பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு
பௌத்தமதம் வடநாட்டினின்று தென்னாட்டிற்கு எந்தக் காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ்நாட்டில் எவ்வாறு பரவியது என்பதனை ஈண்டு ஆராய்வோம்.
இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாயிருந்தது சங்கம். 'சங்கம்' என்றால் பௌத்த பிக்ஷுக்களின் கூட்டம். பௌத்த மதத்தில் 'மும்மணி' என்று சொல்லப்படும் புத்த, தம்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதத்தின் உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின் அங்கத்தினரான தேரர்கள் நாடெங்குஞ் சென்று பௌத்த தர்மத்தை (கொள்கையை)ப் பரவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது.புத்தர் நிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின்பற்றியொழுகிய பிக்ஷுக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம் மதக்கொள்கையைப் பரவச் செய்தது போலவே, தமிழ்நாட்டிலும் வந்து நகரம், கிராமம் முதலிய எல்லாவிடங்களிலும் தமது மதக் கொள்கையைப் போதிப்பதையே தமது வாழ்நாட்களின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த கோவலன் மகள் மணிமேகலை என்பவள், பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம். அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையினால் அறிகிறோம். அவ்வறக்கோட்டம்,
"அரசன் ஆணையின் ஆயிழை அருளால்,
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்,
தீப்பிறப் புழந்தோர் செய் வினைப் பயத்தால்
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்
பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்,
அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்,
அட்டிற் சாலையும், அருந்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக"
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்,
தீப்பிறப் புழந்தோர் செய் வினைப் பயத்தால்
யாப்புடை நற்பிறப் பெய்தினர் போலப்
பொருள்புரி நெஞ்சிற் புலவோன் கோயிலும்,
அருள்புரி நெஞ்சத் தறவோர் பள்ளியும்,
அட்டிற் சாலையும், அருந்துநர் சாலையும்
கட்டுடைச் செல்வம் காப்புடைத் தாக"
இவையன்றியும், இந்த மதம் மேல்சாதி கீழ்சாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும் எக்குடியிற்பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம்மதக் கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையுந் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகிறது. இச்செய்திகளெல்லாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக் கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலயிரப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது.
No comments:
Post a Comment