிலிருந்த கி.பி. முதலாவது அல்லது இரண்டாவது நூற்றாண்டுகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனைப் பற்றி முற்றும் விளக்கி எழுதினால் இடங்கொள்ளும் என்றஞ்சிச் சுருக்கமாகக் குறிக்கப்பட்டது. இதனை நன்குணர வேண்டுவோர் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களினால் ஐயமறத் தெளியலாம். (Vedanta Commentators before Sankaracharya by P.V. Kane, Proceedings, Fifth Indian Oriental Conference, Vol II Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.) மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது ஈனயான பௌத்த மதம்; மகாயான பௌத்த மதத்தைப் பற்றி அதில் கூறப்படவில்லை. எனவே, மணிமேகலை மகாயான பௌத்தக் கொள்கைகள் பரவுதற்கு முன்பு எழுதப்பட்ட நூல் என்று விளங்குகின்றது. மகாயான பௌத்த மதத்தை உண்டாக்கியவர் நாகார்ஜூனர். இவரும் இவர் மாணவராகிய ஆரியதேவரும் மகாயான மத நூல்களை இயற்றி அந்த மதத்தைப் பரவச் செய்தனர். நாகர்ஜூனர், கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர். எப்படி எனில், கூறுவோம்: 'குமாரஜீவர்' என்னும் ஆசிரியர் கி.பி 399 முதல் 417 வரையில் பௌத்த நூல்களை எழுதினார் என்று சீன தேசத்து நூல்களினின்றும் தெரிகின்றது. இந்தக் குமாரஜீவர் கி.பி. 400 இல் நாகர்ஜூனர் சரிதத்தையும், அவர் மாணவராகிய ஆரியதேவரது சரிதத்தையும் எழுதியிருக்கின்றார். எனவே இவரது காலத்துக்கு ஒன்றிரண்டு நூற்றாண்டுக்கு முன்பு நாகர்ஜூனர் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். நாகர்ஜூனர் 'சாதவாகன' அரசர்களின் காலத்தில் இருந்தவர் என்று தெரிகின்றபடியாலும், சாதவாகன அரசாட்சி கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியின் மங்கிவிட்ட படியாலும், நாகர்ஜூனர் அந்த நூற்றாண்டின் முற்பகுதியில், அஃதாவது கி.பி. 250 இல் வாழ்ந்திருந்தவராதல் வேண்டும். ஆசிரியர் கீத் (Prof Keith) என்பவர், நாகர்ஜூனர் ஏறக்குறையக் கி.பி 200-இல் வாழ்ந்திருந்தவர் என்று கூறுவதும் இதனை ஆதரிக்கின்றது. எனவே நாகர்ஜூனர் கி.பி 200-250 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது தெளிவாகின்றது. மணிமேகலையில் 'சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை' யில் தமிழ் நாட்டிலிருந்த பல்வகைச் சமயங்களைப் பற்றிக் கூறுகின்ற சீத்தலைச் சாத்தனார், ஈனயான மதத்துக்கு மாறுபட்ட கொள்கைகளையும் தத்துவங்களையும் உடைய மகாயான மதத்தைப் பற்றிக் கூறாதிருப்பது, நாகர்ஜூனரது கொள்கைகள் பரவுவதற்கு முன்னே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் காட்டுகிறது. எனவே, மணிமேகலை நாகர்ஜூனருக்கு முன், அஃதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்றப்பட்டதாதல் வேண்டும். இதனைக் கீழ்க்கண்ட ஆங்கில நூல்களில் விளக்கமாக காணலாம். (The Buddhism of Manimekalai by Dr. S. Krishnaswami Aiyengar in Buddhist Studies, Edited by B.C. Law; Manimekhalai in its Historical Setting by Dr. S. Krishnaswami