Friday, January 20, 2012

தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

               தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

1. இளம் போதியார்


    இவர் பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம். இவர் தமிழ்மொழியில் வல்லவர். கடைச்சங்க காலத்தில் இருந்தவர். கி.பி. முதல் இல்லது இரண்டாவது நூற்றாண்டில் இவர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவர் இயற்றிய செய்யுள் ஒன்று நற்றினை என்னும் சங்க இலக்கியத்தில் 72 ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. அப்பாடல் இது:

பேணுப பேணார் பெரியோர் என்பது
நாணுத்தக் கன்றது காணுங் காலை!
உயிர்ஓர் அன்ன செயிர்தீர் நட்பின்
நினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி
தழிதக் கன்றால் தானே! கொண்கன்
யான்யாய் அஞ்சுவல்! எனினும் தானே
பிரிதல் சூழான்; மன்னே! இனியே,
கானல் ஆயம் அறியினும், ஆனா
தலர்வ தன்றுகொல் என்னும்! அதனால்
புலர்வது கொல் அவன் நட்(பு) எனா
அஞ்சுவல் தோழிஎன் நெஞ்சந் தானே!


2. அறவண அடிகள்

    இவரது வரலாறு மணிமேகலை என்னும் நூலினின்றும் அறியக்கிடக்கின்றது. இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் நெடுங்காலம் வாழ்ந்திருந்தவர். இவரது இளமையில் இவர் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கையில் உள்ள பாதபங்கய மலைவரையில் யாத்திரை செய்தவர் என்று தெரிகின்றது. பௌத்த தருமத்தை இவர் நன்கு கற்றவர். அதனோடு அதைப் பலருக்கும் போதித்து வந்தவர். இவர் நாவன்மை படைத்தவர் என்று தோன்றுகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தவர். கோவலன் கொலையுண்ட செய்திகேட்டு மாதவி தன் மகள் மணிமேகலையுடன் இவரது பள்ளியையடைந்து இவரிடம் பௌத்த தருமங் கேட்டுப் பஞ்சசீலத்தை மேற்கொண்டாள். சோழமன்னன் இராணி இராசமாதேவி மணிமேகலையைச் சிறைப்பிடித்து வைத்திருந்தபோது, அவளைச் சிறைவீடு செய்ய இவர் அரண்மனை சென்றார். இவரது வருகையைக் கண்ட இராசமாதேவி மிகுந்த வணக்கத்தோடு இவரை வரவேற்றாள் என்று கூறப்படுவதினின்றும், அரச குடும்பத்தினராலும் இவர் நன்கு மதிக்கப்பட்டிருந்தவர் என்பது விளங்கும். காவிரிப்பூம்பட்டினத்தில் கடற்பெருக்குண்டானபோது, இவர் அதனைவிட்டு மாதவியுடன் சேரநாட்டு வஞ்சிமாநகரம் சென்று, கடைநாள் வரையில் அங்கேயே தங்கியிருந்தார். பின்னர், அங்கு வந்த மணிமேகலைக்குப் பௌத்த தருமத்தை ஐயமறப் போதித்தார். நீண்டநாள் வாழ்ந்திருந்த இவர் காஞ்சிமாநகரத்திலே நிர்வாணம் (வீடுபேறு) பெற்றார். இவரது காலம் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியும் ஆகும்.

    இப்போது காஞ்சிபுரத்தில், 'அறப்பணஞ்சேரி' என்னும் பெயருடைய தெரு ஒன்று இருக்கிறதென்றும், அஃது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ என்றும், இந்த அறவணஞ்சேரி என்னும் தெருவில் அறவண அடிகள் வாழ்ந்திருத்தல் கூடுமென்றும், ஆனதுபற்றியே அவர் பெயரால் அறப்பணஞ்சேரி (சேரி - தெரு) என்று வழங்கப்பட்டதென்றும் கூறுவர் வித்வான் ராவ்சாகிப் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அறப்பணஞ்சேரி தெரு காஞ்சிபுரத்துக் காமாட்சியம்மன் கோயில் சந்நதித் தெருவின் அருகில் உள்ளது.

    அறவண அடிகளைப் பிற்காலத்தில் இருந்த தருமபாலர் என்னும் பௌத்தர் என்று கூறுவர் சிலர். தருமபாலர் என்பது அறவண அடிகள் என்பதன் நேர் மொழிபெயர்ப்பு என்று இவர் கருதுவதால், இவ்வாறு கூறுகின்றனர் போலும். அறவண அடிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இதனால் அறவண அடிகள் வேறு; தருமபாலர் வேறு என்பதை அறியலாம்.

    அறவண அடிகள் என்பவர் ஒருவர் உண்மையில் இருந்திலர் என்றும், மணிமேகலையில் கூறப்படுபவர் ஒரு கற்பனைப் பெரியார் என்றும் சிலர் கூறுவர். இவ்வாறு கூறுவதன் காரணம் யாதெனில், அறவண அடிகள் ஆகாய வழியாகச் சென்றார் என்பதும், மணிமேகலை, மாதவி முதலியவர்களின் பழம்பிறப்பில் இவர் அவர்களைக் கண்டதாக கூறப்படுவதுமே. இவை மானிட ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செய்கைகளாதலின், இவரைக் கற்பனைப் பெரியார் என்பர். இவ்வாறு கருதுவது தவறு என்று தோன்றுகிறது. இறந்தகால, நிகழ்கால, எதிர்கால நிகழ்ச்சிகளையறிதல், வேறிடங்களுக்கு வானத்தில் பறந்து செல்லுதல் முதலியவை பௌத்தமதக் கொள்கைப்படி பௌத்த தேரர்களுக்கு ஏற்பட்ட இலக்கணங்களாகும். இதனை 'சித்தி' என்பர். 'ரித்தி' எனினும் 'சித்தி' எனினும் ஒக்கும். பௌத்த மதத்தில் மட்டுமன்று: இந்து மதத்திலும் சங்கராச்சாரியார், சம்பந்தர் முதலிய பெரியார்களும் மானிட ஆற்றலுக்கப்பாற்பட்ட தெய்விகச் செயலைச் செய்தவர் என்று கூறப்படுகின்றனர். அது கொண்டு இவர்களையும் கற்பனைப் பெரியார் என்று கருதத்தகுமோ? இவற்றை அவ்வச்சமயச் கொள்கை என்று ஒதுக்கி விடுவோமாயின், அவர்களும் உண்மைப் பெரியாரே என்பது விளங்கும்.

3. மணிமேகலை

    யாம் அறிந்த வரையில், தமிழ்நாட்டில் பெயர் பெற்ற பௌத்தப் பிக்குணி இவள் ஒருத்தியே. இவளது வரலாறு மணிமேகலை நூலினால் அறியப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வத்திற்சிறந்த கோவலன் என்பவனுக்கும், அவனது காமக் கிழத்தி மாதவி என்பவளுக்கும் பிறந்தவள், மணிமேகலை. இக் குழந்தை செல்வமாக வளர்க்கப்பட்டுத் தக்க வயதடைந்த பின்னர், இசைக்கலை நாடகக்கலைகளைக் கற்றுத் தேர்ந்து மங்கைப்பருவம் அடைந்தது. இந் நங்கையின் கட்டழகினையும், இசைக்கலை, நாடகக்கலைகளில் அடைந்துள்ள தேர்ச்சியினையும் கண்டு, சோழ அரசன் மகன் உதயகுமரன் என்பவன் இவள்மேல் காதல் கொண்டான்.

    இவ்வாறிருக்க, மணிமேகலையின் தந்தை கோவலன் மதுரைமாநகரம் சென்று, ஆங்குப் பொய்க்குற்றஞ் சாற்றப் பெற்றுக் கொலையுண்டிறந்தான். கோவலன் இறந்த கொடுஞ் செய்தியைக் கேட்டு மாதவி மனம் நொந்து, உலகினை வெறுத்துத் தன் மகள் மணிமேகலையுடன் அறவண அடிகள் என்னும் பௌத்த பிக்ஷு இருந்த பௌத்தப் பள்ளியில் சரணடைந்து, பௌத்த சீலத்தை மேற்கொண்டாள். மணிமேகலையை நாடகக் கணிகை வாழ்க்கையில் புகுத்த அவள் பாட்டி சித்திராபதி என்பவள் கடுமையாக முயன்றாள். ஆயினும், மணிமேகலை அந்த வாழ்க்கையில் புக இசையவில்லை. அரசன் மகன் உதயகுமரனும் அவளைத் தன் காமக்கிழத்தியாக்க முயன்றான். அதற்கும் அவள் உடன்படவில்லை. ஆனாலும், அவன் அவளை விடாமல் அவளிடம் சென்று, அடிக்கடி பிக்குணிக் கோலத்தை விட்டுவிடும்படி வேண்டினான். மணிமேகலை இலங்கையின் வடபால் உள்ள மணிபல்லவம் சென்று, அங்கிருந்த பாதபீடிகையைத் தொழுது, மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் வந்தாள். அதுமுதல் அவள் உலகவறவி என்னும் அம்பலத்தில் சென்று, தான் ஐயமேற்று வந்த உணவை அங்கிருந்த கூனர், குருடர், முடவர் முதலிய எளியவருக்குக் கொடுத்து, அவர்களது பசிப்பிணியை நீக்கி வந்தாள். இந்தச் செய்தியைக் கேட்ட சோழமன்னன் மணிமேகலையை அழைத்து, அவளது பொதுநல ஊழியத்தைப் பாராட்டி, அவளுக்கு வேண்டிய வரத்தைக் கேட்கக் சென்னான். அவள் சிறைச்சாலையை அறச்சாலையாக மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்ட, அவ்வாறே அரசன் செய்தான்.

    காயசண்டிகை என்பவள் ஒருத்தி வடநாட்டினின்றும் காவிரிப்பூம்பட்டினம் வந்து பிச்சையேற்றுண்டு வாழ்ந்து வந்தாள். அவள் மணிமேகலையைப் போன்ற உருவம் உடையவள். இந்தக் காயசண்டிகையைத் தேடிக்கொண்டு அவள் கணவன் வடநாட்டிலிருந்து அந் நகரத்திற்கு வந்தான். அப்போது, உலகவறவி என்னும் அம்பலத்தில் மணிமேகலையுடன் உதய குமரன் சொல்லாடிக் கொண்டிருந்தான். அவனுக்கு மணிமேகலை, நிலையாமையைக் கூறித் தன்மேல் அவனுக்குள்ள காதலை விட்டு விடும்படி கூறிக்கொண்டிருந்தாள். காயசண்டிகையைத் தேடிக் கொண்டு வந்த அவள் கணவன் மணிமேகலையைக் கண்டு அவள்தான் தன் மனைவியாகிய காயசண்டிகை என்று தவறாகக் கருதி, அவள் இன்னோர் ஆடவனோடு பேசுவதைக் கண்டு பொறானாய், உண்மையை அறிய அங்கு ஒரு மூலையில் பதுங்கியிருந்தான். உதயகுமரன் மணிமேகலையைவிட்டுச் சென்று, இரவு வந்தபோது மீண்டும் அவ்விடம் வந்தான். உருவ ஒற்றுமையினால் தன் மனைவி என்று தவறாகக்கருதியிருந்தவனாதலின், காயசண்டிகையின் கணவன், இரவில் வந்த உதயகுமரனை வாளால் வெட்டி வீழ்த்தினான். தன் மனைவி என்று மணிமேகலையைக் கருதியதும், உதய குமரன் அரசன் மகன் என்று அறியாததும் இந்நிகழ்ச்சிக்குக் காரணம்.