Aiyengar.) சங்கச் செய்யுள்களில் பல்லவர்களைப் பற்றிக் கூறப்படவில்லை. அதிலும் சிறப்பாகத் தமிழ்நாட்டு வேந்தர்களை ஆங்காங்குக் குறிப்பிட்டுச் செல்கின்ற சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல்லவ அரசர்களைக் கூறவில்லை. பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு தமிழ்நாட்டின் வடபகுதியை அரசாண்ட பேர் பெற்ற மன்னர். இவர்களைப் பற்றி கூறப்படாதது பற்றி, பல்லவர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னர் 'மணிமேகலை' இயற்றப்பட்டிருக்க வேண்டும். காஞ்சிபுரத்தை அரசாண்டவன் சோழமன்னன் என்றும், அவன் 'நலங்கிள்ளி' என்பவன் தம்பி 'இளங்கிள்ளி' என்பவன் என்றும் மணிமேகலை கூறுகின்றது. பல்லவர் முதல் முதல் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது கி.பி நாலாம் நூற்றாண்டிலென்றும், கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலும் சோழர்கள் சோழநாட்டிலும் தொண்டை நாட்டிலும் வலிமை பெற்றிருந்தார்களென்றும் 'குமாரவிஷ்ணு' அல்லது 'ஸ்கந்தவர்மன்' என்னும் பெயருள்ள பல்லவ அரசன் தமிழ்நாட்டின் வடக்கிலிருந்து வந்து காஞ்சிபுரத்தை முதல் முதல் கைப்பற்றினானென்றும் அவன் காஞ்சியைக் கைப்பற்றியது ஏறத்தாழக் கி.பி. 325 ஆம் ஆண்டென்றும் கூறுவர் ஹீராஸ் பாதிரியார் (Studies in Pallava History by Rev. H. Hearas.) பல்லவர் காஞ்சியைச் சோழரிடமிருந்து முதல் முதல் கைப்பற்றியது கி.பி. 325 ஆம் ஆண்டில் ஆகையாலும், மணிமேகலையில் கூறப்பட்டுள்ள காஞ்சியை அரசாண்ட மன்னன் சோழர் குடும்பத்தைச் சேர்ந்தவனாகையாலும், மணிமேகலை இந்த ஆண்டுக்கு முன் இயற்றப்பட்டதாதல் வேண்டும். ஆனால், மேலே கூறப்பட்ட கஜபாகுவின் காலத்தையும் செங்குட்டுவன் காலத்தையும், நாகர்ஜூனர் காலத்தையும், கிருதகோடி உரை இயற்றிய 'போதாயனர்' காலத்தையும் ஒப்பிட்டு நோக்கும்போது மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் கடைசியில் இயற்றப்பட்டதாதல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகின்றது. மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதை விளக்க இன்னும் வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. இனி, இந்த நூல் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் இயற்றப்பட்டதென்று கூறுவோர் காட்டும் சான்றுகளை எடுத்துக்காட்டி, அவை தக்க சான்றுகளல்ல என்பதை விளக்குவோம். 1. மணிமேகலையில் 'குச்சரக்குடிகை' என வரும் சொற்றொடருக்கு உரையெழுதிய டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள், ''கூர்ச்சர தேசத்துப் பணி அமைந்த சிறிய கோயில்' என்று எழுதியிருக்கிறார்கள். இதனை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு ஒரு சிலர், ஏனைய ஆதாரங்களையெல்லாம் மறந்துவிட்டு, மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இயற்றப்பட்ட தென்பர். கூர்ச்சரர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவுக்கு வரவில்லை என்றும், கூர்ச்சரரைக் குறிப்பிடுகிறபடியால், மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப்பட்ட தென்றும் கூறுவர். இந்த ஆராய்ச்சி முடிவை எதிர்த்தும், ஆதரித்தும் 'குச்சரக்குடிகை'க்கு வேறு பொருள் கற்பித்தும் அறிஞர் பலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் ஈண்டுக் காட்டப்புகின் விரியும். ஆனால், இந்த ஆராய்ச்சி ஐயப்பாட்டுக்கு இடமான முடிவை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்ட விரும்புகின்றோம். 'குச்சரக்குடிகை தன்னகம் புக்கு' என வரும் மணிமேகலை அடிகளுக்குக் 'குஞ்சக்குண்டிகை தன்னகம் புக்கு' என்னும் பாடபேதமும் காட்டப்பட்டுள்ளது; (18 ஆம் காதை, 145) இந்தப் பாடபேதம் முதற் பதிப்பில் காட்டப்படவில்லை. எதிர்வாதங்கள் எழுந்த பின்னர், பிற்பதிப்புக்களில் இந்தப் பாடபேதம் காட்டப்பட்டுள்ளது. இந்தப் பாடபேதம் முதற் பதிப்பிலேயே காட்டப்பட்டிருக்குமானால், பல ஆராய்ச்சியாளரின் காலமும் உழைப்பும் வீணாக்கப்பட்டிரா. ஆனால், முதல் பதிப்பின் பாடத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் உரையையும் தெய்வவாக்காக கொண்டு, ஆராய்ச்சியாளரிற் சிலர் மணிமேகலை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என வாதித்தனர். இந்த வாதத்தை V.A. Smith போன்ற சில மேல்நாட்டு அறிஞரும் நம்பி இடர்ப்பட்டனர். நேர்மையான பாடம் 'குச்சரக் குடிகை'யா அல்லது 'குஞ்சக் குண்டிகை' யா என்பதை முடிவுகட்டிய பின்னரே இந்த ஆராய்ச்சியில் இறங்கவேண்டும். இந்த ஐயப்பாட்டைத் தீர்க்காமல், 'கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்' என்னும் உரையை ஒப்புக்கொண்டு முடிவுகட்டுவது, வழுக்கு நிலத்தில் ஊன்று கோலின்றி நடப்பது போலாகும். இனி 'குச்சரக்குடிகை' என்னும் பாடந்தான் சரியானதென்று ஒப்புக்கொள்வதாயிருந்தாலும், இச்சொற்றொடர்க்கு உரையாசிரியர் காட்டிய பொருள் தவறு என்றும், இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும் என்றும் தோன்றுகின்றது. கூர்ச்சரர் கட்டடத்தொழிலில் பேர்பெற்றவர் அல்லர் என்பதை நிலைநாட்டி, இந்த உரையை மறுத்து, டாக்டர் கு. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள் தாம் எழுதிய Manimekhalai in its Historical Setting என்னும் நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்கள். விரிவஞ்சி அதனை ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம். 'குடிகை' எனபதற்குச் 'சிறிய கோயில்' என்று எழுதப்பட்டுள்ள உரையும் சரியானதாகத் தோன்றவில்லை. 'குடிகை' என்பதற்கு ஓலையால் வேய்ந்த குடிசை என்பதே பொருள் எனத்தோன்றுகின்றது. இந்தப் பொருளிலேயே இந்தக் 'குடிகை' என்னும் சொல் மணிமேகலையில் வேறு இடத்திலும் வந்துள்ளது. "தண்டு மண்டையும் பிடித்துக் காவலர் உண்டுகண் படிக்கும் உறையுட் குடிகையும்." நகரத்தை இரவு முழுதும் காவல் காத்த காவலாளர் காலையில் ஊண் உண்டு படுத்து உறங்கும் குடிசையை (ஓலையால் வேய்ந்த குடிசை) இது குறிப்பிடுகின்றது. இதற்குக் குறிப்புரை எழுதியவர், "குடிகை -பர்ணசாலை. 