    தவறுதலால் ஏற்பட்ட இந்த நிகழ்ச்சியைக் பொழுது விடிந்த பின்னர் மக்கள் அறிந்தனர். உலகவறவியில் இருந்த முனிவர்கள் இதனை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் உண்மை அறிந்து மணிமேகலையை நகரமக்கள் துன்புறுத்தா வண்ணம் காவலில் வைத்தான். இராசமா தேவி தன் மகன் இறந்தது மணிமேகலையினால் என்று கருதி, அவளுக்கு ஊறு செய்ய நினைத்து, அவளைக் காவலினின்று தன்னிடம் அழைத்துக் கொண்டு, அவளுக்குப் பற்பல துன்பங்களைச் செய்து பார்த்தாள்; ஒழுக்கவீனமுள்ளவள் என்று அலர் தூற்றவும் முயன்றாள். இவற்றிற்கெல்லாம் மணிமேகலை உட்படாமல் தன் நிலையைக் காத்துக் கொண்டாள். இவளது உண்மை நிலையை அறிந்த பின்னர், இராசமாதேவி தன் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டு மணிமேகலையைச் சிறைவிட்டாள்.

    பின்னர், மணிமேகலை, தான் அந்நகரில் இருந்தால் அரசகுமாரன் இறப்பதற்குக் காரணமாயிருந்தவள் என்று ஊரார் குறை கூறுவராதலின், அந்நகரத்தில் இருக்க விரும்பாமல், அறவண அடிகள், மாதவி முதலியவர்களிடம் விடைபெற்றுச் சாவகநாடு (ஜாவா தீவு) சென்றாள். சின்னாள் சென்ற பின்னர், அங்கிருந்து சேரநாட்டின் தலைநகரமான வஞ்சிமாநகர் சென்று கன்ணகி கோட்டத்தை வணங்கி, அங்கு வாழ்ந்திருந்த பற்பல சமயத்தவரையுங் கண்டு, அவ்வவர்களின் சமய உண்மைகளை அறிந்தாள். அவற்றால் ஒன்றும் மனம்தேறாமல், கடைசியாகக் காஞ்சி மாநகருக்குச் சென்று, அங்கு வந்திருந்த அறவண அடிகளிடம் பௌத்த தரும மெய்ப்பொருளைக் கேட்டு உணர்ந்து, நெடுநாள் நோற்றுக் கடைசியில் ஆவ்வூரிலேயே காலமானாள்.

    மணிமேகலைக் காவியத் தலைவியாகிய மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் கூறப்படுகிறபடியால் அவள் உண்மையில் வாழ்ந்திருந்தவள் அல்லள், கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்று சில ஆராய்ச்சிக்காரர் மேலோட்டமாக ஆராய்ந்து கூறுகிறார்கள். காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து மணிமேகலை மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) ஆகாய வழியே பறந்துபோய்த் திரும்பி வந்தாள் என்றும், பிறகு கிழக்கே வெகு தூரத்திலிருக்கும் சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) ஆகாய வழியே பறந்து போய் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து மணிபல்லவத்துக்கு வந்தாள் என்றும் பின்னர் அங்கிருந்து ஆகாய வழியே பறந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்குப் போனாள் என்றும் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் இதன் உண்மை விளங்கும். மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதை ஆராயவேண்டும். மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல்.

    சங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். இதன் விரிவான ஆராய்ச்சியை இந்நூலாசிரியர் எழுதியுள்ள மணிமேகலையின் விண்வழிச் செலவு என்னும் கட்டுரையில் காண்க.

    மணிமேகலையின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி.

    மணிமேகலை வரலாற்றில் 'அமுத சுரபி' என்னும் சிறு பாத்திரத்தினின்று நினைத்தபோதெல்லாம் வேண்டிய அளவு உணவை உண்டாக்கிக் கொடுத்தல், பதுமைகள் பேசுதல், உருவம் மாறுதல் முதலிய சித்திகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றை உண்மை என்று கொள்ளாமல் சமயக் கொள்கை என்று ஒதுக்கிவிடுவர் பகுத்தறிவாளர்.

    'மணிமேகலை' என்னும் பெயருள்ள பௌத்த தெய்வம் ஒன்று உண்டு. அதன் வரலாற்றினை இந்நூல் இணைப்பில் காண்க.

4. சீத்தலைச் சாத்தனார்

    இவர் பௌத்தர் என்பதை இவரது பெயரே விளக்குகிறது. புத்தருக்குரிய பெயர்களுள் சாஸ்தா என்பதும் ஒன்று. இச்சொல் திரிந்து தமிழில் 'சாத்தன்' என்று வழங்குகின்றது 'சீத்தலை' என்னும் அடைமொழிகொண்டு சீ வழிந்தோடும் புண்ணுடைய தலையார் இவர் என்றும், பிறர் பாடும் பாட்டுக்களிற் குற்றங்கண்டால் அக்குற்றத்தைப் பொறாமல், எழுத்தாணியால் தமது தலையைக் குத்திக்கொள்ள அதனால் எப்போதும் இவர் தலையில் புண் இருந்து சீப்பிடித்திருந்தது என்றும் பொருந்தாக் கதைகளைக் கூறுவர். சீத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராகையால் இவருக்குச் 'சீத்தலை' என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று கூறுவார் கூற்றுப் பொருத்தமாகத் தோன்றுகிறது. மதுரைமாநகரில் இவர் கூலவாணிகஞ் செய்திருந்தமைபற்றி இவரை மதுரைக் கூலவாணிகர் சாத்தனார் என்றும் கூறுவர்.

    சீத்தலைச் சாத்தனார் என்று இவர் வழங்கப்படுதல் பற்றி, சீத்தலை என்னும் ஊரில் கிராமதேவதையாகக் கோயில் கொண்டிருந்த ஐயனாரின் பெயராகிய 'சாத்தன்' என்னும் பெயரே இவருக்குப் பெயராக அமைந்தது என்று வேறு சிலர் கூறுவர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை. ('சாத்தனார்' என்னும் இந்நூல் இணைப்புக் காண்க.)

    'சாத்தன்' என்னும் பெயர் தமிழ்நாட்டில் பண்டைக் காலத்தில் பெரும்பான்மையோருக்கு வழங்கிவந்தது. சங்ககாலப் புலவர்களில் மட்டும் இருபது பேருக்கு மேற்பட்டவர் சாத்தன் என்னும் பெயரைக் கொண்டவர்கள். ஆகவே, இவர்கள் ஒவ்வொருவரையும் வெவ்வேறு அடைமொழியுடன் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. நம் சாத்தனாருக்கும் அவ்வாறே 'சீத்தலை', 'மதுரைக் கூலவாணிகர்' என்னும் அடைமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    செந்தமிழ்ப் புலமை வாய்ந்த இவர் வாணிக முயற்சியை மேற்கொண்டிருந்தார்; எனவே, புலவர் என்கிற முறையிலும், வணிகர் என்கிற முறையிலும் இவர் பல நாடுகளைச் சுற்றிப் பார்த்தவராதல் வேண்டும். எங்ஙனமெனில், அக்காலத்து வழக்கப்படி, தமிழ்நாட்டுப் புலவர்கள் வறியராயினும் செல்வராயினும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று, அவ்வந்நாட்டிலுள்ள அறிஞரோடு கலந்து உறவாடுவது வழக்கம். வியாபாரிகளும் வாணிக சம்பந்தமாக அயல்நாடுகளுக்குச் சரக்குக் கொள்ளவும் விற்கவும் போவது இயற்கை. அன்றியும், பொதுவாக வாணிகர்களுக்குத்தான் பொதுப்படையான பல செய்திகள் அறிய முடியும். இவர் பல நாடுகளுக்குச் சென்றவர் என்பது இவர் இயற்றிய மணிமேகலையில் புகார், மதுரை, வஞ்சி, காஞ்சிபுரம் முதலிய ஊர்களைப் பற்றிக் கூறியிருக்கும் முறையினின்று செங்குட்டுவனுக்கும், அவன் தம்பியாராகிய இளங்கோவடிகளுக்கும் இவர் உற்ற நண்பர். இவர் காலத்தில் தான் கோவலன் பாண்டி நாட்டில் கொலையுண்டான். கோவலன், கண்ணகி இவர்களின் செய்தியை இவர் செங்குட்டுவனுக்கும் இளங்கோவடிகளுக்கும் சொல்ல, அதைக் கேட்ட செங்குட்டுவன் கண்ணகியின் கற்பினைப் பாராட்டி, அவளுக்குக் கோயில் அமைத்தான். இளங்கோ அடிகள் அவ்வரலாற்றினைச் சிலப்பதிகாரம் என்னும் காப்பியமாக இயற்றி, இவர் முன்னிலையில் அரங்கேற்றினார். சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக 'மணிமேகலை' என்னும் காப்பியத்தை இவர் இயற்றி, இளங்கோ அடிகள் முன்னர் அரங்கேற்றினார்.

    மணிமேகலையை இயற்றியது மன்றி, வேறு சில செய்யுள்களையும் இவர் இயற்றியிருக்கின்றார். அவை சங்கநூல்களுள் தொகுக்கப்பட்டுள்ளன. நற்றிணையில் மூன்று, குறுந்தொகையில் ஒன்று, புறநானூற்றில் ஒன்று, அகநானூற்றில் ஐந்து.