'குடிகா' என்னும் வடமொழிச் சிதைவென்பர். இஃது இக்காலத்து 'குடிசை' என்று வழங்குகின்றது" என்று எழுதியிருக்கின்றார். இந்த உரை மிகவும் பொருத்தமானதே. ஆனால், 'குச்சரக் குடிகை' என்பதற்குப் பொருள் எழுதியபோது, சிறிய கோயில், அஃதாவது, கட்டடத்தால் அமைந்த சிறிய கோயில் என்னும் பொருள்பட எழுதியுள்ளார். ஓரிடத்தில் 'குடிசை; என்றும், இன்னோரிடத்தில் 'கட்டடம்' என்றும் எழுதியிருக்கின்றார். இஃது எவ்வாறு பொருந்தும்? "உறையுட் குடிகை யுள்வரிக் கொண்ட மறுவில் செய்கை மணிமே கலைதான்" "உலக வறவியும் முதியாள் குடிகையும்" என வரும் அடிகளில், 'குடிகை' என்பதற்குக் குடிசை, ஓலையால் வேய்ந்த பர்ணசாலை என்றே பொருள் கொள்ளத் தக்கதாயிருக்கின்றது. சம்பாபதி கோயில் சுடுகாட்டை அடுத்திருந்த ஒரு கோயில். 'உலகவறவி' என்னும் மன்றத்தில் ஒரு புறத்தில் அஃது அமைந்திருந்தது. இந்தக் கோயிலின் கூரை ஓலையால் வேயப்பட்டிருந்தது. இப்பொழுதும் சில கிராமதேவதை கோயில்கள் ஓலைக்கொட்டகையால் அமைந்திருப்பதைக் காணலாம். ஓலையால் கொட்டகை அமைக்கக் கூர்ச்சர தேசத்திலிருந்து தொழிலாளர் வரவேண்டுவதில்லை. எனவே, 'குச்சரக் குடிகை' என்பதே சரியான பாடமாயிருந்தாலுங்கூட, அதற்கு வேறு பொருள் இருக்கவேண்டுமே தவிர 'கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில்' என்னும் பொருள் சிறிதும் பொருந்தாது. ஆகவே, இதை ஆதாரமாகக் கொண்டு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மணிமேகலை எழுதப்பட்டதென்பது அறிவுக்குச் சிறிதும் பொருத்தமானதன்று. இதனை மேலும் விளக்கப்புகின் விரியும் என்றஞ்சி இதோடு நிறுத்துகின்றோம். சாவகத்தீவில் பௌத்த மதம் பெரிதும் பரவியிருந்ததென்பது மணிமேகலையினால் அறியப்படுகின்றது. 'சாவகம்' என்பது இப்போதுள்ள் கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான சுமத்திரா தீவு என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றார்கள். இந்தச் சுமத்திரா தீவுக்குக் கி.பி. 400 இல் சென்ற 'பாஹியன்' (Fa-Hien) என்னும் சீனர், அங்குப் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருக்கிறதென்றும், பௌத்த மதம் தாழ்மையான நிலையில் இருக்கிறதென்றும் எழுதியிருக்கிறார். ஆனால், கி.பி 600 இல் இந்தத் தீவுக்குச் சென்ற 'இத்-ஸிங்' (It Sing) என்னும் சீனர் இங்குப் பௌத்த மதம் செழித்தோங்கியிருக்கிறதென்று எழுதியிருக்கின்றார். இதனை ஆதாரமாகச் சுட்டிக்காட்டி மணிமேகலையில் சாவகத் தீவில் பௌத்தம் செல்வாக்குப் பெற்றிருந்ததாகக் கூறியிருப்பதனாலும், இத்ஸிங் என்பவரும் அவ்வாறே கூறியிருப்பதனாலும், பாஹியன் காலத்தில் அஃது இங்குச் செல்வாக்குப் பெறாதிருந்தபடியாலும், கி.பி. 400-600 இடைப்பட்ட காலத்தில் சுமத்திரா தீவில் பௌத்தம் செல்வாக்குற்றிருக்க வேண்டும் என்றும், ஆகவே அதனைக் குறிப்பிடுகின்ற மணிமேகலை இந்தக் காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் சில ஆராய்ச்சியாளர் கூறுவர். இஃது ஐயப்பாட்டுக்கிடமான போலிக் காரணம் என்று திரு. V.R. இராமச்சந்திர தீக்ஷிதர் அவர்கள் எழுதியுள்ளதைக் காட்டி விளக்குவோம். இந்தக் கூற்றை இவர் கீழ்வருமாறு மறுக்கிறார்: முதலாவது, பாஹியான் இந்த விஷயத்தைப் பற்றிச் சரியான செய்தியைத் தரவில்லை. ஒருவேளை, சுமத்திரா தீவில் இவர் சென்ற பகுதியில் பிராமண மதம் செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம். இரண்டாவது, ஆபுத்திரன் சுமத்திரா தீவை அரசாண்டபோது, அஃதாவது கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில், செல்வாக்குற்றிருந்த பௌத்த மதம் கி.பி. 400 இல் சீன யாத்திரிகர் சென்றபோது, செல்வாக்குக் குன்றியிருக்கக் கூடும். பின்னர், மீண்டும் அதன் செல்வாக்கு நிலைபெற்று, கி.பி 620 இல் சென்ற சீன யாத்திரிகர் காலத்தில் சிறப்படைந்திருக்கக் கூடும். மூன்றாவது, மணிமேகலையின் காலத்தைக் கி.பி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அமைக்கவேண்டும். மூன்றாவது சொல்லிய முடிபு எமக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லை. மற்ற ஆதாரங்களுக்கும் சான்றுகளுக்கும் இது பொருத்தமாக இருக்கவில்லை. ஆகவே முதலாவது அல்லது இரண்டாவது சொன்ன முடிவுகளில் ஒன்றையே நாம் மேற்கொள்ள வேண்டும். இவர் கருத்து என்னவென்றால், கி.பி. 400-க்கும், 600-க்கும் இடைப்பட்ட காலத்தில் மணிமேகலை இயற்றப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளத் தக்கதல்ல; அது கிறிஸ்து சகாப்தத்தின் (Buddhism in Tamil Literature. Chapter XXVII, Buddhistic Studies: Edited by B.C. Law) தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது. பாஹியன் என்னும் சீன யாத்திரிகர், இந்தியாவிலிருந்து சீனாவுக்குப் கப்பல் வழியாகக் கி.பி. 413 இல் சென்றபோது, இடையிலே யவதீவத்தில் தங்கினார் என்றும், அப்போது அந்தத் தீவில் பௌத்த மதம் நன்கு பரவியிருக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். இவர் கூறுகிற யவதீவம் என்பது ஜாவா தீவு என்பர் சிலர். சிலர் சுமாத்ரா தீவு என்பர். யவதீவம் என்பது சுமாத்ரா தீவும் அன்று ஜாவா தீவும் அன்று; மற்றொரு தீவாகிய போர்னியோ தீவு என்பர் ஆராய்ச்சி வல்லார். ஆகவே சாவகத் தீவில் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் இருந்ததில்லை என்று இவர்கள் கூறுகிற வாதம் சிறிதும் பொருத்தமற்றது. மணிமேகலை சற்று எளிய நடையில் அமைந்திருப்பதும், அதில் வரும் 'மாதவி','சுதமதி','மணிமேகலை','சித்திராபதி','சங்கதருமன்' முதலான பெயர்கள் சங்க நூல்களில் காணப்படாத வடநாட்டுப் பெயர்களாகவிருப்பதும் பற்றி இந்த நூல் பிற்காலத்தில் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுவர் சிலர். மணிமேகலையை இயற்றிய சாத்தனார் இந்நூலைப் பண்டிதர்களுக்கு மட்டும் இயற்றினாரில்லை; புலமை நிரம்பாத மற்றவர்களுக்கும் விளங்கவேண்டும் என்பதே அவரது கருத்து. ஏனென்றால், பௌத்த மதத்தையும் அதன் கொள்கைகளையும் பல்லோருக்கும் அறிவிக்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு இஃது இயறப்பட்டதாகத் தெரிகின்றது. பௌத்தரும் ஜைனரும் தங்கள் மதக் கொள்கைகளைப் பல்லோருக்கும் விளங்கும்படி எழுதவும் பேசவும் வேண்டும் என்பது அம்மதங்களின் கொள்கை. 