    சங்க நூல்களில் தொகுக்கப்பட்டுள்ள மெற்கண்ட செய்யுள்களின் நடையிலும், மணிமேகலையின் நடையிலும் வேறுபாடு காணப்படுவது கொண்டு இவ்விருவகைச் செய்யுளையும் இயற்றியவர் ஒருவர்தாமோ என்று சிலர் ஐயுறுவர். ஒரே புலவர், தாம் மேற்கொண்ட நோக்கத்தை நிறைவேற்ற வெவ்வேறு நடையில் செய்யுள் செய்யக் கூடுமன்றோ? ஆனால், ஒருவரே வெவ்வேறு நடையில் செய்யுள் இயற்றுவது தேர்ந்த புலவருக்குமட்டுந்தான் இயலும் என்பது உண்மையே. சீத்தலைச் சாத்தனார், புலவர் உலகம் ஏற்றுக்கொள்ளத்தக்க நடையில் அகப்பொருள், புறப்பொருள் பொதிந்த சில செய்யுள்களை இயற்றினார். ஆனால், புலவர் உலகத்துக்காக மட்டும் அன்று, பாமர உலகத்துக்காகவும் அவர் மணிமேகலையை இயற்றினார். ஆகலின், இது சிறிது எளிய நடையில் அமைக்கப்பட்டது. தமது மதக்கொள்கையை ஒருசிறு கூட்டத்துக்குமட்டும் தெரிவிப்பது தவறு என்பதும், எல்லாமக்களுக்கும் அதை அறிவிப்பதுதான் சிறந்தது என்பதும் பௌத்தர்கள் கருத்து. ஆகவே பௌத்தமதக் கொள்கை நிறைந்த மணிமேகலையை இவர் வேண்டுமென்றே சிறிது எளிய நடையில் இயற்றினார் என்று கருதுவதே பொருத்தமானது.
இவர் தாம் இயற்றி மணிமேகலையில்,

"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப்
பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்" (மணிமேகலை 22-060)
என்று திருக்குறளை மேர்கோள் காட்டித் திருவள்ளுவரைப் புகழ்கின்றபடியால், இவர் திருவள்ளுவருக்குப் பிற்காலத்தவராவர். இவரது காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி. 'மணிமேகலை நூலின் காலம்' என்னும் இணைப்புக் காண்க.

5. சங்கமித்திரர்

    இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர். இவரது சமயக்கொள்கை மகாயான பௌத்தம். இவர் சோழநாட்டில் வாழ்ந்திருந்த காலத்த்தில், இலங்கையில் கோதாபயன் என்றும், மேவாணாபயன் என்றும் பெயருள்ள அரசன் அரசாண்டு வந்தான். இந்த அரசன் கி.பி 302 முதல் 315 வரையில் அரசாண்டான். இவன் காலத்தில் இலங்கையின் தலைநகரான அநுராதபுரத்தில், அபடீகிரி விகாரையில் இருந்த அறுபது பிக்ஷுக்கள் வைதுல்ய மதத்தை மேற்கொண்டிருந்தபடியால் அவர்களை அரசன் அக்கரைக்கு, அஃதாவது தமிழ்நாட்டில், நாடு கடத்திவிட்டான். இலங்கை மன்னன் ஈனயான (தேரவாத) பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் ஆகையால், அதற்கு மாறான மகாயான பௌத்தமான வைதுல்ய மதத்தை தனது நாட்டில் பரவவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, அப் பிக்ஷுக்களைத் தமிழ்நாட்டிற்குத் துரத்திவிட்டான். நாடு கடத்தப்பட்ட பிக்ஷுக்கள் சோழ நாட்டிற்கு வந்தார்கள்.

    இவர்கள் நாடு கடத்தப்பட்டுச் சோழ நாட்டுக்கு வந்த காரணத்தையறிந்த சங்கமித்திரர், தாமும் வைதுல்ய (மகாயான) பௌத்த மதத்தைச் சேர்ந்தவராதலின், தமது மதத்தை இலங்கையில் நாட்டவேண்டும் என்னும் உறுதி கொண்டு இலங்கைக்குச் சென்றார். சென்று வைதுல்ய மதத்தைப் போதித்தார். இதையறிந்த ஈனயான பௌத்த பிக்ஷுக்கள் அரசனிடத்தில் முறையிட்டார்கள். அரசன் சங்கமித்திரரையும் ஈனயான பிக்ஷுக்களின் தலைவரான சங்கபாலன் என்பரையும் அழைத்துத் தனது முன்னிலையில் வாது செய்க என்றும், யார் வாதில் வெற்றி பெறுகிறாரோ அவரது மதந்தான் சிறந்தது என்றும் கூறினான். இருவருக்கும் அரசன் அவைக்களத்தில் வாதப்போர் நிகழ்ந்தது. வாதத்தில் தமிழரான சங்கமித்திரரே வெற்றி பெற்றார். இலங்கைவேந்தன் சங்கமித்திரரின் ஆழ்ந்த கல்வியறிவைப் பாராட்டி இவரை ஆதரித்தான். ஆதரித்ததுமட்டும் அன்றித் தமது பிள்ளைகளான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்னும் இருவருக்கும் கல்வி கற்பிக்க இவரை ஆசிரியராக நியமித்தான். சங்கமித்திரர், இவ்விருவரில் இளையவனான மகாசேனனிடத்தில் அதிக அன்பு பாராட்டினபடியால், முதல்வனான ஜேட்ட திஸ்ஸன் இவரிடம் பகைமை பாராட்டி வந்தான். இவர், அரசனிடம் பெற்றிருந்த செல்வாக்கைக் கொண்டு வைதுல்ய மதத்தை இலங்கையில் பரப்ப முயற்சி செய்தார்.

    இவ்வாறிருக்க மேகவர்ணாபயன் காலஞ்சென்றான். அரசுரிமையை மூத்த மகனான ஜேட்டதிஸ்ஸன் (கி.பி. 323-33) ஏற்று அரசுகட்டில் ஏறினான். ஏறியவுடன் மந்திரிகளில் சிலரைக் கொலைசெய்துவிட்டான். இதைக் கண்ட சங்கமித்திரர் தம் மாணவனான இவன் ஏற்கெனவே தம்மிடம் பகைமை பாராட்டி வந்தவனாதலின் தம்மையும் கொன்று விடுவானோ என்று அஞ்சிச் சோழ நாட்டிற்கு வந்துவிட்டார் பிறகு பத்து ஆண்டு வரையில் இலங்கை செல்லவே இல்லை. பத்து ஆண்டு கழித்த பின்னர், ஜேட்டதிஸ்ஸன் இறந்துவிட்டான். அப்போது அரசுரிமையை இவரின் அன்புக்குரிய மாணவனான மகாசேனன் (கி.பி. 334-361) மேற்கொண்டான். இச்செய்தி அறிந்த சங்கமித்திரர் இலங்கைக்குச் சென்று, தம் மாணவனாகிய அரசனுக்குத் தமது கையினாலேயெ முடிசூட்டினார். அது முதல் இலங்கையில் தங்கி மீண்டும் தமது வைதுல்ய மதத்தைப் பரப்ப முயற்சி செய்தார்.

    மகாவிகாரை என்னும் பௌத்த பள்ளியில் இருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்மையான பௌத்த மதத்தைப் போதிக்க வில்லை என்று இவர் அரசனிடம் குற்றம் சாற்றினார். அரசன் இவர் சொல்வதைத் தவறாதவன் ஆகையால், மகாவிகாரையில் வாழும் பிக்ஷுக்களுக்கு நகரமக்கள் உணவு கொடுக்கக்கூடாதென்றும், மீறிக் கொடுப்பவர்களுக்கு நூறு பொன் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்டளையிட்டான். இதன் காரணமாக மாகாவிகாரையிலிருந்த ஈனயான பிக்ஷுக்கள் உண்ண உணவு கிடைக்கப் பெறாமல் நகரத்தைவிட்டு இலங்கையின் தென்பகுதிக்குப் போய்விட்டார்கள். போய்விடவே 'மகாவிகாரைப் பள்ளி உரியவரின்றிக் கிடக்கிறபடியால், அஃது அரசனுக்குரிய பொருளாய் விட்டது' என்று சங்கமித்திரர் அரசனுக்குத் தெரிவிக்க, அரசன் அதனை இவரிடத்திலே ஒப்படைத்தான். சங்கமித்திரர் அந்த விகாரையை இடித்து, அப்பொருள்களைக் கொண்டு தமது கொள்கையைச் சேர்ந்த பிக்ஷுக்கள் வாழும் அபயகிரி விகாரையைக் புதுப்பித்துப் பெரியதாகக் கட்டினார். இச்செய்கைக்குச் சோணன் என்னும் மந்திரியும் துணையாயிருந்தான். இவற்றை யெல்லாம் அறிந்த அரசனுடைய மனைவியர்களுள் ஒருத்தி அவனால் அதிகமாக காதலிக்கப்பட்டவள் - இலங்கைத்தீவின் பழைய மதமாகிய ஈனயான பௌத்த மதத்தைப் பின்பற்றி நடப்பவளாதலின், அபயகிரி விகாரையிலிருந்த பிக்ஷுக்களைத் துரத்திவிட்டு, அந்த விகாரையையும் இடித்தொழித்த சங்கமித்திரரையும் அவருக்குத் துணையாயிருந்த சோணனையும் கொன்றுவிடும்படிச் சிலரை ஏவினாள். அவர்கள் மந்திரியையும் சங்கமித்திரரையும் கொலைசெய்துவிட்டார்கள். இந்தச் செய்திகள் மகாவம்சம் 36,37 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

    சங்கமித்திரர் வைதுல்ய மதத்தை நன்கு கற்று, அதன்வழி ஒழுகியதோடு, அந்த மதத்தைச் சிங்களத்தீவிலும் பரவச் செய்ய முயன்றார். பௌத்த மதக்கொள்கைகளை நன்கு அறிந்தவர். இவரது வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இவர் ஏதேனும் நூல் இயற்றியிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் இவர் வாழ்ந்திருந்தவர்.

    சைவ சமய குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இலங்கை வேந்தன் ஒருவனைச் சைவ சமயத்தில் புகச் செய்தார் என்னும் வரலாறும், சங்கமித்திரர் இலங்கை மன்னனை வைதுல்ய மதத்தில் புகச் செய்த வரலாறும் ஒத்திருத்தலின், சங்கமித்திரர் என்று மகாவம்சம் கூறுவது மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்று திரு. கே. ஜி. சேஷையர் என்பவர் ஒரு திங்கள் வெளியீட்டில் எழுதியிருக்கிறார்; (Tamilian Antiquary Vol I. No. 4 P 54) இவர் கருத்தையே உண்மை எனக் கொண்டு ஸ்மித் என்னும் சரித்திர ஆசிரியரும் எழுதியிருக்கிறார். அவர், இலங்கை வேந்தனை, மாணிக்கவாசகர் சைவசமயத்தில் சேர்த்தார் என்பதை ஆதாரமாகக் கொண்டு, அந்த அரசன் மகாவம்சத்தில் கூறப்பட்ட கோதாபயனாக இருக்ககூடும் என்றும், மகாவம்ச ஆசிரியர் சைவராகிய மாணிக்க வாசகரைப் புத்தபிக்ஷு சங்கமித்திரர் என்று தவறாக எழுதியிருக்கக்கூடும் என்றும் கூறுகிறார். இவ்விருவர் கருத்துக்களும் தவறு என்பது எமது கருத்து. ஏனென்றால், மாணிக்கவாசகர் இலங்கைக்குச் சென்று இலங்கை மன்னனைச் சைவ சமயத்தில் சேர்த்ததாக அவர் வரலாற்றில் காணப்படவில்லை. இலங்கை மன்னன் சிதம்பரத்திற்கு வந்தபோது அவனை மதம் மாற்றியதாக சொல்லப்பட்டிருக்கிறது. சங்கமித்திரரோ நேரே இலங்கைக்குச் சென்று அந்த நாட்டரசனை மதம் மாறச் செய்தார். அன்றியும், சங்கமித்திரர் இலங்கையில் கொல்லப்பட்டிறந்தார். மாணிக்கவாசகரோ சிதம்பரத்தில் சிவகதியடைந்தார். மாணிக்கவாசகர் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். சங்கமித்திரர் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இக்காரணங்களினால் சங்கமித்திரரும் மாணிக்கவாசகரும் ஒருவரே என்று கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை.

6. நாதகுத்தனார்

    இப்பெயர் "நாதகுப்தனார்" என்பதன் திரிபு போலும். இவர் குண்டலகேசி என்னும் காப்பியத்தைத் தமிழில் இயற்றியவர். இவர் இந்தக் காவியத்தின் ஆசிரியர் என்பது, நீலகேசி (மொக்கல வாதச் சருக்கம் 78 ஆம் பாட்டின்) உரையில் 'புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட வினைய வுடம்பு' என்னும் அடியை மேற்கோள்காட்டி, இதனை 'நாதகுத்தனார் வாக்கு' என்று குறிப்பிட்டிருப்பதிலிருந்தும் அறியப்படும். மேற்கோள் காட்டப்பட்ட இப்பகுதி குண்டலகேசிச் செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டது. அச்செய்யுள் இது:

"எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல்
தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி
நுனைய புழுக்குலந் தம்மால் நுகரவும் வாழவும் பட்ட
இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னலு மாமோ."
    நாதகுத்தனாரை நாகசேனர் என்று கஸ்ஸபதேரர் கூறுகிறார். பௌத்தராகிய கஸ்ஸபதேரர் சோழநாட்டுத் தமிழர். இவர் திரிபிடகங்களில் ஒன்றான விநய பிடகத்துக்குப் பாலிமொழியில் சில உரைநூல்களை எழுதினார். அவ்வுரைகளில் ஒன்று விமதி விநோதனீ என்பது. இந்த நூலில் இவர் குண்டலகேசி நூலாசிரியரின் பெயர் நாகசேனர் என்று கூறுகிறார். தமிழ்நாட்டில் குண்டலகேசி என்னும் செய்யுள் நூலை நாகசேனர் என்பவர் பிறமதங்களைக் கண்டிப்பதற்காக எழுதினார் என்று கூறுகிறார். இவர் கூறுகிற பாலிமொழி வாசம் இது:

"புப்பேகிர இம்ஸ்மிம் தமிளரட்டே கொஸி பின்னலத்திகோ
நாகஸேனோ நாம தேரோ குண்டல கேஸி வத்தும் பரவாத
மதன நயதஸ்ஸனத்தம் கப்பரூபேன கரேந்தோ."
இதனால் நாதகுத்தனாரருக்கு நாகசேனர் என்னும் பெயரும் இருந்தது என்று தெரிகிறது.

    நாதகுத்தனாரைப் பற்றிய வரலாறு வேறொன்றும் தெரியவில்லை; 'குண்டலகேசி' என்னும் பௌத்தப் பிக்குணி ஒருத்தி, வடநாட்டில் இருந்த 'ஆவணம்' என்னும் ஊரில் 'நாதகுத்தனார்' என்னும் ஆருகத சமயத்தவரை வாதில் வென்றதாக நீலகேசி உரையினால் தெரிகிறது. ஆருகதராகிய அந்த நாதகுத்தனார் வேறு. குண்டலகேசியின் ஆசிரியரும் பௌத்தருமாகிய இந்த நாதகுத்தனார் வேறு.

    நீலகேசி என்னும் ஜைன நூல் கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதென்று கூறப்படுவதால், குண்டலகேசியும் பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாதல் வேண்டும். ஏனென்றால், குண்டலகேசியை மறுப்பதற்காகவே நீலகேசி இயற்றப்பட்டதென்பது வரலாறு. ஆகவே, குண்டலகேசியின் ஆசிரியராகிய நாதகுத்தனாரும்
கி.பி. பத்தம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராதல் வேண்டும்.

7. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்

    இவர் பௌத்தர்களால் பெரிதும் போற்றப்படுகிறார். சோழநாட்டில் பிறந்த தமிழராகிய இவர், கவீரபட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்), உரகபுரம் (உறையூர்), பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான இடங்களிலும், இலங்கையிலே அநுராதபுரத்தில் இருந்த மகா விகாரையிலும் வசித்திருந்தார். காவிரிப்பூம்பட்டினத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர், தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல், சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா என்றும் கூறுவர். மற்றொரு மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். களம்ப (களபர) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இலங்கையிலே மகாவிகாரையில் இருந்த மகாதேரர் என்னும் சங்கபாலருடைய வேண்டுகோளின்படி உத்தரவினிச்சயம் என்னும் நூலை இவர் இயற்றினார். ரூபாரூபவிபாகம் என்னும் நூலையும் இயற்றியிருக்கிறார். ஜினாலங்காரம் என்னும் நூலையும் இயற்றியதாக கூறுவர். இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை.

    ஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள பௌத்தருடைய வேதமாகிய திரிபிடகம் முதலிய நூல்களைத் துறைபோக ஓதியுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவரது நூலுக்குப் பிற்காலத்தில் உரை எழுதிய ஒருவர் இவரைப்பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. "மாதிஸாபி கவி ஹொந்தி, புத்ததத்தே திலங்கதே." புத்தத்தர் காலஞ்சென்று விட்டபடியால், நாமுங்கூடக் கவிவாணர் என்று கூறிக்கொள்ளலாம் என்பது பொருள்.

    இவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

    திரிபிடகத்தின் பல பகுதிகளுக்கு உரை எழுதிய புத்தகோஷ மகாசாரியரும், புத்ததத்த தேரரும் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும், ஒருவரையொருவர் கண்டு உரையாடினார்கள் என்றும், பத்தகோஷரை விட புத்ததத்தர் வயதில் மூத்தவர் என்றும் நூல்கள் கூறுகின்றன.

    (புத்ததத்தரைப் பற்றி சில செய்திகளை, சான்றுகள் ஆதாரங்கள் இல்லாமலே தமது மனம் போனவாறு ஒருவர் எழுதியிருக்கிறார் (Buddhadatha by S. Jambunathan 1928). இவர் கூறும் சில செய்திகளாவன: புத்ததத்தர் அச்சுதவிக்கந்த அரசனுக்கு மந்திரியாக இருந்தாராம். இளந்தத்தர் என்று புத்ததத்தருக்குத் தமிழ்நாட்டுப் பௌத்தர் வேறுபெயர் இட்டு வழங்கினார்களாம். உரகபுரம், அஃதாவது இப்போதுள்ள உறையூர், காவிரிக் கரையில் ஒரு துறைமுகப்பட்டினமாக இருந்ததாம். வேங்கிநாட்டு அரசர்களாலும் மிலாநாட்டுச் சிற்றரசராலும் புத்ததத்தர் ஆதரிக்கப்பட்டாராம். இவ்வாறு எல்லாம் இவர், ஆதாரம் காட்டாமல், காரணம் கூறாமல், ஆராய்ச்சித் துறையைச் சிறிதும் பின்பற்றாமல் மனம் போன போக்காக எழுதி வெளுத்துக்கட்டியிருக்கிறார். புறநானூற்றில் கூறப்படுகிற இளந்தத்தன் என்னும் தமிழ் புலவரை மனதில் எண்ணிக்கொண்டு, அதை வெளிப்படையாகக் கூறாமல், அவ்விளந்தத்தரையும் நம் புத்ததத்தரையும் முடிச்சுப் போடுகிறார். இவ்வுரைகளை ஆறிவுடையோர் ஏற்கமாட்டார்.)

    இவர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். எப்படி என்றால், புத்தகோஷர் வினய பிடகத்துக்குத் தாம் எழுதிய ஸமந்தபாஸாதிகா என்னும் உரையில், இலங்கையரசன் ஸ்ரீநிவாசனுடைய 20 ஆம் ஆட்சி ஆண்டில் அவ்வுரையைத் தொடங்கி 21 ஆம் ஆண்டில் முடித்ததாகக் கூறுகிறார். மகாவம்சம் என்னும் நூலில், புத்தகோஷர், இலங்கையை யாண்ட மகாநாமன் என்னும் அரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து உரை எழுதினார் என்று கூறப்பட்டுள்ளது. புத்தகோஷர், தாம் எழுதிய தம்மபதாட்டகதா என்னும் உரையில், சிறீகுட்ட என்னும் இலங்கை மன்னன் கட்டிய ஒரு விகாரையில் தங்கியிருந்து அவ்வுரையை எழுதியதாகக் கூறுகிறார். ஸ்ரீநிவாசன், மகாநாமன், சிறீகுட்டன் என்னும் பெயர்கள் ஒரே அரசனைக் குறிக்கின்றன. இந்த அரசன் இலங்கையை, கி.பி. 409 முதல் 430 வரையில் அரசாண்டான். எனவே, இவர் காலத்தில் இருந்த புத்தகோஷரும், புத்தகோஷருக்குச் சற்று வயதில் மூத்தவரான புத்ததத்தரும் இதே காலத்தில் இருந்தவர் ஆவர்.

    மேலும், பேர்பெற்ற புத்தகோஷர் என்னும் பௌத்த ஆசிரியரும் இவரும் தற்செயலாக ஒருவரை ஒருவர் கண்டு உரையாடியதாகக் கூறப்படுவதாலும், புத்தகோஷர் முதலாவது குமாரகுப்தன் என்னும் அரசன் காலத்தில் வாழ்ந்திருந்தவ ராகையாலும், சோழநாட்டை ஆண்ட அச்சுத நாராயணன், அல்லது அச்சுதவிக்கந்தன் என்னும் களபர (களம்ப) அரசனும் குமார குப்தனும் ஒரே காலத்தவராகையாலும், புத்ததத்த தேரரை அச்சுத விக்கந்தன் ஆதரித்தவனாகையாலும், இவர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் ஆவர்.

8. கணதாசர்

    கணதாசர் என்பது, கண்ண (கிருஷ்ண) தாசர் என்பதன் திரிபு. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்தார் என்றும், அவ்விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் அபிதம்மாவதாரம், மதுராத்த விலாசினீ (புத்த வம்சம் என்னும் நூலின் உரை) என்னும் நூல்களை இயற்றியதாகவும் ஆசாரிய புத்ததத்தர் கூறுகிறார். இந்தக் கணதாசர் வைணவராக இருக்கவேண்டும் என்று சிலர் கருதுகிறார்கள். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. பௌத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கு விகாரையைக் கட்டியபடியால் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் ஆவர். பூஜாவலீ என்னும் சிங்கள நூல், இவரை ஆமாத்தியர் (அமைச்சர்) என்று கூறுகிறது. "மிகவும் ஞானமுள்ளவரான புத்ததத்தர் என்னும் பெயரையுடைய அர்த்தகதாசாரியர், வினயவினிச்சயம், புத்தவம் சாட்டகதமா, அபிதம்மாவதாரம் என்னும் பௌத்த தர்ம நூல்களைச் சுமதி என்னும் தேரருடையவும், கணதாசர் என்னும் ஆமாத்தியருடையவும் வேண்டுகோளின்படி எழுதினார்." என்று அந்நூல் கூறுகிறது. ஆகவே, இவர் சோழ அரசனுடைய மந்திரி என்று தெரிகிறது. களம்ப (களபர) குலத்தைச் சேர்ந்த அச்சுத விக்கநந்தன் என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் தாம் வினய வினிச்சயம் என்னும் நூலை எழுதி முடித்ததாகப் புத்ததத்தர் கூறுகிறபடியினாலே அவ்வரசனுடைய மந்திரியாக இவர் இருந்தார் என்று கருதலாம்.

9. வேணுதாசர்

    இது விஷ்ணுதாசர் என்பதன் மரூஉ. இவர் சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில், ஒரு பௌத்த விகாரையைக் கட்டியிருந்ததாகவும், அவ் விகாரையில் தங்கியிருந்தபோது, ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வினயவினிச்சயம் என்னும் நூலை எழுதியதாகவும் அவர் அந்நூலில் கூறுகிறார். இவரைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்த வேணுதாசரும், மேலே கூறிய கணதாசரும் ஒருவரே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், ஆசாரிய புத்ததத்தர் இவ்விருவரும் ஒருவரே என்று யாண்டும் கூறவில்லை. ஆகையால் இருவரும் வேறு வேறு ஆட்கள் என்பது எமது கருத்து.

    கணதாசர், வேணுதாசர் என்னும் பெயர்கள் ஒருவரையே குறிக்கின்றன என்றும், இந்த விஷ்ணுதாசர், ஸ்கந்தபுராணம் Chap. (XXVI - XXVII) விஷ்ணுகாண்டம், கார்த்திகமாச மகாத்மியத்தில் கூறப்படுகிற விஷ்ணு தாசரே என்றும் பரூவா என்பவர் கூறுகிறார். விஷ்ணு புராணம் 10ஆம் அதிகாரத்தில் கூறப்படுகிற விஷ்ணுதாசர்தான் இந்த வேணுதாசர் என்று ஜம்புநாதன் அவர்கள் கூறுகிறார். இவர்கள் கூற்றையும் எம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அறிஞர்கள் ஆராய்ந்து காண்க.

10. சுமதி, ஜோதிபாலர்

    கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவர்கள். பேர்பெற்ற புத்தகோஷாசாரியர், தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, இவர்களுடன் வசித்திருந்தார். காஞ்சிபுரத்தில் புத்தகோஷர் இவர்களுடன் தங்கியிருந்தபோது, இவர்கள் புத்தகோஷரை இலங்கைக்குச் சென்று அங்குள்ள திரிபிடக உரை நூல்களைப் படிக்கத் தூண்டினார்கள். இதனை,
"ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன
காஞ்சிபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன"
என்று புத்தகோஷர் தாம் எழுதிய மனோரத பூரணி என்னும் நூலில் கூறுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோஷர், ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார். இவர்களைப்பற்றி வேறு ஒன்றும் தெரியவில்லை.

11. புத்தமித்திரர்

இவர் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டில் இருந்தவர். 'வீரசோழியம்' என்னும் இலக்கண நூலை இயற்றிய பௌத்தராகிய புத்தமித்திரருக்கு முன்பு இருந்தவர். இவர் மயூரபட்டிணத்தில் (மாயவரம்?) ஒரு பௌத்த விகாரையில் இருந்தபோது, பேர்பெற்ற புத்தகோஷாசாரியர் வந்து இவருடன் சிலகாலம் தங்கியிருந்தார். இவர் வேண்டுகோளின்படி திரிபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாயத்திற்குப் புத்தகோஷ ஆசாரியர் பபஞ்சசூடனீ என்னும் உரையை எழுதினார். இவரைப் பற்றி வேறு செய்தி ஒன்றும் தெரியவில்லை.

12. போதி தருமர்

இவர் காஞ்சிபுரத்தை அரசாண்ட ஓர் அரசனுடைய குமாரர். இவர் 'தியான மார்க்கம்' என்னும் பௌத்த மதப்பிரிவைச் சேர்ந்தவர். சீன தேசம் சென்று, அங்கு தமது கொள்கையைப் போதித்து வந்தார். இவரது கொள்கை சங்கரரின் அத்வைத மதக் கொள்கையைப் போன்றது. இவர் கி.பி 520 இல் சீன தேசத்துக் காண்டன் பட்டினத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். வேறு சிலர் கி.பி 525 இல் சீன தேசம் சென்றதாகக் கூறுவர். அக்காலத்தில் சீனதேசத்தை ஆண்டுவந்த லியாங் குடும்பத்தைச் சேர்ந்த ஊ-டி (Wu-Ti) என்னும் அரசன் அவைக்களத்தில் இவர் தமது தியான மார்க்கத்தைப் போதித்தார். இந்த அரசன் கி.பி 520 முதல் 549 வரை அரசாண்டவன். பௌத்த மதத்தில் மிகுந்த பற்றுள்ளவன். பின்னர் இந்த அரசனுக்கும் இவருக்கும் மனத்தாங்கல் ஏற்பட, சீனதேசத்தின் வடபகுதியிற் சென்று இவர் தமது கொள்கையைப் பரப்பியதாகக் கூறுவர். இவருக்குப் பிறகு, இவர் போதித்த மதம் சீன தேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சிறப்புற்றது. இவரது தியான மார்க்கத்திற்கு ஜப்பானியர் ஸென் (Zen) மதம் என்றும், சீனர் சான் (Ch'an) மதம் என்றும் பெயர் கூறுவர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றனர் இவரைச் சீனர் டா-மொ (Ta-mo) என்பர். இவரது மாணவர் சீனராகிய ஹூய் கெ-ஓ (Hui-K'o) என்பவர். போதி தருமர் சீன தேசத்தில் தமது மதத்தைப் போதித்த பிறகு, ஜப்பான் தேசத்துக்குச் சென்றதாகவும், அங்கு கடோக யாமா (Katoka Tama) என்னும் இடத்தில் ஷோடகு டாய்ஷி (Shotoku Taishi) என்பவர் இவரைக் கண்டு உரையாடியதாகவும் ஜப்பான் தேசத்து வரலாறு கூறுகின்றது. ஜப்பான் தேசத்திலும் சீன தேசத்திலும் இவருக்குக் கோவில்கள் உண்டு. இந்தக் கோயில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.

13. ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்)

    இவரது வரலாற்றைச் சீன யாத்திரிகரான யுவான் சுவாங் என்பவர் தமது யாத்திரைக் குறிப்பில் எழுதியிருக்கிறார். இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம் = சிம்மம் சிங்கம்) சீயமங்கலம் என்பது செங்கல்பட்டு ஜில்லா காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில், பிராமண குலத்தில் பிறந்து, வைதீக வேத நூல்களைக் கற்ற இவர் தேரவதா பௌத்த மதத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீபுத்திரி பிரிவைச் சேர்ந்து பௌத்தரானார். பிறகு, இவருக்கும் இவருடைய குருவுக்கும் கொள்கை மாறுபாடு ஏற்பட்டு, குருவைவிட்டுப் பிரிந்து, காஞ்சியிலிருந்து வடநாட்டிற்குச் சென்றார். அங்கே பேர்பெற்ற வசுபந்து என்பவரிடம் மகாயான பௌத்த நூல்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். பின்னர், நளாந்தைப் பல்கலைக்கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பற்பல தேசம் சென்று தர்க்கவாதம் செய்து, கடைசியாக மீண்டும் காஞ்சிபுரம் வந்து வாழ்ந்திருந்தார். காஞ்சிபுரம் திரும்புவதற்கு முன்னரே, ஒரிசா தேசத்தில் காலஞ்சென்றார் என்று சிலர் கூறுவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞான வாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க (அளவை) நூல்களை வடமொழியில் இயற்றியிருக்கின்றார். இவரது மாணவர் சங்கர சுவாமி என்பர். இன்னொரு மாணவர், நளாந்தைப் பல்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக விளங்கிய ஆசாரிய தரும பாலர் (கி.பி. 528-560) என்பவர். இவர் வசுபந்து என்பவரிடம் சில நூல்களைக் கற்றார் என்று கூறப்படுகின்றபடியால், இவர் வசுபந்து காலத்தவராவர். வசுபந்து, கி.பி. 420 முதல் 500 வரை இருந்தவர். சமுத்திர குப்தன் என்னும் அரசனால் ஆதரிக்கப்பட்டவர். அவன் சபையில் காளிதாசருடன் ஒருங்கிருந்தவர். எனவே, அவரின் மாணவராகிய திக்நாகர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வாழ்ந்திருந்தவராதல் வேண்டும்.

14. தருமபால ஆசிரியர் (கி.பி. 528-560)

    இவர் பதராதித்த விகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் இருந்த தருமபால ஆசாரியரின் வேறானவர். இவர் காஞ்சிபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது குமாரர். இவருக்குத் தக்க வயது வந்த காலத்தில் காஞ்சி மன்னன் இவருக்குத் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இவர் உலகத்தை வெறுத்தவராய், ஒருவருக்குஞ் சொல்லாமல் ஒரு பௌத்த மடத்தையடைந்து துறவு பூண்டு பௌத்த பிக்ஷு ஆனார். பின்னர் பல நாடுகளில் யாத்திரை செய்து தமது கல்வியை மேன்மேலும் வளர்த்துக் கொண்டார். இவர் கல்வியிலும் அறிவிலும் மேம்பட்டவர்.

    ஆசாரிய தருமபாலர் தின்னாக (திக்நாக) ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார் என்பர்.

    இவர் வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாது செய்து வெற்றிபெற்றார். அதனோடு அமையாமல், எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார். இதனால் இவர் புகழ் எங்கும் பரவியது. மற்றொருமுறை, நூறு ஈனயான பௌத்தர்களுடன் ஏழுநாள் வரையில் வாது செய்து வெற்றிப்பெற்றுத் தமது மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். மகாயான பௌத்தர்கள் இவரைத் தமது மதத்தை நிலைநிறுத்த வந்த சமயகுரவரெனப் போற்றினார்கள். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினமையால் , அக்காலத்தில் வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி, யாருக்கும் எளிதில் வாய்ப்பதொன்றன்று. துறைபோகக் கற்றுத் தேர்ந்த அறிஞர்களுக்குத்தான் அப் பதவி வாய்க்கும். இவருக்கு இத் தலைமைப் பதவி கொடுத்ததிலிருந்து அக்காலத்து மக்கள் இவரை எவ்வளவு உயர்வாக மதித்தனர் என்பது விளங்கும்.

    இவருக்குப் பிறகு அப் பல்கலைக் கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த சீலபத்திரர் என்பவர் இவரிடம் பயின்ற மாணவர்களில் தலைசிறந்தவர். தருமபாலர் நாளாந்தைக் கழகத்தின் தலைமையாசிரியராய் வீற்றிருந்த காலத்தில், தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாது செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீல பத்திரரை அப் பிராமணருடன் வாது செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். அந்தச் சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர். இந்தத் தருமபால ஆசாரியர் ஏதேனும் நூல் இயற்றினாரா என்பது தெரியவில்லை. யுவாங் சுவாங் தமது யாத்திரைக் குறிப்பில் தருமபால ஆசாரியரின் வரலாற்றைக் கூறியிருக்கிறார்.

    தருமபாலர் இளமையிலேயே, அதாவது தமது 32 ஆவது வயதில் கி.பி. 560 இல் காலமானார். இவருடைய தலைமாணவர் சீலபத்திரர் என்று சொன்னோம். இவரது மற்ற மாணவர்கள்: 1. விசேஷமித்திரர் - இவர் மைத்திரேயர் அருளிச்செய்த 'யோகசாரபூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 2. ஜின புத்திரர் - இவர் மைத்திரேயர் அருளிச்செய்த 'போதிசத்வபூமி' என்னும் நூலுக்கு உரை இயற்றியவர். 3. ஞானசுந்தரர் - இவர் இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தவர்.

    இந்தத் தருமபாலரும் மணிமேகலை நூலில் கூறப்படும் அறவண அடிகளும் ஒருவரே எனச் சிலர் கருதுகிறார்கள். 'அறவண அடிகள்' என்னும் தமிழ்ச் சொல்லின் மொழி பெயர்ப்பாகத் 'தருமபாலர்' என்னும் பெயர் காணப்படுவது கொண்டு இவ்வாறு கருதுகின்றனர் போலும். இந்தக் கருத்துத் தவறானதாகத் தோன்றுகின்றது. ஏனென்றால், அறவண அடிகள் காஞ்சிபுரத்தில் கடைசி நாட்களில் தங்கினதாகக் கூறபட்டபோதிலும், அவர் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும் கடைசி நாட்களையும் வட இந்தியாவில் கழித்தவர். அறவண அடிகள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தருமபாலரோ கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இருந்தவர். இந்தக் காரணங்களாலும் பிற சான்றுகளாலும் தருமபாலர் வேறு, அறவண அடிகள் வேறு என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது.

15. ஆசாரிய தருமபாலர்

    பாலிமொழியில் இவரைத் தம்மபால ஆசாரியர் என்பர். இவரது ஊரைப்பற்றி, "தம்பரட்டே வஸந்தேன நகரே தஞ்சாநாமகே" என்று கூறப்பட்டிருப்பதால், இவர் தாம்பிரபரணி ஆறு பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இந்தத் தஞ்சையைச் சோழநாட்டுத் தஞ்சாவூர் என்று தவறாகக் கருதுகிறார், திரு. பி.சி.லா அவர்கள். (Geography of Early Buddhism by B.C. Law) என்னை? சோழநாட்டுத் தஞ்சையில் காவேரி ஆறு பாய்கிறதேயன்றித் தாம்பிரபரணி பாயவில்லை. இப்பொழுது சோழநாட்டில் தஞ்சாவூர் இருப்பதுபோல, பண்டைகாலத்தில் பாண்டிய நாட்டிலும் ஒரு தஞ்சாவூர் இருந்தது. அந்தத் தஞ்சாவூரை ஒரு காலத்தில் அரசாண்ட வாணன் என்னும் சிற்றரசன்மேல் பாடப்பட்டதுதான் தஞ்சைவாணன் கோவை என்னும் சிறந்த தமிழ்நூல். ஆகவே, தம்மபால ஆசாரியாரின் ஊர் பாண்டிநாட்டுத் தஞ்சை என்று கொள்வது அமைவுடைத்து.

    தருமபால ஆசாரியார், பாலிமொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். பௌத்தமத உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையில் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளியில் தங்கியிருந்து, பிடக நூல்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த பழைய உரைகளையும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பழைய திராவிட உரைகளையும் கற்று ஆராய்ந்து சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு இவர் உரை எழுதியிருக்கிறார். சூத்திர பிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய சூட்டகநிகாய என்னும் பிரிவைச் சேர்ந்த  உதான, இதிவுத்தக, விமான வத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபீடக என்னும் பகுதிகளுக்குப் பரமார்த்ததீபனீ என்னும் உரையை எழுதியிருக்கிறார்.அன்றியும், பரமார்த்த மஞ்ஜூஸா, நெட்டிப கரணாத்தகதா என்னும் நூல்களையும் எழுதியிருக்கிறார். "இதிவுத்தோதான - சரியாபிடக - தேர - தேரீ - விமானவத்து - பேதவத்து - நெத்தியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோச ஆசாரிய தம்மபாலதரோ ஸீஹௌ தீபஸ்ஸ ஸமீபே டமிளாரட்டே படரதித்தமிஹி நிவாஸீத்தா ஸீஹௌதீபே ஏவஸங்கஹேத்வா வத்தபோ," என்று இவரைப் பற்றிச் சாசன வம்சம் என்னும் நூல் கூறுகிறது. இதன் கருத்து யாதெனில், இதிவுத்தக முதலாக நெத்தியட்டகதா இறுதியாகக் கூறப்பட்ட உரைநூல்களை ஆசாரிய தம்மபாலர் எழுதினார். இந்த ஆசாரிய தம்மபால தேரர் சிங்கள(இலங்கை)த் தீவுக்கு அருகில் தமிழ்நாட்டில் படரதித்த விகாரையில் வசித்தபோது எழுதினார் என்பதாம். இவர் பதினான்கு நூல்களை இயற்றியதாகக் கந்தவம்சம் என்னும் நூல் கூறுகிறது.

    இவர் எழுதிய உரைநூல்களில் இறுதியில், அந்நூல்களைப் படராதித்தை விகாரையில் எழுதியதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த விகாரை நாகப்பட்டினத்தில் அசோக சக்கரவர்த்தியால் கட்டப்பட்ட விகாரையில் இருந்து எழுதியதாக அந்நூல் இறுதியில் எழுதியிருக்கிறார்.

    அன்றியும், சூத்திரபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களுக்குப் புத்தகோஷ ஆசாரியார் எழுதிய உரைகளுக்கு இவர் அத்தகதா என்னும் உரையை எழுதினார். இதனை, "விஸூத்தி மக்கஸ்ஸ மஹாடீகம், தீகநியாயட்டகதாய டீகம், மஜ்ஜிமநிகா யட்டதாய டீகம்,ஸம்யுத்த நிகாயட்ட கதாய டீகம் ஸாதி இமாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸி" என்று சாசனவம்சம் என்னும் நூல் கூறுவது காண்க.

    இவர், புத்தகோஷாசாரியர் இருந்த கி.பி 5 ஆவது நூற்றாண்டுக்குப் பிற்காலத்தில் இருந்தவர். ஆனால், எப்பொழுது இருந்தார் என்பதைத் தெரிவிக்க யாதொரு சான்றும் கிடைக்க வில்லை.

15a. மாக்கோதை தம்மபாலர்

இலங்கை அநுராதபுரத்தில் உள்ள ஒரு சாசனம் மாக்கோதை தம்மபாலர் என்பவரைப்பற்றிக் கூறுகிறது. அச் சாசனச் செய்யுள் இது:

"போதி நிழலமர்ந்த புண்ணியன்போ லெவ்வுயிர்க்கும்
தீதி லருள்சுரக்கும் சிந்தையான் - ஓதி
வருதன்மங் குன்றாத மாதவன் மாக்கோதை
ஒருதன்ம பால னுளன்."
இவரைப்பற்றி வேறு ஒன்றும் அறியக்கூடவில்லை.

16. புத்தி நந்தி, சாரி புத்தர்

    இவ்விருவரும் சோழநாட்டில் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தவர். சைவ சமய ஆசாரியரகிய திருஞான சம்பந்தர் இந்த ஊர் வழியாகச் சங்கு, தாரை முதலான விருதுகளை ஊதி ஆரவாரம் செய்துகொண்டு வந்தபோது, பௌத்தர்கள் அவரைத் தடுத்து, வாதில் வென்ற பின்னரே வெற்றிச் சின்னங்கள் ஊதவேண்டும் என்று சொல்ல, அவரும் அதற்குச் சம்மதித்தார். பிறகு பௌத்தர்கள் புத்த நந்தியைத் தலைவராகக் கொண்டு வாது நிகழ்த்தியபோது, சம்பந்தருடன் இருந்த சம்பந்த சரணாலயர் என்பவர் இயற்றிய மாயையினால் இடிவிழுந்து புத்த நந்தி இறந்தார் என்று பெரியபுராணம் கூறுகின்றது. இதனைக் கண்ட பௌத்தர்கள், 'மந்திரவாதம் செய்யவேண்டா, சமயவாதம் செய்யுங்கள்,' என்று சொல்லிச் சாரி புத்தரைத் தலைவராகக் கொண்டு மீண்டும் வந்தார்கள். அவ்வாறே சாரி புத்தருக்கும் சம்பந்தருக்கும் சமய வாதம் நிகழ, அதில் சாரி புத்தர் தோல்வியுற்றார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. (சாரி புத்தர் காண்க.) இவர்களைப்பற்றி வேறு வரலாறு தெரியவில்லை. திருஞானசம்பந்தர் கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தவராதலால், இவர்களும் அந்த நூற்றாண்டிலிருந்தவராவர்.

17. வச்சிரபோதி (கி.பி. 661-730)

    இவர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த பொதிகைமலைக்கு அருகில் மலைநாட்டில் இருந்தவர். இவர் தந்தையார் ஓர் அரசனுக்கு மதபோதகராக இருந்தவர். இவர் கி.பி. 661 இல் பிறந்தார். வட இந்தியாவில் இருந்த பேர் பெற்ற நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் 26 வயது வரையில் கல்வி பயின்றார். பின்னர், 689 இல் கபிலவாஸ்து என்னும் நகரம் வரையில் யாத்திரை செய்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார். அக்காலத்தில் தொண்டைமண்டலத்தில் வற்கடம் உண்டாகி மக்கள் வருந்தினர். அந்த நாட்டினை அரசாண்ட நரசிம்ம போத்தவர்மன் என்னும் அரசன் வச்சிரபோதியின் மகிமையைக் கேள்விப்பட்டு, இவரை யணுகி, நாட்டுக்கு நேரிட்டுள்ள வருத்தத்தைப் போக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்ள, இவர் தெய்வத்தைப் போற்றி வேண்ட, மழைபெய்து நாடு செழிப்படைந்தது என்று இவரது வரலாறு கூறுகின்றது.

    இவர் தந்திரயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். தந்திரயான மதத்துக்கு 'வெச்சிரயானம்', 'மந்திரயானம்' என்னும் பெயர்களும் உண்டு. இவரது மாணவர் அமோகவச்சிரர் என்பவர். இவர் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த அபயகிரி விகாரையில் ஆறுதிங்கள் தங்கியிருந்தார். பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து சில நாள் தங்கியிருந்தார். பின்னர், தமது தந்திரயான பௌத்த மதத்தைச் சீன தேசத்தில் பரவச் செய்ய எண்ணங்கொண்டு சீனதேசம் செல்ல விரும்பினார். இவர் எண்ணத்தை அறிந்த காஞ்சி அரசன், கடல் யாத்திரையின் துன்பங்களை எடுத்துரைத்துப் போகவேண்டா என்று தடுத்தான். இவர் பிடிவாதமாக இருந்தபடியால், அரசன் இவரது சீனதேசப் பிரயாணத்துக்கு வேண்டும் உதவிகளைச் செய்து கொடுத்தான். 'மகாப் பிரஜ்ஞ பாரமிதை' என்னும் பௌத்த நுலின் பிரதி ஒன்றினையும் மற்றும் விலையுயர்ந்த பொருள்களையும் சீன அரசனுக்குக் கையுறையாக வழங்க, ஒரு தூதுவனையும் இவருடன் அரசன் அனுப்பினான்.

    வச்சிரபோதி தமது மாணவருடன் புறப்பட்டுச் சென்றார். கப்பல் அடுத்த நாள் இலங்கையை யடைந்தது. ஸ்ரீசைலன் என்னும் இலங்கை அரசன், இவரை வரவேற்றுத் தனது அரண்மனையில் ஒரு திங்கள் வரையில் இருக்கச் செய்தான். பின்னர், மரக்கலமேறிச் சீனநாட்டுக்குச் செல்லும் வழியில், சுமாத்ரா தீவில் இருந்த ஸ்ரீவிஜய தேசத்தில் ஐந்து திங்கள் தங்கினார். மீண்டும் புறப்பட்டு, கி.பி. 720 இல் சீனதேசம் சேர்ந்தார். ஆங்குத் தமது தந்திரயான பௌத்தக் கொள்கைகளைப் போதித்துத் தாந்திரிக பௌத்த நூல்களைச் சீனமொழியில் மொழி பெயர்த்தார். இவர் அந்நாட்டிலே கி.பி. 730 இல் காலமானார்.

18. புத்த மித்திரர்

    இவர் புத்த மித்திரனார் என்றும் கூறப்படுவார். இவரது பெயரைக்கொண்டே இவர் பௌத்தர் என்பதை அறியலாம்.

"மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன் மெய்த்தவத்தால்
தொக்கவன் யார்க்குந் தொடரஒண் ணாதவன் தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழ்உரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே."
என்னும் இவர் இயற்றிய வீரசோழியப் பாயிரச் செய்யுள் இதனை வலியுறுத்துகின்றது.

    இவர், சோழ நாட்டில், மாலைக்கூற்றத்தில், பொன் பற்றி என்ற ஊரில் சிற்றரசராய் விளங்கியவர். 'பொன் பற்றி' என்னும் ஊர் தஞ்சை ஜில்லா புதுக்கோட்டைத் தாலுகாவில் உள்ளது என்பர் சிலாசாசன ஆராய்ச்சியாலர் காலஞ்சென்ற திரு. வெங்கையா அவர்கள். தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கி தாலுகாவில் பொன்பேத்தி என்று இப்போது வழங்குகின்ற ஊர்தான் புத்தமித்திரனாரின் 'பொன்பற்றி' என்பர் வித்வான், ராவ்சாகிப். மு, இராகவ அய்யங்கார் அவர்கள்.

    புத்த மித்திரர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றியிருக்கிறார். வீரசோழன் அல்லது வீர ராசேந்திரன் என்னும் பெயருள்ள சோழ மன்னன் வேண்டுகோளின்படி இந்நூலை இவர் இயற்றி அவன் பெயரையே இதற்குச் சூட்டினார். இதனை,

'ஈண்டுநூல் கண்டான் எழில்மாலைக் கூற்றத்துப்
பூண்டபுகழ்ப் பொன்பற்றிக் காவலனே - மூண்டவரை
வெல்லும் படைத்தடக்கை வெற்றிபுணை வீரன்றன்
சொல்லின் படியே தொகுத்து'
என்னும் வெண்பாவினாலும்,
'நாமே வெழுத்துச்சொல் நற்பொருள் யாப்பலங் காரமெனும்
பாமேவு பஞ்ச அதிகார மாம்பரப் பைச்சுருக்கித்
தேமே வியதொங்கற் றேர்வீர சோழன் திருப்பெயரால்
பூமேல் உரைப்பன் வடநூல் மரபும் புகன்றுகொண்டே'
என்னும் கலித்துறைச் செய்யுளினாலும் அறியலாம்.

    இவரது காலம், இதுவரை ஆதரித்த வீரசோழன் காலமாகும். வீரசோழன் என்பவன் வீரராசேந்திரன் என்னும் பெயருடன் கி.பி 1063 முதல் 1070 வரையில் சோழநாட்டை அரசாண்டவன்; 'வீரசோள கரிகால சோள ஸ்ரீ வீரராஜேந்திர தேவ ராஜகேசரி வன்ம பெருமானடிகள்' என்று சாசனத்தில் புகழப்படுபவன்; 'எல்லா உலகு மேவிய வெண்குடைச் செம்பியன் வீரராசேந்திரன்' என்று புத்த மித்திரனாரால் வீரசோழியத்தில் புகழப்படுபவன். கிருஷ்ண, துங்கபத்திரை என்னும் இரண்டு ஆறுகள் ஒன்று கூடுகின்ற 'கூடல் சங்கமம்' என்னும் இடத்தில் சோமேஸ்வரன் II, விக்கிரமாதித்தன் என்னும் இரண்டு சாளுக்கிய அரசர்கள் அரசுரிமைக்காகச் செய்த போரில், இந்தச் சோழன், விக்கிரமாதித்தன் பக்கம் சேர்ந்து போர் செய்து, சோமேஸ்வரனை முறியடித்து, விக்கிரமாதித்தனை அரசுகட்டில் ஏறச்செய்தான். அன்றியும், அவனுக்குத் தன்மகளை மனஞ்செய்து கொடுத்தான். இவனால் ஆதரிக்கப்பட்ட புத்த மித்திரரும் இவன் காலத்தில், அஃதாவது கி.பி. பதினொன்றாம் நூற்றண்டில் இருந்தவராவர்.
'அணி' என்னும் அலங்கார இலக்கணத்தை, தண்டியா சிரியரைப் பின்பற்றிச் சொன்னதாக இவர் தமது வீர சோழியத்தில் கூறுவதால், இவர் தண்டியாசியருக்குப் பிற்பட்டவராதல் வேண்டும்.

    சிவபெருமானிடத்தில் அகத்திய முனிவர் தமிழ்மொழியைக் கற்றார் என்று ஒரு கொள்கை சைவர்களுக்குள் உண்டு. புத்தமித்திரனார், பௌத்தத் தெய்வமாகிய அவலோகிதீஸ்வரரிடத்தில் அகத்திய முனிவர் தமிழ் பயின்றதாகக் கூறுகின்றார். இதனை, 'ஆயுங்குணத்தவலோகிதன்' என்னும் வீரசோழிய அவையடக்கச் செய்யுளால் அறியலாம். (இணைப்பு காண்க.)

    புத்தமித்திரனார் வீரசோழியத்தைத் தவிர வேறு நூல் யாதேனும் செய்திருக்கின்றாரா என்பது தெரியவில்லை. இவர் இருந்த சோழநாட்டிலேயே இவர் பெயரைக்கொண்ட பௌத்த பிக்கு ஒருவர் இருந்ததாகவும், அவர் இலங்கை சென்று அநுராதபுரத்தில் தங்கியிருந்ததாகவும், இலங்கையில் அவருக்குச் 'சோழதேரர்'' என்ற பெயர் வழங்கியதாகவும் பௌத்த நூல்களால் அறிகின்றோம். ஆனால், அந்தப் புத்தமித்திரர் வேறானவர் என்று தெரிகின்றது.

19. பெருந்தேவனார்

    'பெருந்தேவனார்' என்னும் பெயருடைய தமிழாசிரியர் சிலர், பண்டைக் காலத்தில் இருந்தனர். கடைச்சங்க காலத்தில் இருந்த பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவரும், பிற்காலத்திலிருந்த பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனாரும் இவரின் வேறானவர்கள். இந்தப் பெருந்தேவனார் பௌத்தர். புத்தமித்திரனாரின் மாணவர். புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர். இதனை,

'தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் தான்மொழிந்த
படிவீர சோழியக் காரிகை நூற்றெண் பஃதொடொன்றின்
தீடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன் செகம்பழிச்சக்
கடனாக வேநவின் றான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே'
என்னும் வீரசோழிய உரைப்பாயிரச் செய்யுளால் அறியலாம். வீரசோழிய நூலின் சிறப்பை அதிகப்படுத்துவது இவரது உரையே என்று கூறுவது மிகையாகாது. இவர் எழுதிய உரை தமிழாராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளருக்கும் மிக்க உதவியாக இருக்கிறது.
இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ள புத்தரைப் போற்றும் செய்யுள்களில் பெரும்பான்மையும் உரையில் மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள்களே. (இணைப்பு காண்க.)

    இவர் தமது உரையில் நியாய சூடாமணி, புதியா நுட்பம், வச்சத்தொள்ளாயிரம், உதயணன் கதை, கலிவிருத்தம், எலி விருத்தம், நரிவிருத்தம் என்னும் நூல்களைக் குறிப்பிட்டிருக்கின்றார். அன்றியும் குண்டலகேசி, பாரதவெண்பா, யாப்பருங்கலம் முதலிய நூல்களினின்றும் செய்யுள்களை மேற்கோள்களாக எடுத்தாண்டிருக்கின்றார்.

    இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை. இவரது காலம் புத்தமித்திரனாரும் வீரராசேந்திர சோழனும் வாழ்ந்திருந்த கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும்.

20. தீபங்கர தேரர்

    இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர். ஆனதுபற்றிச் 'சோளிய தீபங்கரர்' என்று இவர் வழங்கப்படுகின்றார். புத்தப் பிரிய தேரர் என்றும் வேறொரு பெயர் இவருக்கு உண்டு. இவர் இலங்கைக்குச் சென்று, ஆங்கு ஆனந்த வனரதனர் என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்றார். பின்னர், காஞ்சிபுரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார். பாலி மொழியை நன்கு பயின்றவர். அந்த மொழியில் பஜ்ஜமது என்னும் நூலை இயற்றியிருக்கின்றார். புத்தரது உருவ அழகினையும், அவர் உபதேசித்த பௌத்தக் கொள்கை, அவர் அமைத்த பௌத்த சங்கம், இவற்றின் செவ்விகளையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார். இந்நூல் நூற்று நான்கு செய்யுள்களைக் கொண்டது. இவர் இயற்றிய இன்னொரு நூல் ரூப சித்தி என்பது. "பாடரூப சித்தி" என்றும் இதற்குப் பெயர் உண்டு. இது பாலிமொழி இலக்கண நூல். இதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார் என்று கூறுவர். இவர் இயற்றிய 'பஜ்ஜமது' என்னும் நூல் கி.பி. 1100 இல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.

21. அநுருத்தர்

    'அநிருத்தர்' என்றும் இவருக்குப் பெயர் உண்டு. இவர் மூலசோம விகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குத் தலைவராக இருந்தவர். இவர் பாண்டிய தேசத்தவர் என்று தெரிகின்றது. 'அயிதம்மாத்த சங்கிரகம்', 'பரமார்த்த வினிச்சயம்', 'நாமரூபப் பரிச்சேதம்' என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கின்றார். 'அபிதம்மாத்த சங்கிரகம்' இலங்கையிலும், பர்மா தேசத்திலும் உள்ள பௌத்தர்களால் நெடுங்காலமாகப் போற்றிக் கற்கப்பட்டு வருகின்றது.

22. புத்தமித்திரர், மகாகாசபர் (சோழ தேரர்கள்)

    இவ்விருவரையும் சோழ தேரர்கள் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. சோழநாட்டவராகிய இவர்கள் இலங்கைக்குச் சென்று ஆங்கு வாழ்ந்து வந்தனர் போலும். இவர்கள் வேண்டுகோளின்படி ;உத்தோதயம்' , 'நாமரூபப் பரிச்சேதம்' என்னும் நூல்கள் இயற்றப்பட்டன. 'நாமரூபப் பரிச்சேதம்' இயற்றிய அநிருத்தர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்தவர். ஆதலால், இவர்களும் அக்காலத்தவராவர். இவர்களைப் பற்றிய வேறு வரலாறுகள் தெரியவில்லை. இந்தப் புத்தமித்திரர், வீரசோழியம் இயற்றி புத்தமித்திரின் வேறானவர்.

23. ஆனந்த தேரர்? - (1245)

    இவர் காஞ்சிபுரத்தில் இருந்தவர். பௌத்தமத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா தேசத்தவரான சத்தம்ம ஜோதிபாலர் என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட சாபதர் என்பவர் இவரை இலங்கையிலிருந்து (பர்மா) அரிமர்த்தனபுரத்துக்கு அழைத்துச் சென்றார் என்று 'சாசன வம்சம்' என்னும் நூல் கூறுகின்றது. பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் இவருக்கு யானை ஒன்றைப் பரிசாக அளித்தான் என்றும், அந்த யானையை இவர் காஞ்சிபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார் என்றும் கல்யாணி நகரத்துக் கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவர் நமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது. இவர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து பின்னர்க் கி.பி 1245 இல் காலமானார் என்று கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியவில்லை.

24. தம்மகீர்த்தீ

    இவர் 'தம்பராட்டா' என்னும் பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்தவர். (தாமிரவர்ணி பாயும் பாண்டிய நாட்டினைத் தம்பராட்டா என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.) கல்வி அறிவு ஒழுக்கங்களினால் சிறந்தவர். இவரது மேன்மையைக் கேள்வியுற்று, பராக்கிரம பாகு (இரண்டாமவன்) என்னும் இலங்கை மன்னன் இவரைத் தன்னிடம் வணக்கமாக வரவழைத்துக் கொண்டான். அன்றியும், சோழநாட்டிலிருந்த பௌத்தப் பிக்குகளையும் இவன் இலங்கைக்கு வரவழைத்து, ஒரு பெரிய பௌத்த மகாநாடு நடத்தினான். இந்த அரசன் மற்றப் பிக்ஷுக்களைவிட தம்மகீர்த்தீயிடத்தில் தனிப்பட்ட அன்பும் மரியாதையும் கொண்டிருந்தான். தாட்டா வம்சம் என்னும் நூலினை இவர் பாலி மொழியில் இயற்றியதாகக் கூறுவர். இந்த நூலை வேறொருவர் இயற்றியதாகச் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் என்னும் நூலின் பிற்பகுதியாகிய சூலவம்சம் என்னும் நூல் (மகாசேனன் என்னும் அரசன் காலமுதல் பராக்கிரமபாகு இரண்டாமவன் காலம் வரையில்) இவர் இயற்றியதாகக் கருதப்படுகின்றது. இவரை ஆதரித்த பராக்கிரமபாகு இரண்டாமவன், இலங்கையைக் கி.பி. 1236 முதல் 1268 வரையில் அரசாண்டவன். ஆகையால், இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

25. கவிராசராசர்

    இவர் ஒரு பௌத்தப் புலவர். இவர் தமிழ்க்கவி இயற்றுவதில் தேர்ந்தவர் என இவரது பெயரினால் அறியப்படும். இவரது காலம் தெரியவில்லை. ஆயினும், கி.பி. பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்தவராகக் கருதலாம். இவர் இயற்றிய நூலின் பெயர் தெரியவில்லை. 'வன்பசிக் கடும்புலிக் குடம்பளித் துடம்பின்மேல் வாளெறிந்த வாயினூடு பால்சுரந்து' என்னும் செய்யுளடியை மேற்கோள் காட்டி, 'இது கவிராசராசன் வாக்கு' என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறியிருப்பதிலிருந்து, இப் பெயரையுடைய புலவர் ஒருவர் இருந்தாரென்பது தெரிகின்றது. (377 ஆம் தாழிசை உரை காண்க.)

26. காசப தேரர்

    சோழ காசபர் என்றும் வழங்கப்படுகிறார். பாலி மொழியையும் பௌத்த நூல்களையும் நன்கு கற்றவர். மோகவிச்சேதனீ, விமதிவிச்சேதனீ, விமதி வினோதனீ, அநாகத வம்சம் என்னும் நூல்களை இவர் இயற்றியிருக்கிறார். இவர் டமிள (தமிழ்) தேசத்துச் சோழநாட்டவர் என்று கந்தவம்சம், சாசனவம்ச தீபம் என்னும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே இவர் சோழநாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது தெரிகின்றது. இவர் இயற்றிய மோக விச்சேதனீ என்னும் நூலிலே, காவிரியாறு பாய்கிற சோழநாட்டில் நாகநகரத்தில் (நாகைப் பட்டினம்?) இருந்த நாகானை விகாரையில் இவர் இருந்ததாக கூறப்படுகிறார். மேலும் அந் நூலிலே, இவர் கீழ்வருமாறு கூறப்படுகிறார்: "முற்காலத்திலே இருந்த மகாபாசபர் என்பவரின் பெயரைச் சூடி அவரைப் போலவே புகழ்பெற்று விளங்குகிறவரும், விசாலமும் அலங்காரமும் உள்ள மதில்களால் சூழப்பட்ட நாகனை விகாரையில் வசிக்கிறவரும், வானத்தில் விளங்கும் வெண்ணிலாப் போன்று ஞானத்தினால் விளங்குபவரும், எல்லாவிதமான சாத்திரங்களையும் சூத்திர, வினய, அபிதம்மம் என்னும் மூன்று பிடக நூல்களையும் துறைபோகக் கற்றவரும், பகைவராகிய யானைகளுக்குச் சிங்கம் போன்றவரும், சீலம் உடையவராய்த் திருப்தி முதலான குணங்களால் அலங்கரிக்கப்பட்டவரும் தர்மத்தையும் விநயத்தையும் நன்றாகப் போதித்துப் புத்த தர்மத்தை விளங்கச் செய்பவரும் ஆகிய மகாகாசிபதேரர், அபிதம்ம பிடகம் என்னும் பெருங்கடலிலே ஆங்காங்கு நிறைந்திருக்கும் சாரார்த்தம் ஆகிய இரத்தினங்களை எடுத்து ஒன்று சேர்த்துக் கற்போருடைய கழுத்தில் அணியும் மாலை போன்று, 'மோகவிச்சேதனீ' என்னும் இரத்தின மாலையை அமைத்துக் கொடுத்தார். இந்த நூல் புகழோடு விளங்கி மக்களுடைய மோகாந்த காரமாகிய இருளை நீக்கி, அவர்களைத் தர்மத்தில் ஒழுகச் செய்து, நன்மை பயந்து நல்ல கதியைத் தந்து உலகத்திலே பௌத்த தர்மம் உள்ளவரையில் நிலைத்திருக்கும்."
இவருடைய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை.

27. சாரிபுத்தர்

    இவர் சோழநாட்டினைச் சேர்ந்தவர் என்பதும், 'பாடாவதாரம்' என்னும் பாலிமொழி நூலை இயற்றியவர் என்பதும் 'கந்த வம்சம்' (கிரந்த வம்சம்), 'சாசன வம்சம்' என்னும் நூல்களினால் தெரிகின்றது. இவரது காலம் வரலாறு முதலியவை ஒன்றும் தெரியவில்லை.
திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் சோழநாட்டில் சாரிபுத்தர் என்னும் ஒரு தேரர் போதிமங்கை என்னும் ஊரில் இருந்தார் என்றும், அவருடன் ஞானசம்பந்தர் சமயவாதம் செய்தார் என்றும் பெரியபுராணம் கூறுகின்றது. பெரியபுராணம் கூறுகின்ற சாரிபுத்தரும், கந்தவம்சம் கூறுகின்ற சாரிபுத்தரும் வெவ்வேறு காலத்திலிருந்த வெவ்வேறு சாரிபுத்தர்கள் ஆவர்.

28. புத்தாதித்தியர்

    இவர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு. இவர் சாவகத்தீவின் (ஜாவா) அரசன் ஒருவனைப் புகழ்ந்து சில பாடல்கள் இயற்றியிருக்கின்றார். இவரது காலம், வரலாறு ஒன்றும் தெரியவில்லை.


    தமிழ்நாட்டிலே இன்னும் எத்தனையோ தேரர்கள் பல நூல்களை இயற்றியிருக்கிறார்கள். புத்தசிகா, ஜோதி பாலர், இராகுல தேரர், பூர்வாசாரியர் இருவர், (இவர்கள் பெயர் தெரியவில்லை.) மகாவஜ்ஜிரபுத்தி, கல்லவஜ்ஜிரபுத்தி, சுல்ல தம்மபாலர் முதலியவர்களைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர்களன்றி, வேறு இருபது பௌத்த ஆசிரியர்களும் காஞ்சிபுரத்தில் நூல்கள் இயற்றியதாகக் 'கந்த வம்சம்' (கிரந்த வம்சம்) என்னும் நூல் கூறுகின்றது. இவர்களது வரலாறும் தெரியவில்லை.




No comments:

Post a Comment