'பௌத்தரும் தமிழும்' அதிகாரம் காண்க. மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள மக்கட் பெயர்கள் பெரும்பான்மையும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன வென்பது உண்மையே. வடமொழிப் பெயராக இருப்பது கொண்டு பிற்காலத்து நூலென்று சொல்வதற்கில்லை. பௌத்தம், ஜைனம் முதலான மதங்கள் வடநாட்டினின்று வந்த மதங்கள். ஆகையால், அம்மதங்களை மேற்கொண்ட தமிழர்களுக்கு அம்மதச் சார்பான வடமொழிப் பெயர்கள் அமைப்பது இயல்பு. இப்பொழுதும் தமிழன் கிறித்தவனாகவோ முகம்மதியனாகவோ மதம் மாறினால் 'அந்தோனி', 'ஜான்','ஜோசப்' முதலிய பெயர்களையாவது, 'அப்துல்லா','ரஹ்மான்','யூசூப்' முதலிய பெயர்களையாவது அம்மதச் சார்பு பற்றிச் சூட்டிக்கொள்கிறான். அதுபோல, பௌத்த வடமொழிப் பெயர்களைத் தமிழ்ப் பௌத்தர் சூட்டிக்கொண்டதில் வியப்பு இல்லை. இனி, சங்க நூல்களில் வடமொழிப் பெயர்கள் காணப்படவில்லை என்பதும் தவறு. சங்கச் செய்யுள்களை இயற்றியவர்களில் இருபது பேருக்கு மேற்பட்டவர் 'சாத்தனார்' என்னும் பெயர் கொண்டிருக்கிறார். இப்பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் தமிழ்த்திரிபு. '(இளம்) போதியார்' என்னும் பெயர் வடமொழி. 'நிகண்டனார் (கலைக்கோட்டுத் தண்டனார்)' என்பது வடமொழிச் சிதைவு. 'கோவலன்' என்பது 'கோபாலன்' என்பதன் திரிபு. 'கோதமனார் பிரமனார்','தாமோதரனார்','(சோழன்) நல்லுருத்திரன்','(ஆவூர்க் காவிதிகள்) சாதேவனார்', 'பிரமசாரி', 'பெருங் கௌசிகனார்', 'பெரும்பதுமனார்' முதலிய பெயர்கள் வடமொழிப் பெயர்களே. இப்பெயருள்ளவர்கள் இயற்றிய செய்யுள்கள் நற்றிணை, புறநானூறு முதலிய நூல்களில் தொகுக்கப்பட்டுள்ளன. எனவே, சங்ககாலத்தில் வடமொழிப் பெயர்கள் இருந்ததில்லை என்று கூறுவது தவறு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே, வடநாட்டவரான ஜைன மதத்தவரும், பௌத்த மதத்தவரும், வைதீக மதத்தவரும் தென்னாட்டிற்கு வந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள. அங்ஙனமிருக்க, கடைச்சங்க நூல்களில் சில வடமொழிப் பெயர்களும் காணப்படுவதில் வியப்பில்லை. ஆகவே, வடமொழிப் பெயர்கள் காணப்படுவது கொண்டு 'மணிமேகலை; காலத்தால் பிற்பட்ட நூலென்று கருதுவது தவறு. மணிமேகலை சிலப்பதிகார வரலாற்று நிகழ்ச்சிகள் சேர சோழ பாண்டியர் ஆட்சிக்காலத்தில் (கடைச்சங்க காலத்தில்) நிகழ்ந்தவை. அந்நிகழ்ச்சிகள் நடந்த அண்மைக் காலத்திலேயே இந்நூல்கள் இயற்றப்பட்டவை. ஆகவே இந்நூல்கள் கி.பி 200-க்குள் எழுதப்பட்டவை. கி.பி. 200-க்குப் பிறகு தமிழ்நாட்டைக் களபரர் பிடித்துக் கொண்டு ஏறத்தாழக் கி.பி 575 வரையில் அரசாண்டார்கள். ஆகவே கி.பி 200-க்குப் பின்னர் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதப்பட்டிருக்க முடியாது. கி.பி 200-க்குள்ளேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். |
Friday, January 20, 2012
பின்னிணைப்பு --5
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment