Friday, February 17, 2012

புத்த மார்க்க வினா விடை


புத்த மார்க்க வினா விடை


க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.

01 . புத்தராகிய சற்குரு ஞான நீதிகளைப் போதித்து வந்தார் என்பதில் ஞானம் என்பதின் பொருள் என்ன?
ஞானம் என்பது அறிவு என்னும் பொருளைத் தரும். அஃது சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகைப்படும்.

02. சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகை அறிவுகள் உண்டோ?
உண்டு, அதாவது, சிறு வயதுள்ள மனிதன் என்றும் பேரு வயதுள்ள மனிதன் என்றும் தேகியை (தேகத்தை) குறிப்பது போல அறிவினிடத்திலும் விருத்தி பேதத்தால் இரு வகைகள் உண்டு.

03. சிற்றறிவு என்பது என்ன?
தங்கள் மனதை வீண் விஷயங்களில் செல்லவிடாமலும், தேகத்தைச் சோம்பல் அடையச்செய்யாமலும், உலோகங்களால் செய்யுங் கருவிகளையும், மரங்களால் செய்யுங் கருவிகளையும் கண்டுபிடித்து, உலகில் உள்ள சீவராசிகளுக்கு சுகம் உண்டாக்கி வைப்பது அல்லாமல், தங்களையும் தங்களை அடுத்தோர்களையும் குபேர சம்பத்தாக வாழ்விக்கச் செய்யும் ஓர்வகை உத்திக்கு சிற்றறிவு என்று கூறப்படும்.

04. அவ்வகை சிற்றறிவினால் கண்ட வித்தைகள் எவை?
பஞ்சை நூலகத் திரிப்பதும், நூலை ஆடையாக்குவதும், மண்ணிற் பலன் உண்டாக்குவதும், மண்ணை இரும்பாக மாற்றுவதும், இரும்பை இயந்திரங்களாக்குவதும், இயந்திரங்களால் புகைரதம், புகைகப்பல், மின்சாரதந்தி, மின்சார ரத முதலிய சூத்திரங்களை உண்டு செய்வதேயாம். இவ்வகை சிற்றறிவுடையவனை சூஸ்திரனென்றும், சூத்திரனென்றும் கூறப்படும். இதுவே விருத்தி ஞானமாம்.

05 பேரறிவு என்பது என்ன?
சீவராசிகளாகக் தோன்றும் யாவும் அநித்தியம் (நிலையற்றது) என்று அறிந்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய முப்புரங்களையும் அறிந்து எல்லாக் கவலையும் அற்று இருப்பதை பேரறிவு என்றும் சொருப ஞானம் என்றும் உண்மை என்றும் கூறப்படும்.

06 இவ்வகை பேரறிவினால் உலகில் உள்ளோருக்கும் தனக்கும் உண்டாகும் பயன் என்ன?
தனக்கு உண்டாகும் பிறப்பு, பிணி. மூப்பு, மரணம் என்னும் நான்கு வகைத் துக்கங்களை ஜெபித்துக்கொள்வது அல்லாமல் தன்னை அடுத்தவர்களுக்கும் சுகவழியைப் போதிப்பான். இவ்வகை பேரறிவாளனை வடமொழியில் பிராமணன் என்றும் தென்மொழியில் அந்தணன் என்றும் கூறப்படும்.

07 அஞ்ஞனம் என்பது என்ன?
அஞ்ஞனம் என்பது அறிவின் விருத்தி இல்லாமல் என்று கூறப்படும். அதாவது தன்னுடைய அறிவினால் ஒன்றை விசாரித்து தெளியாமல் ஒருவன் சொல்லுவதை நம்பிக்கொண்டு பேசுவது, ஒருவன் எழுதி வைத்திருப்பதை நம்பிநடப்பது ஆகிய செய்கைகளை அஞ்ஞனம் எனபபடும்.

08 உலகத்தில் எழுதிவைத்திருக்கும் வேதங்களும் புராணங்களும் அவற்றின் போதனைகளும் அஞ்ஞனம் ஆகுமோ?
அவைகளை வாசித்த நிலையிலும், கேட்ட நிலையிலும் நிற்பது, கற்கண்டு என்று எழுதியிருப்பதையும் கற்கண்டு என்று போதித்த வார்த்தையும் கேட்டுக்கொண்டு அதை விசாரியாமலும், சிந்தியாமலும், கற்கண்டு கற்கண்டேன்னும் பொருகளை எல்லோரும் காணக்கூடியதாய் இருந்தாலும் அதின் இனிப்பாகிய சுவையை ஒவ்வொருத்தனும் சுவைத்தறிந்துக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்.

09. மெஞ்ஞானம் என்பது என்ன?
வாசித்தவைகளையும், கேட்டவைகளையும் சிந்தித்து தெளிவடைதலும் கற்கண்டு என்பவை எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதின் நிறம் ஏத்தகையது? அதின் சுவை ஏத்தகையது? என்று தேடி வாசரித்து சுவைத்து அறிந்த நிலையே மெஞ்ஞானம் எனப்படும்.

10. புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிருவாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன?
துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிருவாணம் எதிரிடையாயிருக்கின்றது. எக்காலத்தும் நித்திரையில்லாமல் விழித்திருப்பவனை போலும், இரவென்பது இல்லாமல் பகலவனாய் இருப்பது போலும், பிறவியை நீக்கி நித்திய ஜீவனானவர்களுக்கு நிருவாணம் அடைந்தோர் என்றும், தேகத்தில் நோய்க்கண்டு பலவகைத் துன்பங்களால் கபமீறி சுவாசம் அடைக்குங்கால் பொருளின் பேரிலும், பெண்சாதி பிள்ளைகள் பெயரிலும் இருக்கும் பாசம் இழுத்து, பெரு நித்திரை உண்டாக்கி அநித்திய சிவனையடைந்து பிறவியின் ஆளானோர்களை மரணம் அடைந்தார் என்றும் கூறப்படும். ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.

11. நிருவாணம் என்பது என்ன?
பொய்மை ஆகிய தேகத்திக்பேரில் அணைந்துள்ள வஸ்திரங்கள் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விடுவதை தேக நிருவாணம் என்றும்; பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று மனதில் அணைந்துக் கொண்டிருக்கும் பற்றுக்களை கழற்றி எறிந்துவிட்டு உண்மையாகிய ஒளியுற்றலை நிருவாண நிலை என்றும், அந்தர நிர்வாணம் என்றும், எல்லோரும் தரிசிக்க உண்மை ஜோதி வானோக்கி எழுதலை மகா பரிநிர்வாணம் என்றும் கூறப்படும். (ஆசை என்னும் இளமையிலிருந்து ஆசையற்று முத்தினான், முத்திபெற்றான், கடைத்தேறினான், மோக்கமுற்றான் நிருவாணமடைந்தான் என்று வழங்கி வருகிறார்கள்) இவ்வகையான சுகவழியை ஆதியில் போதித்தவுரம், அதின் அனுபவமாகிய சுகமுக்தியைக் காண்பித்தவரும், சற்குருவான புத்தராகையால் அவர் போதித்த சுயக்கியான வழியினின்று நிருவாணமுற்ற பின் அடியார்களை ஆதிக்க சமமானவர்கள் என்றும், சமஆதியானார்கள் என்றும், சமாதியானார்கள் என்றும் வழங்கி வருகிறார்கள்.

12. தன்னிற்றானே உண்மை அறிந்து சுகமடைய வேண்டுமேயல்லது பிறரால் யீடேற்றம் உண்டாவதில்லை என்னும் சுயக்கியானத்தைப் போதித்த புத்தரவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை வருடமிருந்தார்?

சாக்கிய சக்கரவர்த்தி திருமகனாக பிறந்து பதினாறாவது வயதில் அசோதரை என்னும் மலையசன் புத்திரியை விவாகம் செய்து, இருபதாவது வயதில் இராகுலன் என்னும் ஓர் புத்திரனைப் பெற்று, இருபத்தியோராவது வயதில் அரசாங்கத்தையும் தனது பந்துமித்திரரையும் விட்டு அரச மரத்தடியில் நிலைத்து தன்னையறிந்து காமமென்னும் மன்மதனையுங் காலனென்னும் மரணத்தையுங் செயித்து, முப்பதாவது வயதில் உண்மையின்று உலகேங்கும் சுற்றி சுயக்கியான சங்கங்களை ஏற்படுத்தி ஜீவகாருண்ய வாழ்க்கையையிருத்தி விட்டு, எண்பத்தைந்தாவது வயதில் காசியில் கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவ நாட்டில் சோதிமயமாக எல்லோரும் தரிசிக்கும்படி நிருவாண திசையடைந்தார்.

13. பிறவி என்பது என்ன?
அணுவிலும் சிறிய சீவராசிகள் கண்களுக்குத் தோன்றும் உருவமாக எழும்புவதைப் பிறப்புபென்றும், அந்த தோற்ற உருவம் அழிந்துவிடுவதை இறப்பென்றும் கூறப்படும். இதில் கண்களுக்கு தோன்றும் தேகத்திற்கு பொய்மையென்றும், அதை தோற்றிவிக்கும் சத்துக்கு உண்மையென்றும், இருவகைகள் உண்டு. இவற்றுள் தேகத்தை தானென்று அபிமானித்திருக்கும் வரையில் பிறவியென்னும் துக்க சக்கரத்தில் சுழன்று திரிவான். தேகத்தை தானல்லவென்று நீக்கி உண்மையாகிய தன்னையறிந்தவன் பிறவியென்னும் துக்க சக்கரத்தை விடுவித்துக் கொள்ளுவது மல்லாமல் தேகனென்று சொல்லும் வார்த்தை நீங்கி தேவனென்று சொல்லும் மேன்மையடைவான்.

14 சிலர் தன் முயற்சியினால் சுகம்பெரும் வழிகளை நம்பாமல் மணி மாலைகளைக் கொண்டு ஜெபித்திருப்பது என்ன?
ஒரு வசனத்தை பலமுறை சொல்வதே ஜெபமாகும். அவற்றுள் எண் வழுவாமல் காக்க மணிமாலையை சுழற்றுவதன்றி மற்றியாதும் இதில் பயனில்லை.

15. கடவுளை வழிபடுவது என்றால் என்ன?
அவர் உலகில் பிறந்து நமக்கு அருளிய நியாயங்களில் நாம் நின்றோழுகுவதே கடவுளை வழிபடுவதேயாகும்.

16 கடவுளை மாத்திரம் நம்பிக்கொண்டு முக்திபெற முடியாதோ?
கடவுள் என்பதற்கு நன்மெய் என்ற பொருளிருக்க அம்மொழியை மட்டும் விசுவாசித்து வாக்கு, மனம், காயத்தால் தீயச்செய்கையில் நிலைப்பவர்க்கு முக்தியே இல்லை.

17 அறிவே ஆனந்தம் எனபதென்ன?
அறிவால் சர்வமும் உணர்ந்து புண்ணியத்தைக் கைக்கொள்வது மக்களின் முதற் பேறாகும் இதனை அறிவின் மயமென்றும் சொல்லப்படும்.

18 . இவைகளை வகுத்தார் யார்?
ஆதியங் கடவுளாகிய சாக்கைய புத்த சுவாமியே.

19 . இவ்வகை பேரானந்த ஞானங்களைப் போதித்த சற்குரு நிருவாண திசையடைந்து எத்தனை வருடமாகிறது?
இந்தகலியுகம் 5057 மன்மத - சித்திரை மாதம் ( மே 1955 ) பௌர்ணமி திதி வரையில் 2499 வருடமாகிறது. (தற்போது சித்திரை மாதம் மே 2011 பௌர்ணமி திதி வரையில் 2555 வருடமாகிறது)

20 . புத்தர் போதித்துள்ள அட்டாங்க மார்க்கத்தில் மனதையடக்க மந்திரங்கள் ஏதேனும் உண்டோ?
உண்டு. மந்திரம் என்பதற்கு ஆலோசித்தல் என்னும் பொருளை தரும் அதாவது, மனமென்னும் சத்துவிழிப்பில் எங்கிருந்து உதிர்கின்றன, நித்திரையில் எங்கு அடங்கின்றன, சொப்பனத்தில் எங்கு விரிகின்றன வென்று ஆலோசித்தல் மந்திரம் எனப்படும்.

21 . மனம் அடங்குவதற்கு தியானமாகிலும் ஏதேனும் உண்டோ?
உண்டு. தியானம் என்பதற்கு கியானம், ஞானமென்னும் பொருளைத் தரும், அதாவது மனதைப் பேராசையிற் செல்லவிடாமலும், பொறமையில் சூழவிடாமலும், வஞ்சினத்தில் நிலைக்கவிடாமலும், காம இச்சையில் விழவிடாமலும், ஜாக்கிரதையாக ஆண்டுவரும் அறிவுக்கு தியானம் எனப்படும்.

22 . மனம் அடங்குவதற்குப் பூசைகள் ஏதேனும் உண்டோ?
இல்லை. பூசையென்பதும், பூசனையென்பதும், பூசலென்பதும் தேகத்தை தடவலென்னும் பொருளைத்தரும். அதாவது கல்வியை கற்பிக்கும் குருவையானாலும், கை தொழிலை கற்பிக்கும் குருவையானாலும், ஞானத்தை போதிக்கும் குருவையானாலும் நெருங்கி அவருடைய கை, கால் முதலிய அவயங்களைப் பிடித்தலுக்கு பூசதலென்று பெயர். இவ்வகை பூசைக்கும் மனதுக்கும் யாதொரு சம்பந்தமில்லை.

23 . அருகமதம் வேறு, புத்த மதம் வேறென்று கூறுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வட தேசங்களில் உள்ளவர்கள் புத்தரென்றும், தென் தேசங்களில் உள்ளவர்கள் அருகரென்றும் (பல காரியத்திலும் நானகருனல்ல என்றும்) வழங்கி வருகின்றார்கள்.

24 . சமணமதம் என்பது என்ன?
புத்த தருமத்தை அனுசரித்து சங்கங்களில் சேர்ந்து மடத்தில் வாழ்கிறவர்கள் சகல சீவராசிகளின் பேரிலும் அன்புவைத்து சமமனமுண்டாகி வாழ்ந்தவர்கள் ஆகையால் சமனர் என்றும் சமணாள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.

26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?
எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.

27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?
சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்.

28 . ஜைன மாதம் என்பது என்ன?
புத்தருடைய ஆயிர நாமங்களில் ஜைரரென்னும் பெயரும் அடங்கியிருக்கின்றன. அப்பெயரை வகுத்திக்குங் கூட்டத்தார் புத்த தருமத்திற்கு சிலவற்றையும் வேட பிராமணர்கள் ஏற்படுத்தியிருக்கும் மதக்கட்டுப்பாடுகளிற் சிலவற்றையும் அனுசரித்துக்கொண்டு ஜைத மதத்தரென வழங்கி வருகிறார்கள்.

29 . சின்னசாமி என்ற பெயரும் அதற்கெதிர் பெரியசாமி என்ற பெயரும் பௌத்தர்கள் வழங்குவதின் காரணம் என்ன?
தமிழ்மொழில் (ஜினசாமி) யாகிய புத்தரை சினசாமி சின்னசாமி சின்னச்சாமி என்றும் சாமிகட்கெல்லாம் முதலுமதிகாரியு மானதால் மகாசாமி என்றும் பெரியசாமி என்றும் வழங்குகிறார்கள். இதன் அர்த்தமுணராதார் சாமியில் சின்னதும் பெரியதும் உண்டோ என்று கேழ்க்கிறார்கள்.

Friday, February 3, 2012

 முனைவர் பா.ஜம்புலிங்கம்,
 
மயிலை சீனி.வேங்கடசாமி (1940), பி,ஆர்.சீனிவாசன் (1960), டி.என். இராமச்சந்திரன் (1965), சி.மீனாட்சி (1979), டி.என்.வாசுதேவராவ் ஆகியோர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் மற்றும்  புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய சோழ நாட்டில் புத்தர் சிலைகள் உள்ள இடங்களாக சுமார் 20 இடங்களைக் குறிப்பிட்டுள்ளனர். பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (French Institute of Pondicherry) தன் தொகுப்பில் இப்பகுதியினைச் சார்ந்த 16 புத்தர் சிலைகளின் புகைப்படங்களைக் கொண்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் (1998) என்னும் நூலில் இப்பகுதியில் 19 புத்தர் சிலைகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல ஆய்வாளர்கள் ஆங்காங்கே சில புத்தர் சிலைகளைக் கண்டுபிடித்து வரலாற்றுலகத்திற்கு அறிமுகப் படுத்தியுள்ளனர். 

1993இல் பௌத்த ஆய்வு தொடங்கிய நாள் முதல் இன்று வரை சோழ நாட்டில் இவற்றைப்போல இரு மடங்கு எண்ணிக்கையிலான புத்தர் சிலைகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் களப்பணி மேற்கொண்டபோது நேரடியாகக் காண முடிந்தது. 1998 முதல் 2009 வரை இப்பகுதியில் அய்யம்பேட்டை, உள்ளிக்கோட்டை, காஜாமலை, குடவாசல், குழுமூர், சுந்தரபாண்டியன் பட்டினம், திருநாட்டியத்தான்குடி, பட்டீஸ்வரம், புதூர், மங்கலம், வளையமாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் இக்கட்டுரையாளரால் புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சி காஜாமலையில் அக்டோபர் 2008இல் கண்டுபிடிக்கப்பட்ட சிலை சோழ நாட்டில் காணப்படுகின்ற 65ஆவது புத்தர் சிலையாகும்.

திருச்சி மாவட்டத்தில் புத்தர் சிலைகள்
திருச்சி மாவட்டத்தில் புத்தர் சிலைகள் ஸ்ரீராமசமுத்திரம் என்றழைக்கப்படும் ஆயிரவேலி அயிலூர், காஜாமலை, கீழக்குறிச்சி, குழுமணி, பேட்டவாய்த்தலை, மங்கலம், முசிறி, வெள்ளனூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. குழுமணி, முசிறி ஆகிய இடங்களைச் சார்ந்த சிலைகள் திருச்சியிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர செப்டம்பர் 1998-இல் களப்பணி மேற்கொண்டபோது பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக தோப்பில் காணப்பட்ட புத்தர் சிலை, மே 2002-இல் திருச்சி  அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.



1998 களப்பணி
முசிறி வட்டத்தில் உள்ள மங்கலம் என்னும் சிற்றூரில் அரவாண்டியம்மன் என்னும் கோயில் உள்ளது. 1998-இல் களப்பணி சென்றபோது இக்கோயிலில் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் புத்தர் சிலை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை துணைக் கண்காணிப்பாளர் திரு கி.ஸ்ரீதரன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அவர், இச்சிலை கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், முசிறி-ஆத்தூர் அக்காலத்தில் சிறந்த வணிகத்தலமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் பல இடங்களில் காணப்பட்ட புத்தர் சிலைகள் அங்குப் பௌத்த சமயம் செழிப்பான நிலையில் இருந்ததை உணர்த்துகிறது என்றும், வணிக நோக்கில் இப்பகுதிக்கு வந்த பௌத்த சமயத்தவர் இச்சிலையைச் செதுக்கியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இச்சிலை பீடத்துடன் 68 அங்குலம் உயரமுள்ளது.  சிலையின் பீடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிங்கங்கள் காணப்படுகின்றன. அகன்ற மார்பு, திண்ணிய தோள்கள், நீண்டு வளர்ந்த காதுகள், தலையில் அழகான  தீச்சுடர் வடிவில் முடி,திருவாட்சி போன்ற அமைப்பு முதலியவை இதன் சிறப்புக் கூறுகளாகும். சோழ நாட்டில் காணப்படுகின்ற வேறு எந்தப் புத்தர் சிலையின் பீடத்திலும் இல்லாத சிங்க உருவங்கள் இச்சிலையில் காணப்படுகின்றன.இவை அனைத்திற்கும் மேலாக இந்தச்சிலை மீசையுடன் உள்ளது. பொதுவாக மைத்ரேயர் சிற்பம் மீசையுடன் காணப்படும். இங்குப் புத்தர் சிலைக்கு மீசையுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். சோழ நாட்டில் உள்ள புத்தரது கற்சிலைகளில் இந்தச் சிலை மட்டுமே மீசையுடன் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறது. உள்ளூர் மக்கள் இச்சிலை புத்தர் எனத் தெரிந்தபோதிலும், செட்டியார் என்று கூறி வழிபட்டு வருகிறார்கள்.அரவாண்டியம்மன் கோயிலில் பிராணிகளைப் பலி கொடுப்பது வழக்கமென்றும், பலியிடுவதைப் புத்தர்  விரும்ப மாட்டாராகையால் அவரது சிலையை அமைப்பதற்காகத் தனியாக ஒரு சன்னதி கட்டி வைத்துள்ளதாகக் களப்பணியின்போது கூறினர். பலியிடுவது தெரியாமலிருப்பதற்காகத் திரைச் சீலையினை சிலைக்குமுன் போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
சோழ நாட்டில் புத்தரை சிவனார், அமணர், சாம்பான், செட்டியார், நாட்டுக்கோட்டை செட்டியார், பழுப்பர் எனப் பலவாறான பெயர்களில் அழைக்கின்றனர். வழிபாடும் நடத்துகின்றனர். புத்தர் சிலைகள் அருங்காட்சியகங்கள், பொதுவிடங்கள், கோயில்கள், தோப்புகள், ஊரின் மையப்பகுதி போன்ற பலவாறான இடங்களில் காணப்படுகின்றன. சில இடங்களில் புத்தருக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. சில இடங்களில் புத்தர் சிலைகள் பராமரிப்பின்றி உள்ளன. பல இடங்களில் புத்தர் சிலையைச் சமணர் சிலை என்றும், சமணத் தீர்த்தங்கரர் சிலையைப் புத்தர் சிலை என்றும் கூறிவருவதைக் களப்பணியின்போது காணமுடிந்தது. 

பிப்ரவரி 2009 களப்பணி
பிப்ரவரி 2009-இல் களப்பணி சென்றபோது தொடர்ந்து அந்த புத்தர் சிலைக்கு வழிபாடு நடத்தப்படுவதைக் காணமுடிந்தது. முன்பு அமைக்கப்பட்டிருந்த சிறிய சன்னதிக்கு முன்பாக முகப்பு மண்டபம் ஒன்றை 2002-இல் புதிதாகக் கட்டியுள்ளனர். மண்டபத்தின் முகப்பில் அமர்ந்த நிலையிலுள்ள சுதையாலான புத்தர் சிலை உள்ளது.  அரவாண்டியம்மன் கோயிலின் இடப்புறத்தில் காணப்படுகின்ற மீசையுடன் கூடிய புத்தர் சிலையை மண்டபத்துடன் கூடிய  சிறிய சன்னதியில் வைக்கவுள்ளதாகக் களப்பணியின்போது தெரிவித்தனர். மன்னரைக் குறிக்கும் வகையிலோ, வீரத்தைக் குறிக்கும் வகையிலோ, சிற்பியின் அதிகமான ஆர்வம் காரணமாகவோ இந்தப் புத்தருக்கு மீசை அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். வழிபாடு, நம்பிக்கைகள் தொடர்ந்து முன்பிருந்ததைப் போலவே தற்போதும் உள்ளதைக் காணமுடிந்தது. சிறிய சன்னதிக்குள் புத்தரை அமைக்கும் நன்னாளை உள்ளூர் மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
நாயன்மார்கள்-ஆழ்வார்கள் காலத்தில் பௌத்தச் சமயத்திற்கு வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறப்பட்டாலும்கூட அவர்களுக்குப் பின் சோழர் ஆட்சியில் இந்தச் சமயமானது சிறப்புற்று இருந்ததை இப்பகுதியில் காணப்படுகிற புத்தர் சிலைகள் உறுதிகூறுகின்றன. சோழ நாட்டில் தேவாரப்பாடல் பெற்ற சிவக்கோயில்களும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக்கோயில்களும் இருந்த அளவு அதற்குப் பிந்தைய காலகட்டங்களில் புத்தர் கோயில்கள் இருந்ததை இந்த புத்தர் சிலைகள் உணர்த்துகின்றன. மயிலாடுதுறை அருகே ரிஷிக்கோயில் என்னும் பெயரிலான புத்தர் கோயில் உள்ளது. தற்போது சோழ நாட்டில் திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் புத்தருக்காகக் கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இப்பகுதியில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலைகளும், வழிபாடுகளும் இப்பகுதியில் பௌத்த சமயத்தின் தாக்கத்தினை உணர்த்துவதோடு பௌத்தம் புத்துயிர் பெற்று வருவதையும் உறுதி செய்கின்றன.
நன்னெறியில் நடப்பவன் இம்மையிலும் உவகை கொள்கிறான். மறுமையிலும் உவகை கொள்கிறான். அவன் இருமையிலும் உவகை பெறுகிறான். நான் நல்லதைச் செய்தேன் என்று நினைத்து அவன் இன்புறுகிறான். அவ்வழியிலேயே சென்று மேலும் மகிழ்ச்சியடைகிறான். (தம்ம பதம் 18).


துணை நின்றவை
பிக்கு சோமானந்தா, தம்ம பதம், மகாபோதி சொசைட்டி, சென்னை, 1996.
தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு, தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம், (2-ஆம் பகுதி), தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை, 1998
வேங்கடசாமி, மயிலை.சீனி., பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957
ஜம்புலிங்கம், பா., சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999
Jambulingam, B.,  Buddhism in the Cola Country, Project Report, Nehru Trust for  the Indian Collections
at the Victoria & Albert Museum, New Delhi, 2002
Minakshi, C., “Buddhism in South India”, South Indian Studies-II, (Editor R.Nagaswamy), Society for Archaeological, Historical and Epigraphical Research, Chennai, 1979
Srinivasan, P.R., “Buddhist images of South India”, Story of Buddhism with special reference to South India, Department of Information and Publicity, Madras, 1960

*தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இதழில் வெளியான கட்டுரை. இக்கட்டுரையை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.


முனைவர் பா.ஜம்புலிங்கம்,
சங்க காலத்தில் காவிரிப்பூம்பட்டினமும், இடைக்காலத்தில் நாகப்பட்டினமும்  பௌத்த சமய வரலாற்றில் சிறப்பான இடத்தை வகிக்கின்றன.
பூம்புகார்
பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையையும் அதன் வணிகம், பண்பாடு தொடர்பான பெருமைகளையும்  பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது..
கி.மு.3ஆம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் பௌத்தம் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்தது. அவருடைய மகன் மகேந்திரன் பௌத்த சமயத்தைப் பரப்புவதற்காகக் காவிரிப்பூம்பட்டினத்தின் வழியாக இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். வட இந்தியாவில் பர்கூத் என்ற இடத்தில் கிடைத்த கி.மு.2ஆம்-3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்தூண் காகந்தி (பூம்புகார்) நகரைச் சேர்ந்த சோமா என்ற பிக்குணியால் தானமாக அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது (நாகசாமி, 1975 : 2).  
மணிமேகலையின் வேண்டுகோள்படி சோழ மன்னன் கிள்ளிவளவன் பௌத்த சமயத்தில் சேர்ந்ததையும், சோழ மன்னன் நெடுமுடிக்கிள்ளி (கி.பி.150-200), மணிமேகலை பௌத்த மந்திர சக்தியால் வேற்றுருவம் கொண்டு புகார் நகர ஏழைகளுக்கு உணவளித்து வந்ததைக் கேள்விற்று அவளை உபசரித்து சிறைச்சாலையை அழித்து அவ்விடத்தைப் பல நற்செயல்கள் நடத்தற்குரிய இடமாகச் செய்ததையும், சிறைச்சாலையைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துக்கொண்டதையும் மணிமேகலைக் காப்பியம் மூலம் அறியமுடிகிறது.
1927இல் காவிரிப்பூம்பட்டினத்தில் மேலையூர் என்ற இடத்தில் போதிசத்வ மைத்ரேயரின் செப்புத்திருமேனி பூமிக்கடியிலிருந்து கிடைத்துள்ளது. தங்கமுலாம் பூசப்பட்டுள்ள இத்திருமேனி கி.பி.8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. (நாகசாமி, 1973 : 16). 1962-67இல் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது  மேலையூரில் 2.5 மீ சதுரமுள்ள ஏழு அறைகளைக் கொண்ட புத்த விகாரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (EIA Vol.II :  216). இந்த விகாரையிலிருந்து,  ஆந்திரப்பிரதேசம் நாகார்ஜுனகொண்டாவில் பயன்படுத்தப்பட்ட ஒருவகைப் பளிங்குக்கல்லால் ஆன புத்தரின் பாதம் கிடைத்துள்ளது. சுமார் 3 1/2   அடி நீளமும், 2 1/2அடி அகலமும் உள்ள இந்தப் புத்தர் பாதத்தில் இரண்டு காலடிகளும், பூர்ண கலசம், ஸ்ரீவத்சம் போன்ற மங்கலச் சின்னங்களும் செதுக்கப்பட்டுள்ளன. புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் செப்புத்திருமேனி ஒன்றும் கிடைத்துள்ளது. பிப்ரவரி 1995இல் முடிவுற்ற நான்காவது கடல் அகழ்வாராய்ச்சியின் மூலமாக பூம்புகார் கடலுக்குள் பல கட்டிட அமைப்புகள் இருந்ததையும் அறிய முடிகிறது. (The Hindu, 20.2.1995).
நாகப்பட்டினம்
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பூம்புகாருக்கு அடுத்தபடியாக பௌத்த சமயச் செல்வாக்கு நிலவிய இடம் நாகப்பட்டினம் ஆகும். 1991இல் தஞ்சாவூர் மாவட்டம் இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு,  ஒரு பிரிவு தஞ்சாவூரையும் மற்றொரு பிரிவு நாகப்பட்டினத்தையும் தலைமையிடமாகக் கொண்டன. இடைக்காலச் சோழர் ஆட்சியில் நாகப்பட்டினம் சோழர்களின் முக்கியத்துறைமுகமாக மட்டுமன்றிச் சமய மையமாகவும் விளங்கியது. கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப்பாடல்களில் இவ்வூரின் பெயர் நாகை என்று உள்ளது. இங்குள்ள நாகநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து அமைப்பு முறையில் கி.பி.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் கல்வெட்டு இவ்வூரின் பெயரை நாகை என்று குறிப்பிடுகிறது. (பா.ஜெயக்குமார், 1991 :  2).
சீன நாட்டுப்பயணி யுவான்சுவாங், இங்கு அசோகன் கட்டிய ஆதிவிகாரை எனப்படும் புத்த விகாரை இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தம்மபாலர் (கி.பி.500) இங்கிருக்கும்போது பாலியில் ஒரு நூல் எழுதினார். கி.பி.720இல் பல்லவ மன்னன் நரசிம்மபோத்தவர்மன் காலத்தில் இங்கு ஒரு புத்தர் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டு சீனாவிலிருந்து நாகப்பட்டினத்துக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன மன்னன் விருப்பப்படி இக்கோயில் கட்டப்பட்டது. (மயிலை சீனி வேங்கடசாமி, 1957 :  47).   கி.பி.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய நாட்டு மன்னன் ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மன், இராஜராஜன் (கி.பி.985-1014) அனுமதியுடன் ஒரு புத்த விகாரையைக் கட்டியதை ஆனைமங்கலச் செப்பேடு கூறுகிறது. (EI Vol.XXII : 213-216).   ஸ்ரீமாறவிஜயோத்துங்கவர்மனின் தந்தையான சூடாமணிவர்மன் பெயரால் கட்டப்பட்டதால்  இது சூடாமணி விகாரை என்றழைக்கப்பட்டது.இந்த விகாரைக்கு இராஜராஜன் தனது 21ஆவது ஆட்சியாண்டில் (1006) நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஆனைமங்கலம் என்ற ஊரையும் அதன் வருவாயையும் கொடையாக வழங்கினார். இராஜராஜன் இறந்தபிறகு அவரது மகன் இராஜேந்திரன் (கி.பி.1012-1044) இதனை உறுதிப்படுத்தியதோடு அதனை செப்பேடாகவும் பொறித்தார். (EI Vol.XXII :  267-281). வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விகாரைகள் அழிந்துவிட்டபோதிலும் ஆனைமங்கலச்செப்பேடுகள் மூலம்  இவை எங்கிருந்தன என்பதைத் தமிழ்ப்பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறை மேற்கொண்ட கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.  (P.Jayakumar, 1992 : 429-433).
பர்மாவை ஆண்ட மன்னன் தம்மசேத்தி அல்லது இராமாதிபதியின் (கி.பி.1476) கல்யாணி கல்வெட்டு, நாகப்பட்டினத்தில் பௌத்த சமயம் சிறந்த நிலையில் இருந்ததை எடுத்துரைக்கிறது. (IA Vol.XXII : 11-243). இக்கல்வெட்டுகளில் ஒன்றின் மூலம் சித்திரதூதர் மற்றும் இராமதூதர் என்பவர்களின் தலைமையில் இரு கப்பல்களில் இரு குழுக்கள் பௌத்த சமய வளர்ச்சி பற்றி அறிய இலங்கைக்குச் சென்றதையும், அவற்றில் சித்திரதூதர் சென்ற கப்பல் கடலில் விபத்துக்குள்ளானதையும், சித்திரதூதர் மட்டும் நாகப்பட்டினம் (நவுதபட்டின) வந்தடைந்து அங்கு சீன மன்னனால் கட்டப்பட்டு வந்த புத்த விகாரையை வணங்கியதையும் அறியமுடிகிறது. (P.Jayakumar, 1992 :  429-433). நாகப்பட்டினத்திற்கு வடக்கே ஒன்று அல்லது இரண்டு கல் தொலைவில் காணப்பட்ட இக்கோபுரம் புதுவெளிக்கோபுரம், பழைய கோபுரம், சீனக்கோபுரம், ஜெயினக்கோபுரம் என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டது. இந்தியாவின் பண்டைய சின்னங்களின்மீது பற்று கொண்டிருந்த வால்டர் எலியட் என்ற ஆங்கிலேயர் 19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நாகப்பட்டினக் கடற்கரைக்கு வரும் கப்பல்களின் மாலுமிகளுக்குத் திசையை உணர்த்தும் கலங்கரை விளக்கமாக விளங்கிய இரு பெரிய கோபுரங்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். நான்கு பக்கங்களையும் மூன்று அடுக்குகளையும் கொண்டிருந்த இக்கோபுரம் முழுவதும் செங்கற்களைக் கொண்டும் காரை இல்லாமலும் கட்டப்பட்டிருந்தது.  இங்கு எவ்வித கல்வெட்டுக்களோ சிற்பங்களோ காணப்படவில்லை. இக்கோபுரம் 1867இல் நிர்ப்பந்தத்தின் காரணமாக இடிக்கப்பட்டது. (IA Vol.VII : 224-227). கி.பி.1856 முதல் சூடாமணி விகாரை இருந்த இடமான தற்போதைய வெளிப்பாளையம் மற்றும் நாணயக்காரன் தெரு ஆகிய இடங்களிலிருந்து சுமார் 350 புத்தர் செப்புத்திருமேனிகள் கண்டுபிடிக்கப்பட்டன. (T.N.Ramachandran, 1965 : 1-20). இவை கி.பி.10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.15ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும்.  வெளிப்பாளையத்தில் விகாரையையொட்டி இருந்த மிகப்பெரிய இலுப்பை மரம் சாய்க்கப்பட்டபோது அம்மரத்தின் வேர் சென்றிருந்த ஆழத்தில் ஐந்து புத்தர் சிற்பங்கள் கிடைத்தன. இவற்றில் நான்கு உலோகத்தினாலும் ஒன்று பீங்கானாலும் ஆனது.  இவற்றில் ஒரு புத்தர் சிற்பம் நின்ற நிலையில் உபதேசம் செய்வதுபோல் அமைந்ததாகும். (மயிலை சீனி.வேங்கடசாமி, 1957  : 50). இச்சிற்பங்கள் அனைத்தும் சோழர் காலந்தொட்டு விஜயநகர ஆட்சி வரை உள்ள காலத்தைச் சேர்ந்தவையாகும். (P.Jayakumar, 1992 :  429-423).
பிற இடங்கள்
பூதமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம், சங்கமங்கலம், திருவிளந்துரை, கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், எலையூர், பெருஞ்சேரி, கோட்டப்பாடி, மயிலாடுதுறை போன்றவை மிகச் சிறந்த பௌத்த மையங்களாக இருந்தன. (மயிலை சீனி.வேங்கடசாமி, 1957  : 46) இவ்விடங்களில் சிலவற்றில் புத்தரது சிற்பங்களும்  கோயில்களும் இருந்துள்ளன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த புத்தர் சிற்பங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்க் கலைக்கூடத்தில்  இரு புத்தர் சிற்பங்களும் (பட்டீஸ்வரம், மதகரம் ),  தமிழ்ப்பல்கலைக்கழக அரண்மனை வளாக அருங்காட்சியகத்தில் (கும்பகோணம்) ஒரு புத்தர் சிற்பங்களும்,  திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடியில் ஒரு சிற்பமும் உள்ளன. இவை அனைத்தும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளவையாகும். 
மன்னார்குடியிலிருந்து பின்னர் அழிந்து போன புத்தர் கோயில் ஒன்றில் இருந்த புத்தரது சிற்பம் தற்போது மன்னார்குடியில் உள்ள சமணக்கோயிலில் இடம் பெற்றுள்ளது.  (குடவாயில் பாலசுப்ரமணியன், 1995 : 5). இச்சிற்பமும் அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது.
நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி
தஞ்சாவூர்க் கலைக் கூடத்தில் கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நின்ற நிலையில் உள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத் திருமேனி உள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் புத்தரது சிற்பங்கள்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் கருவறையின் தென்புற வாயிலிலும், இராசராசன் திருவாயிலின் உட்புறத் தென்பகுதியிலும் புத்தரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
கும்பகோணம் கல்வெட்டு
பௌத்தத்தின் இறுதிச்சுவடுகளைத் தன்னகத்தே கொண்ட நகரம் கும்பகோணம் ஆகும். கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டின்மூலமாக பௌத்தம் இப்பகுதியில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை இருந்ததை அறியமுடிகிறது. (EI. Vol.XIX: 215-217). இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற அக்கல்வெட்டு தஞ்சாவூரை ஆண்ட செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியைச் (கி.பி.1535-1590) சார்ந்ததாகும். இது குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜுலைத்திங்கள் ஆகும். நீர்ப்பாசன வசதிக்காக செவ்வப்ப நாயக்கர் காலத்தில்  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக திருவிளந்துரையில் புத்தர் கோயில் இருந்ததை அறியமுடிகிறது.      கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில் திருநாகேஸ்வரம், திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகில் எலந்துரை உள்ளது. செவ்வப்ப நாயக்கர் காலத்தில் இந்த ஊர் திருவிளந்துரை என்று அழைக்கப்பெற்றது. இவ்வூருக்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியதால் எலந்துரையிலிருந்த புத்தர் கோயிலுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக திருமலைராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது ஊரில் உரிய அளவு நிலத்தை இக்கோயிலுக்காக அளித்ததைப் பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.   கி.பி.1580இல் எலந்துரை புத்தர் கோயில் பௌத்தர்களால் வழிபடப்பெற்றுள்ளதை இதன்மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் புத்தர் கோயிலொன்று பௌத்தர்களால் போற்றப்பெற்றுவந்ததற்கான இறுதிச்சான்றாக திகழ்வது இக்கல்வெட்டாகும். களப்பணி மேற்கொண்டபோது இந்த ஊரில் புத்தர் கோயில் இருந்ததற்கான எந்தச் சுவட்டையும் காணமுடியவில்லை. இருப்பினும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் இருந்ததை இக்கல்வெட்டும், மேற்கண்ட சிற்பங்களும் உறுதி செய்கின்றன. சோழ நாட்டில் சோழப்பேரரசர்கள் காலத்தில் நல்ல நிலையில் இருந்த பௌத்தம் விஜயநகரப் பேரரசின் காலத்தில் மங்கத்தொடங்கியது. இவ்வாறு மறையத் தொடங்கிய  பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் செவ்வப்ப நாயக்கர் காலத்திற்குப் பிறகு தென்படவில்லை. (குடவாயில் பாலசுப்ரமணியன், 1995 : 325).

*தமிழ்க்கலை, தமிழ் 12 கலை 1-4, மார்ச்சு-திசம்பர்  1994, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இதழில் வெளியான கட்டுரையின் திருந்திய வடிவம். தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து 1997 ஜனவரியில் திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.   இன்றைய தேதியில் தஞ்சாவூர் (17),  நாகப்பட்டினம் (9), திருவாரூர்  (12) ஆகிய மூன்று மாவட்டங்களில் 38 புத்தர் சிற்பங்கள்  காணப்படுகின்றன.  இவற்றில் ஏழு புத்தர் சிற்பங்கள் இக்கட்டுரையாளரால் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். திரு அய்யம்பேட்டை செல்வராஜ் உதவியுடன் மேற்கொண்ட களப்பணியின்போது அய்யம்பேட்டையில் ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனி தனியார் வழிபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

துணை நின்றவை
நாகசாமி, இரா.  பூம்புகார், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, சென்னை.
பாலசுப்ரமணியன், குடவாயில். "மன்னை நகரமும் மாண்புடைய கோயில்களும்", அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், மன்னார்குடி, 1995.
பாலசுப்ரமணியன், குடவாயில்.  தஞ்சை நாயக்கர் வரலாறு கையெழுத்துப்படி, 1995.
வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 11, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991.
வேங்கடசாமி, மயிலை சீனி. பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1957.
ஜெயக்குமார், பா. "நாகைக்கல்வெட்டு", ஆவணம், இதழ் 1, அக்டோபர் 1991.
Encyclopaedia of Indian Archaeology, Vol II.
Epigraphia Indica, Vol XIX and XXII.
The Hindu, 20.2.1995.
Indian Antiquary, Vol VII.
Jayakumar, P. "Nagapattinam: A Medieval Chola Port", New Trends in Indian Art & Archaeology, SR Rao Felicitation Volume II, Aditya Prakasan, New Delhi, 1992.
Ramachandran, T.N. The Nagapattinam and other Buddhist Bronzes in the Madras Museum, Bulletin of the Madras Government Museum, General Section, Vol VII No.1, 1965.   
1993 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பௌத்தக் களப்பணி தொடர்பான அனுபவங்கள் பல தலைப்புகளில் http://tamilindru.blogspot.com/ என்ற வலைப்பூவில் வெளியாகியுள்ளன. என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள முதலில் களம் அமைத்துத் தந்த தமிழ் இன்று வலைப்பூவிற்கு என் மனமார்ந்த நன்றி. ஆர்வமுள்ளோர் தேவையான தலைப்புகளைத் தெரிவு செய்து, படித்து, கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நாளிதழ்களில் வந்த செய்திகளைத் தவிர பௌத்தம் தொடர்பாக வெளியான கட்டுரைகள்/கண்டுபிடிப்புகள்  அதன்கீழ் தரப்பட்டுள்ளன.


1) பௌத்தச் சுவட்டைத் தேடி அறிமுகக்கட்டுரை (29.5.2010)
ஆய்வில் இறங்கும் முன்பாக நான் எதிர்கொண்ட சூழல்.

2)அம்மண சாமியப் பாக்க வந்தீங்களா? (12.6.2010)
வேதாரண்யத்தில் முன்பு பார்த்த புத்தர் சிற்பம் காணாமல் போன வருத்தமான அனுபவம்.

3) அந்த புத்தர் எந்த புத்தர்?  (31.7.2010)
பட்டீஸ்வரம் பகுதியில் பல இடங்களில் புத்தர் சிற்பங்கள் உள்ளன. இருப்பினும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் புத்தர் சிற்பத்தை முந்தைய அறிஞர்கள் சொன்ன கூற்றுகளின்படி தேடி, கண்டுபிடித்தபோது பெற்ற  மாறுபட்ட அனுபவம்.

4) புத்தர் அல்ல, கும்பகோணம் பகவர் (21.8.2010)
கும்பகோணம் பகவ விநாயகர் கோயிலுள்ள சிற்பத்தை மயிலை சீனி.வேங்கடசாமி புத்தர் என்று கூறுகிறார். நேரில் களப்பணி மேற்கொண்ட போது சிற்ப அமைப்பின்படி அது புத்தர் அல்ல என்பதை உறுதிசெய்யும் வகையில் பெற்ற அனுபவம்.

5) நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகள் (13.11.2010)
பௌத்த ஆய்வின்போது சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிற்பத்தைக் கண்டுபிடித்ததோடு மட்டுமன்றி, தமிழகத்திலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனிகளின் புகைப்படங்களைப் பெறும் முயற்சியின்போது கிடைத்த அனுபவம்.

பௌத்தம் கட்டுரைகள்/கண்டுபிடிப்புகள்  (நாளிதழ்கள் தவிர)

1.‘‘தஞ்சை, நாகை மாவட்டங்களில் புத்த மதச் சான்றுகள்’’, தமிழ்க்கலை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ் 12, கலை 1-2, பக்.98-102
2.‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், கரந்தைத்தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், துணர் 70, மலர் 1, மே 1996, பக்.98-102
3.‘‘குடந்தையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 8, ஜனவரி 1997, பக்.905-912
4.‘‘இந்து மதத்தில் புத்த மதத்தில் தாக்கம்’’ , தமிழியல் ஆய்வு, (ப.ஆ:  முனைவர் இரா.காசிராசன் மற்றும் பலர்), ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, 1997,  பக்.147-151
5.“சைவமும் பௌத்தமும்”, ஆறாம் உலகச்சைவ மாநாடு, ஆய்வுச்சுருக்கம், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1997, ப.88
6.‘‘தஞ்சையில் பௌத்தம்’’, தமிழ்ப்பொழில், துணர் 72, மலர் 1, மே 1998, பக்.3-8
7.“பௌத்தத்தில் மனித நேயம்”, மனிதநேயக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர், ஆகஸ்டு 1998
8.‘‘மும்பை அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்’’, தமிழ்ப்பொழில், துணர் 73, மலர் 3, ஜூலை 1999, பக்.95-98
9.“கல்கத்தா அருங்காட்சியகத்தில் நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்”, ஆய்வுமணி, (ப.ஆ: துரை.குணசேகரன்), தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை, மயிலாடுதுறை, 2001, பக்.160-166
10.“சம்பந்தரும் பௌத்தமும்”, திருஞானசம்பந்தர் ஆய்வு மாலை, (ப.ஆ: த.கோ.பரமசிவம் மற்றும் பலர்), திருஞானசம்பந்தர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2002, பக்.654-662
11.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்’’, தமிழ்ப்பொழில், துணர் 76, மலர் 5, நவம்பர் 2002, பக்.695-702
12.‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், மார்ச் 2002, ப.3
13.‘‘பட்டீஸ்வரம் அருகே புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, ஆவணம், தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 13, 2002, ப.185
14.“காவிரிக்கரையில் பௌத்தம்”, கல்கி தீபாவளி மலர், 2002, பக்.162-163
15.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், பிப்ரவரி 2003, ப.3
16.“தஞ்சை மண்ணில் தழைத்த பௌத்தம்”, எத்தனம், (ப.ஆ: ஆ.சண்முகம்),  அன்னம், தஞ்சாவூர்,  2002, பக்.137-137, ஜூன் 1998இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
17.‘‘திருநாட்டியத்தான்குடியில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, பௌர்ணமி, தமிழ்நாடு புத்திஸ்ட் பெடரேசன், சென்னை, ஜூலை 2003, ப.16
18.‘‘திருநாட்டியத்தான்குடி புத்தர் சிலை’’, ஆவணம், 14, 2003, ப.145
19.‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், ஜூலை 2003, ப.3
20.‘‘புத்தர் என்றழைக்கப்படும் சமணர்’’, பௌர்ணமி, அக்டோபர் 2003, பக்.20-21
21.“நாவுக்கரசரும் பௌத்தமும்”, திருநாவுக்கரசர் ஆய்வு மாலை, (ப.ஆ: த.கோ.பரமசிவம் மற்றும் பலர்), திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, 2003, பக்.738-743
22.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்- பேட்டவாய்த்தலை”, பௌர்ணமி, டிசம்பர் 2003, ப.13
23.“நாகப்பட்டின புத்த செப்புத்திருமேனிகள்”, வரலாற்றுச்சுடர்கள், (ப.ஆ: கவிமாமணி கல்லாடன்),  குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003, பக்.63-69
24.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஒகுளூர்”, பௌர்ணமி, ஜனவரி 2004, ப.14
25.“புதைந்துபோன புத்தர் வரலாறு :சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-ஆயிரவேலி அயிலூர்”, பௌர்ணமி, அக்டோபர் 2004, பக்.12-13
26.“புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, செய்திச்சோலை, ஏப்ரல் 2005, ப.24
27.“புத்துயிர் பெறும் பௌத்தம்:சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-அய்யம்பேட்டை, ஆலங்குடிப்பட்டி, இடும்பவனம்”, பௌர்ணமி, ஆகஸ்டு 2005, ப.5
28.“உள்ளிக்கோட்டை புத்தர் சிலை”, ஆவணம், 17, 2006, பக்.220-221
29.“பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு, கணையாழி, ஆகஸ்டு 2006. ப.61
30.“புத்தர் சிலை கண்டுபிடிப்பு”, குமுதம் தீராநதி, செப்டம்பர் 2006,ப.2
31.“குழுமூர் புத்தர் சிலை”, ஆவணம், 18, 2007, ப.196
32.“வளையமாபுரத்தில் புத்தர் சிலை, ரசனை, மார்ச் 2008, ப.12
33.‘‘பெரம்பலூர் மாவட்டம் குழுமூரில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், ஆகஸ்டு 2008, ப.4
34.‘‘சோழ நாட்டில் களப்பணியில் கண்ட புத்தர் சிலைகள் (1998-2007)’’, தமிழ்க்கலை, தமிழ் 13, கலை 1, செப்தம்பர்-திசம்பர் 2008, பக்.31-36
35."Buddha Statues in the vicinity of other Temples in the Chola country", Tamil Civilization, Tamil University, Thanjavur, Vol No.19, September 2008, pp.15-23
36.‘‘திருவாரூர் மாவட்டம் வளையமாபுரத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், நவம்பர் 2008, ப.4
37.‘‘வளையமாபுரத்தில் புத்தர் சிலை’’, ஆவணம், 19, 2008, பக்.226-227
38.‘‘திருச்சி காசாமலையில் புத்தர் சிலை’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர்,  டிசம்பர் 2008, ப.4
39.‘‘திருச்சியில் புத்தர் சிலை’’, ஆவணம், 20, 2009, ப.205
40.‘‘சோழ நாட்டில் மீசையுடன் கூடிய புத்தர் சிலை’’, தமிழ்க்கலை, தமிழ் 14, கலை 3, ஏப்ரல் 2009, பக்.29-32
41.“தஞ்சை அருகே 11ஆம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பத்தை வழிபடும் மக்கள், முக்குடை, ஜூலை 2009, ப.20 
42."A Resurvey of Buddha Statues in Pudukkottai Region (1993-2009)", Tamil Civilization,Vol No.23,October-December 2009, pp.62-68
43.“தஞ்சை அருகே தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, முக்குடை, ஏப்ரல் 2010, ப.29 
44.“செருமாக்கநல்லூரில் சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், மே 2010, ப.4
45.“நாகப்பட்டின மாவட்டத்தில் புத்தர் சிலைகள்”, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை, ஆய்வரங்கச் சிறப்பு மலர்,  2010,பக்.687-688
46.“பௌத்தம் வளர்த்த தமிழ்”, தினமணி செம்மொழிக்கோவை, உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர்,  பக்.237-240
47.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, செம்மொழி மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2010, பக்.188-190
48.“வேதாரணியம் அருகே சமணர் சிலை கண்டுபிடிப்பு’’, தமிழ்ப்பல்கலைக் கழகச் செய்தி மலர், செப்டம்பர் 2010, ப.2
49.‘‘சோழ நாட்டில் புத்தர் சிலைகள்-வழிபாடும் நம்பிக்கைகளும்’’, தமிழக நாட்டுப்புற ஆய்வுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2010, பக்.134-139
50.“சோழ நாட்டில் புத்தர் செப்புத்திருமேனிகள்”, தினமணி, புத்தாண்டு சிறப்பிதழ் 2011, ப.54
51.“பௌத்தம் போற்றும் மனித நேயம்”, கரந்தைத்தமிழ்ச்சங்க நூற்றாண்டு விழாச் சிறப்பு மலர், கரந்தைத் தமிழ்ச்சங்கம், 2011, பக்.179-181
52.“தஞ்சை அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு, முக்குடை, டிசம்பர் 2011, ப.20
-முனைவர் பா.ஜம்புலிங்கம்
1993 முதல் பௌத்த ஆய்வு தொடர்பாக புத்தர் சிற்பங்களைத்தேடி களப்பணி சென்றபோது கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிற்பங்கள் 
1.கங்கைகொண்டசோழபுரம்
2.காரியாங்குடி
3.கோட்டைமேடு
4.பெருமாத்தூர்
5.செங்கங்காடு
6.தஞ்சாவூர்
7.அடஞ்சூர்
8.செருமாக்கநல்லூர்
9.சுரைக்குடிப்பட்டி
10.பஞ்சநதிக்குளம்
11.தோலி (நவம்பர் 2011)


1 முதல் 6 வரை    (மேற்கோள்)
புத்தரது சிற்பங்களைத் தேடிக் களப்பணிக்குச் சென்றபோது கங்கைகொண்டசோழபுரம் (உயரம் 20"), திருவாரூர் வட்டம் தப்ளாம்புளியூர் அருகே காரியாங்குடி (16"), புதுக்கோட்டை ஆலங்குடிப்பட்டி அருகேயுள்ள கோட்டைமேடு (40"), திருத்துறைப்பூண்டி வட்டம் செங்கங்காடு (16"), குன்னம் வட்டம் பெருமத்தூர் (24"), தஞ்சாவூர் மேலவீதி வடக்குவீதி சந்திப்பில் மூல அனுமார் கோயில் பின்புறம் (34") போன்ற இடங்களில் பல அளவிலா சமணர் சிற்பங்களைக் காணமுடிந்தது. கோட்டை மேட்டில் இச்சமணரை சிவநாதர் என்று கூறுகின்றனர். செங்கங்காட்டில் புத்தர் என்று கூறி வழிபாடும் செய்து வருகின்றனர். (பா.ஜம்புலிங்கம், சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பட்ட ஆய்வேடு,தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1999, ப.160).
During field work so many Jain statues are found in the Cola country. While searching for Buddha statues, these statues are found by this scholar. Such kind of Jain statues are found in the following places:   
Gangaikondacolapuram town - 20"
Kariyankudi (Near Taplampuliyur at Tiruvarur taluk) - 10"
Kottaimedu (In Alangudipatti near Pudukottai) - 40"
Peramatthur (Kunnam taluk) - 16"
Sengangadu (Tirutthiruppondi taluk) - 16"
Thanjavur (At the backside of the Moola Anjaneyar temple) - 34"
While in Kottaimedu the statue is referred as 'Sivanathar', in Sengangadu it is referred as 'Buddha'. During field work it is also understood that the local people are unaware of the differences between Buddha and Jain statues. (B.Jambulingam, Buddhism in the Cola  country, Project Report, Nehru Trust for the Indian Collections at the Victoria & Albert Museum, New Delhi, 2002).
Dr.B.Jambulingam, a research scholar of Thanjavur Tamil, University in his survey for Buddhist antiquities in Thanjavur region came across a few Jain sculptures scattered in different desolate spots,. He has identified four seated Tirthankara stone sculputres at places like Kariyankudi near Taplampuliyur in Tiruvarur Taluk, Tiruvarur District (Sl.No.30), Kottaimedu near Alangudipatti of Pudukottai District (Sl.No.31), on the back side of the Moola Anumar temple in Thanjavur (Sl.No.32) and Senkadu of Tiruthuraipoondi taluk, erstwhile Tanjore District. Of them the one at Kottaimedu in Pudukottai Ditrict is damaged on the head portion. The Kariyankudi Tirthankara is very majestic with Bha Mandala and Chamara bearers. He is in seated ardhaparyankasana posture on a lotus pedestal carved over a rectangle base. (R.Kannan & K.Lakshminarayanan, Bulletin of the Chennai (Madras) Government Museum, Iconography of the Jain Images in the Districts of Tamil Nadu, New Series-General Sectin, Vol XVII, No.1, 2002, The Commissioner of Archaeology and Museums, Government Museum, Chennai, 600 008, p.27).
7.அடஞ்சூர்
 தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூர் அருகே உள்ள அடஞ்சூர் என்னும் கிராமத்தில் இரண்டு அடி உயரமுள்ள சமணர் சிற்பம் ஒன்று இக்கட்டுரையாளரால் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவந்திதிடல் அருகே உள்ள நல்லகூத்த அய்யனார் கோயிலில் இந்த சமண தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. இந்த சமண சிற்பத்தை அனைவரும் புத்தர் என்றே கூறி வருகின்றனர்.(பா.ஜம்புலிங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகச் செய்தி மலர், சூன் 2003, ப.2)
 8.செருமாக்கநல்லூர் (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
A sculpture of Mahavir, the 24th Thirthankara, was found at Sabarimukkayi Amman Thidal in Serumakkanallur village of Papanasam taluk in Thanjavur district recently. G.Thillai Govindarajan who is undertaking a project on 'Jainism in Thanjavur District', with aid from the Nehru Trust for Indian Collections, New Delhi and the Victoria and Albert Museum in London and B.Jambulingam, Researcher, Tamil University, found it during their field study. The three-foot high, 2.25 foot wide sculpture was on a pedestal with Mahavir in the Padmasana posture. It has lion throne, chamara bearers, triple umbrella and a tree. The face and the top portion of the umbrella are broken. The sculpture belongs to the later Chola period. The locals worship this sculpture as Karuppasamy. Daily worship is done and special pujas are conducted on Fridays in the month of Aadi, Mr Govindarajan said. (Mahavir sculpture found, The Hindu, 13th June 2009, p.5)  
9.சுரைக்குடிப்பட்டி  (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
தஞ்சை மாவட்டம்  பூதலூர் அருகே சுரைக்குடிபட்டி கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. அங்கு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது டெல்லி நேரு டிரஸ்ட் அமைப்பின் உதவியுடன் பா.ஜம்புலிங்கம் வழிகாட்டுதலின்படி தஞ்சை மாவட்டத்தில் சமணம் என்ற தலைப்பில் கொத்தங்குடி உராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோ.தில்லை கோவிந்தராஜன் அசிரியர்கள் எஸ்.பாஸ்கர், ரவிவர்மன், பழனிச்சாமி மற்றும் முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. 3 1/4 அடி உயரமும், 2 1/2 அடி அகலமும் கொண்ட இந்த சிற்பம் ஒரு பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் சிம்மாசனத்தில் உள்ளது. சிற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் நின்ற நிலையில் யக்சர்கள் காணப்படுகின்றனர். தலைக்கு மேல் முக்குடை உள்ளது. நீண்ட காதுகளும், மூடிய நிலையில் கண்களும் கொண்ட இச்சிற்பம் திகம்பரமேனியாக உள்ளது. இச்சிற்பம் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. (பூதலூர் அருகே சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு, தினத்தந்தி, 24.2.2010, ப.20).
10.பஞ்சநதிக்குளம் மேற்கு (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் முள்ளியாற்றுக்குள் மக்கள் துணி துவைக்க பயன்படுத்திவரும் 11ஆம் நூற்றாண்டு சமணர் சிற்பம் என்பது தெரிய வந்தது. இது குறித்து முனைவர் பா.ஜம்புலிங்கம், தில்லை கோவிந்தராசன் ஆகியோர் தெரிவித்தது : "தலை பகுதி காணப்படாத சமணர் கல்சிலைஅமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ளது. இரு பக்கங்களிலும் யக்சிகள் காணப்படுகிறது. பீடத்தின் வலது பக்கத்தில் சிம்மம் காட்டப்பட்டுள்ளது. பீடத்துடன் 57செமீ உயரம், 45 செமீ அகலம் உள்ளது. நாகை மாவட்டத்தில் ஏற்கெனவே நாகை வெளிப்பாளையம், புளியகுடி ஆகிய இடங்களில் சமணர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தனர். (பழங்காலச்சிலை குறித்து ஆய்வு, தினமணி, 21 ஆகஸ்ட் 2010, ப.4)

11.தோலி (திரு தில்லை கோவிந்தராஜனுடன் இணைந்து)
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தோலி கிராமத்தில் 24ஆவது சமண தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தில்லை கோவிந்தராசன், முனைவர் பா.ஜம்புலிங்கம்  ஆகியோர் தெரிவித்தது : "இந்த சிற்பம் 32 அங்குலம் உயரமும், 19 அங்குலம் அகலமும் கொண்டது. இந்தச்சிலை பத்மாசனத்தில் தியான கோலத்தில் உள்ளது. சிம்மாசனம், சாமரம் வீசும் யட்சர்கள், முக்குடை போன்ற அமைப்புகள் இந்தச் சிற்பத்தில் காணப்படுகின்றன. நீண்ட காதுகளும், மூடிய நிலையில் கண்களும் கொண்ட இந்தச் சிலை திகம்பர மேனியாக உள்ளது. தலையின் பின்புறம் பிரபை காணப்படுகிறது. இது பிற்காலச்சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளான வேம்பழகன்காடு, முன்னியூர், செங்கங்காடு, தம்ளாம்புலியூர், பஞ்சநதிக்குளம், நாகப்பட்டினம், புலியூர் செராங்குடி ஆகிய ஏழு இடங்களில் சமண சிற்பங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பகுதியில் சமணம் தழைத்திருந்ததை அறியமுடிகிறது.  (தோலி கிராமத்தில் மகாவீரர் சிலை கண்டெடுப்பு, தினமணி, 10 நவம்பர் 2011, ப.5).
-முனைவர் பா.ஜம்புலிங்கம்
சோழ நாட்டில் பட்டீஸ்வரம் பகுதியில் அதிகமான எண்ணிகையிலான புத்தர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் தொடர்ந்து என்னால் களப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்டோபர் 1993இல் தேட ஆரம்பித்து பட்டீஸ்வரம் பகுதியில் இரு சிற்பங்களைக் கண்டுபிடித்தபோது பெற்ற மகிழ்ச்சி ஆகஸ்டு 2011இல் அச்சிற்பங்களைத் தேடிப் போய் அவை காணாமல் போனதை அறிந்ததும் மறைந்துவிட்டது. அது தொடர்பான  அனுபவப் பதிவு.             
அக்டோபர் 1993
பட்டீஸ்வரம் கிராம தேவதை கோயிலில் ஒரு புத்தர் சிற்பம் உள்ளதாக மயிலை சீனி வேங்கடசாமி அவரது பௌத்தமும் தமிழும் என்ற நூலில் கூறிய செய்தியை அடிப்படையாகக்கொண்டு துர்க்கையம்மன் கோயில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாகத் தேடி கடைசியில் பட்டீஸ்வரம் கோவிந்தக்குடி சாலையில் உள்ள முத்துமாரியம்மன்கோயிலில் புத்தரைத்தேடி கண்டுபிடித்து அது தொடர்பான செய்தியை ஆய்வேட்டில் சேர்த்திருந்தேன்.அக்டோபர் 1993 முதல் தேட ஆரம்பித்து அக்டோபர் 1998இல்தான் அதனைக் கண்டுபிடிக்க முடிந்தது.  அவ்வாறு அச்சிற்பத்தைத்தேடி சென்றபோது பட்டீஸ்வரம் பகுதியில் இன்னும் சில சிற்பங்கள் இருப்பதாகத் தெரிய வரவே, பழையாறை, சோழன்மாளிகை, உடையாளூர், திருவலஞ்சுழி உள்ளிட்ட பகுதிகளை ஒன்றுவிடாமல் தேட ஆரம்பித்தேன். அவ்வாறான இரு சிற்பங்களை முதன்முதலாக இப்பகுதியில் புதியதாகக் காணமுடிந்தது.
பிப்ரவரி 2002
வழக்கமான தேடலின் போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கிமீ தொலைவிலுள்ள கோபிநாதப் பெருமாள் என்னுமிடத்தருகே ஒரு தோப்பில் தலையில்லாத புத்தர் சிற்பம் என்னால் கண்டுபிடிக்கப் பட்டது. பிப்ரவரி 2002இல் தமிழகத்தின் பெரும்பாலான செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானது. பீடமின்றி உள்ள இச்சிற்பத்தின் உயரம் சுமார் 2 அடி. தலைப்பகுதி இல்லை. அமர்ந்த பத்மாசன நிலையில் தியானகோலம். மார்பில் மேலாடை.  வலக்கரத்தில் தர்மசக்கரக்குறி. திரண்ட மார்பு. திண்ணிய தோள்கள். இவையனைத்தும் பத்திரிக்கைச்செய்தியில் கூறப்பட்டிருந்தன. பத்திரிக்கைச் செய்தியைப் பார்த்த தனியார் ஆங்கிலச்செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தினர் என்னைத் தொடர்பு கொண்டு அச்சிற்பத்தைக் காண விரும்புவதாகத் தெரிவித்தனர். அவர்களை அழைத்துச்சென்றபோது  அச்சிற்பத்தைப் பற்றிய கூறுகளை என்னிடம் கேட்டனர். அவை அவர்களால் பதிவு செய்யப்பட்டு மறுநாள் தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. அந்த சிற்பத்தை அங்கு பார்க்கச் சென்றபோது அருகே ஒரு கருங்கல் தலைகீழாகக் கிடந்தது. புரட்டிப் பார்க்கும்போது அது ஓர் உடைந்த சிற்பமாக இருப்பதை அறியமுடிந்தது.  போதிய நேரமின்மையாலும்,  அச்சிற்பம் தலை மற்றும் உடற்பகுதியின்றி காணப்பட்டதாலும்  குழப்பம் வரவே அங்கிருந்து தொலைக்காட்சிக் குழுவினருடன் திரும்பிவிட்டேன். மறுபடியும் எப்படியும் அச்சிற்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்தது. புத்தரா அல்லது சமண தீர்த்தங்கரரா என்ற குழப்பம் மனதில் நீடித்தது.

சூன் 2002
நான்கு மாதங்கள் கழித்து மறுபடியும் களப்பணி. அப்போது என் புகைப்படக்கருவி பழுதாகியிருந்த நிலையில் புகைப்படக்காரர் ஒருவரை அழைத்துச் சென்றேன். பிப்ரவரி 2002இல் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பத்திற்கருகே இருந்த அச்சிற்பத்தில் புத்தர் சிற்பத்தற்குரிய கூறுகள் இருந்தன. பீடத்தின்மீது அமர்ந்த நிலையில் இருப்பதைக் கால்கள் தெளிவுபடுத்தின.  கால்களின் மேல் கைகள் தியான கோலத்தில் வானை நோக்கிய நிலையில் இருந்தன. கையில் தர்மசக்கரக்குறி இருந்தது. அச்சிற்பமும் புத்தர் என உறுதி செய்தபின்,  புகைப்படமெடுத்துக்கொண்டேன். கோபிநாதப்பெருமாள் என்னுமிடத்தின் அருகே குறுகிய கால இடைவெளியில் ஒரே இடத்தில் இரு சிற்பங்களைக் கண்டுபிடித்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அச்சிற்பங்கள் கவனிப்பாரின்றிக் கிடப்பதைப் பார்த்தபோது வேதனையாக இருந்தது.  நான் 2002இல் காணும் வரை இந்த இரு சிற்பங்களைப் பற்றி எவ்வித பதிவும் இல்லாத நிலையில் இவற்றை எனது ஆய்வுக்கு மிகவும் முக்கியமான ஆதாரங்களாகக் கொண்டேன்.  
ஆகஸ்டு 2011
சுமார் பத்து ஆண்டுகள் கழித்து அச்சிற்பங்களைப் பார்க்க ஆவல் வரவே இரு புத்தர்  சிற்பங்களையும் பார்ப்பதற்காக பட்டீஸ்வரம் கிளம்பினேன். தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் திருவலஞ்சுழி சென்றேன். அங்கிருந்து பட்டீஸ்வரம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஆங்காங்கே வயல்களை ரசித்துக்கொண்டும் உள்ளூர்க்காரர்களை விசாரித்துக் கொண்டும் முன்பு இரு புத்தர் சிற்பங்களும் இருந்த இடம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். போகும் வழியில் ஆங்காங்கு வந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். 'முன்னாடி தென்னந்தோப்பா இருந்துச்சு இப்ப அந்தப் பக்கமெல்லாம் வாழைதான்' என்றார் ஒருவர். 'செலை எதுவும் இங்கு இல்லை' என்றார் ஒருவர். 'ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடிகூட பாத்தேன்' என்றார் ஒருவர். 'வாழைத்தோப்புல சனி மூலையிலே கெடந்ததுன்னு சொன்னாங்க' என்றார் ஒருவர்.  கிட்டத்தட்ட இடத்தை நெருங்கி விட்டேன். தென்னந்தோப்பில் ஒரு வாழைத்தோப்பு உருவாகியிருந்தது. வாழைத்தோப்பைச் சுற்றிச்சுற்றி வந்து பார்த்தேன். சிற்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருந்த பிற தோப்புகளைப் பார்த்தேன். மூங்கில் மரங்கள் ஒரு புறம் காடாகக் காட்சியளித்தன. அங்கு ஏதாவது தென்படுகிறதா எனப் பார்த்தேன். முள் குத்தியதுதான் மிச்சம். வெயில் உச்சி மண்டையைப் பிளக்க ஒவ்வொரு தோப்பாகத் தேட ஆரம்பித்தேன். பார்க்கும் கல்லெல்லாம் புத்தராகத் தெரிந்தது. ஆனால் புத்தர் இல்லை. தென்னங்கீற்று பின்னிக் கொண்டிருந்த ஒருவர், 'முன்னாடி செலை இருந்துச்சுன்னு சொல்வாங்கப்பா, இப்ப இருக்கா இல்லயான்னு  தெரியாது' என்றார். சுமார் ஐந்து மணி நேரமாக நான் சுற்றிக் கொண்டிருப்பதை ஆங்காங்கு இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். 'ஏதோ செலையைத் தேடுறாராம்' என்று ஆங்காங்கு செய்தி பரவியது. நான் பார்த்த இடத்தில் சிற்பங்கள் இல்லை. உடல் சோர்வடைய ஆரம்பித்தது. உச்சி வெயில். ஒதுங்க இடமில்லை. கடைசியில் அடர்த்தியாக மரங்கள் இருந்த இடத்துக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்தேன். கையில் எடுத்துச்சென்ற நொறுக்குத்தீனியும் குடிநீரும் கொஞ்சம் தெம்பைத் தந்தன. மறுபடியும் நம்பிக்கை தளராமல் தொடர்ந்து தேடினேன். எங்கும் புத்தர் இல்லை. மனம் சோர்வடையவே, திரும்ப ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தபோது பரிச்சயம் ஆனவர் போல ஒருவரைக் கண்டேன். அவரிடம் பேச்சு கொடுத்தேன். புத்தர் சிற்பங்கள் பற்றிக் கூறியதும் அவர், 'பத்து வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு மூணு தடவை நீங்க இங்க வந்திருக்கீங்க. அடிக்கடி நான் உங்களைப் பாத்திருக்கேன். மறந்துட்டீங்களா, ரெண்டு புத்தர் பாத்தோமே ரெண்டு புத்தர் கையிலேயும் சக்கரம் இருந்துச்சே அதத்தானே பார்க்க வந்தீங்க' என்றார். சோர்வு நீங்கி புத்துயிர் வந்தது எனக்கு. 'வாழைத்தோப்புல சனி மூலைலே ஒரு மரத்துக்குக் கீழே வச்சிருக்காங்க, வாங்க காமிக்கிறேன்' என்று கூறி அழைத்துச் சென்றார். நான் அனைத்து இடங்களையும் முழுமையாகத் தேடினாலும் அவரது வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. அவரைத் தொடர்ந்தேன். மிகவும் வேகமாகச் சென்று அவர் கூறிய இடத்தைக் காண்பித்தார். நாங்கள்  நின்ற இடம் மேடாக இருந்தது. அவர் கை காட்டிய இடம் தாழ்வாக இருந்தது. அவர் காட்டிய இடத்தில் எதுவுமில்லை. அவர் அங்கு புத்தர் சிற்பங்கள் இருப்பதை அண்மைக்காலம் வரை பார்த்ததை அவரது வார்த்தைகள் உறுதி செய்தன. என்னை அழைத்துவரும் வரை அவர் அங்கு புத்தர் சிற்பங்கள் இருப்பதாகவே எண்ணி அழைத்து வந்து காண்பித்துள்ளார். புத்தர் சிற்பங்கள் இல்லையென்றதும் அவருக்கு அதிர்ச்சி.  'கொஞ்ச நாளுக்கு முன்னேகூட நான் பார்த்தேன்' என்றார் அவர். அந்தக் கொஞ்ச நாள் என்பது கொஞ்ச நாளா. கொஞ்ச வருடங்களா என்று எனக்குப் புரியவில்லை.  மறுபடியும் முன்னர் நான் பார்த்த அனைத்து தோப்புகளில் சுற்றி சுற்றித் தேடினார். சிற்பங்கள் இல்லை என்றதும் மிகவும் ஆதங்கப்பட்டு அருகே இருந்த கத்திரிக்கொல்லையைக் காண்பித்து அங்கிருப்பவரை விசாரித்தால் தெரியும் என்றார். மிகவும் நம்பிக்கையோடு வந்து தானும் ஏமாந்து நம்மையும் ஏமாற்றிவிட்டாரே என எண்ணிக்கொண்டே கடைசி சந்தர்ப்பமாக கத்திரிக்கொல்லை சென்றேன். வேகாத வெயிலில் பணி பார்த்துக்கொண்டிருக்கும் அவரைத் தொந்தரவு செய்வது எனக்கு சங்கடமாக இருந்தது. ஆய்வின்மீது உள்ள நாட்டமும், எப்படியும் புத்தரைக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற எண்ணமும் என்னை அவரிடம் பேச வைத்தன. நான் வந்த விவரத்தைக் கூறியதும் அவர், 'நிலத்தை சமன் செய்யறப்ப தனியா ஓரமா வச்சாங்க. கொஞ்ச நாளுக்கு முன்னாடி வரைக்கும் சிலைங்க இருநதுச்சு. அப்புறம் காணல. எங்க பொழப்ப பாக்கவே நேரம் சரியா இருக்கு. நீங்க சொன்னதுக்கப்புறம்தான் அந்த சிலைங்களோட அருமை தெரியுது. முன்னாடியே தெரிஞ்சுருந்தா பத்திரமா எடுத்து வச்சிருந்திருப்போம்' என்றார். 'எவ்வளவு நாள்களுக்கு முன்பு வரை சிற்பங்களைப் பார்த்தீர்கள்?' என்று நான் கேட்கவே அவர், 'எனக்கு வருஷக் கணக்கெல்லாம் தெரியாது, ஆனா விதைக்கறதை கணக்கு வச்சுச் சொல்லிடுவேன்' என்றுகூறிவிட்டு 'முதல்ல கத்திரி, அடுத்த பருவம் வெண்டை, அப்புறம் வாழை. மறுபடியும் வாழை. இப்பயும் வாழை. கத்திரி இருந்தப்ப சிலையைப் பார்த்த ஞாபகம்' என்றார். அவரது கணக்குப்படி பார்க்கும்போது 2006 அல்லது 2007இல் இருந்திருக்குமா என்றபோது 'ஆமா நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இருந்துச்சு' என்றார். அவரிடம் மேற்கொண்டு எவ்வித விவரமும் பெறமுடியவில்லை. காடு மேடு கழனி என்றெல்லாம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது ஒருவர் 'கொஞ்ச தூரம் போனா ஒரு வாத்தியார் வீடு இருக்கு, அவரைக் கேட்டால் தெரியும்' என்றார். மறுபடியும் புத்துணர்வு வந்தது. நடந்தேன். செல்லும் வழியில் புத்தரைப் பற்றி விசாரித்துக்கொண்டே சென்றேன். சிலர் அண்மைக்காலம் வரை பார்த்ததாகக் கூறினர். ஆங்காங்கு கிடைத்த தகவல்களுடன் ஆசிரியரைச் சந்தித்தால் புதிய செய்தி ஏதாவது கிடைக்கும் என எண்ணினேன். தோப்பிலும் காட்டிலும் மேட்டிலும் பலரைச் சந்தித்து கிடைத்த செய்திகளைவிட அவரிடம் இன்னும் செய்தி இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரைச் சந்தித்தேன். நன்கு வரவேற்று ஆர்வமுடன் விசாரித்தார். முறையான அறிமுகத்துக்குப் பின் அனைத்து விவரங்களையும் அவரிடம் கூறினேன். அவர், 'புத்தரா? இந்தப் பகுதியிலா?' என ஆச்சர்யத்துடன் கேட்டுவிட்டு, 'அப்படி எதுவும் இல்லை' என்றார் மிகவும் தெளிவாக. அந்த இரு புத்தர்சிற்பங்களைப் பற்றியும் மறுபடியும் எடுத்துக்கூறிவிட்டு, ஏதாவது செய்தி கிடைத்தால் தெரிவிக்கும்படி கூறிவிட்டுக் கிளம்பினேன். 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்த சிற்பங்கள் இப்போது இல்லை என்பதை நினைக்குமபோது வேதனையாக இருந்தது. 'தரையைச் சமன் செய்யும்போது மண்ணில் மூடப்பட்டிருக்குமா? அல்லது புதையுண்டிருக்குமா? யாராவது பாதுகாப்பு கருதி எடுத்துச்சென்றிருப்பார்களா?' என பலவித எண்ணங்கள் எழுந்தன. வரலாற்றின் சுவடுகள் கண்ணுக்கு முன் மறைகிறதே என ஆதங்கப்பட்டேன். எப்படியும் சிற்பங்கள் இருப்பதாக செய்தி வரும் என்று எண்ணி அங்கிருந்து கிளம்பினேன், நம்பிக்கையுடன்.             

குறிப்பு: பட்டீஸ்வரம் கிராமத்தேவதை கோயிலில் இருந்த புத்தராக மயிலை சீனி வேங்கடசாமி குறிப்பிட்ட சிற்பத்தைப் பட்டீஸ்வரம் முத்துமாரியம்மன் கோயிலில் களப்பணியில் கண்டபோது பெற்ற அனுபவங்களை அறிய http://tamilindru.blogspot.com என்ற வலைப்பூவில் 31.7.2010இல் வெளியான பௌத்தச் சுவட்டைத்தேடி: அந்த புத்தர் எந்த புத்தர் என்ற தலைப்பிலான கட்டுரையை அன்புகூர்ந்து காண்க.
முனைவர் பா.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர்,
 தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் 613 010

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில்  ஆய்வியல் நிறைஞர்  பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வைத் தொடங்கியபோது பௌத்தம் தொடர்பான பதிவுகளைத் தேடி களப்பணி மேற்கொண்டேன்.  அவ்வாறான ஒரு களப்பணியின்போது கும்பகோணம் அருகே புத்தர் கோயில் இருந்ததற்கான ஒரு கல்வெட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதை அறிந்தேன்.  கும்பகோணம் பகுதியில் பௌத்தம் இருந்ததற்கான அந்த அரிய சான்றை மையமாகக் கொண்டு கட்டுரை எழுதினேன். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பொழில் இதழில் வெளியான என்னுடைய முதல் கட்டுரை அதுவேயாகும். அக்கட்டுரையே இம்மாத இடுகையாகும். என்னுடைய அந்த கட்டுரையையும், பிற கட்டுரைகளையும் வெளியிட்டு வரும் தமிழ்ப் பொழில் இதழுக்கு நன்றி. இனி பௌத்தச் சுவட்டைத் தன்னகத்தே கொண்ட கும்பகோணத்திற்குப்  பயணிப்போம்........... 

குடந்தையின் பெருமை
     எப்போதும் வற்றாத நீர்ப்பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபய நாடு, கிள்ளி நாடு, செம்பியர் நாடு, அகளங்க நாடு, பெருநீர் நாடு, பொன்னிநாடு எனப் பல பெயர்கள் உண்டு. இந்நாட்டின் பெருமையை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் :
      பூவினுள் பதுமம் போலும் புருடருள் திருமால் போலும்
     காவினுள் கற்பம் போலும் கலைகளுள் ஞானம் போலும்
     ஆவினுள் காரான் போலும் அறத்துனுள் இல்லறமே போலும்
     நாவினுள் மொய்ந்நாம் போலும் நாட்டினுள் சோழ நாடும்
   இத்தகைய பெருமை உடைய சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அமைந்துள்ளது. சோழ நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் இம்மாவட்டத்தில் கலைக்களஞ்சியமாக விளங்கும் பல சைவ மற்றும் வைணவக் கோயில்களையும் சங்கர மடம், சாரங்கதேவர் மடம், மௌனசாமி மடம் போன்ற பல மடங்களையும் தன்னகத்தே கொண்டது கும்பகோணம்.
  கும்பகோணத்திற்கு புனித யாத்திரை செல்வோர் அங்குள்ள பஞ்சகுரோசத் தலங்களுக்கும் சென்று விதிப்படி நீராடித் தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே அங்கு செல்ல வேண்டும் என்பர். திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர் என்பவையே அவை. அமுதம் நிறைந்த குடம் சிவபெருமான் திருவருளால் சிதைந்து அதிலுள்ள அமுதம் நாலாப்பங்களிலும் பரவி ஐந்து குரோசம் வரையில் சென்று செழுமையாக்கியதால் இந்தத் தலங்கள் சிறப்பு பெற்றதாகக் கூறுவர். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல, கும்பகோணத்துக்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. இத்தகு பெருமை வாய்ந்த இந்த நகருக்கு குடமூக்கு, குடந்தை என்ற பெயர்களும் உண்டு. 
காவிரிப்பூம்பட்டினம்
   கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பௌத்தத்தின் தாக்கத்தினை காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக காவிரிப்பூம்பட்டினத்திலும், நாகப்பட்டினத்திலும் காணமுடியும்.
  சங்ககாலத் தமிழ்நாட்டில் சோழ மன்னர்க்குரிய தலைமை நகரங்களுள் ஒன்றாகவும் இந்நாட்டு வணிக வளர்ச்சிக்குக்குரிய கடற்றுறைப் பட்டினமாகவும் விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்ட தற்போதைய பூம்புகார். இங்கு ஏழு விகாரைகள் இருந்தன என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை கூறும் செய்தி. பூம்புகாரின் பகுதியாக விளங்கிய இந்நாளைய மேலையூரில் பூமிக்கடியில் புதையுண்டிருந்த புத்த விகாரைப் பகுதியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிப்ரவரி 1995இல் இப்பகுதியில் கடலுக்கடியில் நான்காவது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்
   இடைக்காலச் சோழர் ஆட்சியில் நாகப்பட்டினம் தமிழகக் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் முக்கியத் துறைமுகமாக மட்டுமன்றி சமய மையமாகவும் சிறந்து விளங்கியது. இங்கு கி.பி.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய  நாட்டின் மன்ன் சைலேந்திர வம்சத்தினைச் சேர்ந்த திருமாற விஜயோத்துங்கவர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபோது ராஜராஜன் (கி.பி.985-1014) அதனை ஊக்குவித்ததாக லெய்டன் பட்டயம் கூறுகிறது. சோழ மன்னனின் உடன்பாட்டுடன் கட்டப்பட்ட இந்த புத்த விகாரத்திற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக அளிக்கப்பட்டது. அவன் இறந்தபிறகு அவனது மகன் ராஜேந்திரன் (கி.பி.1012-1044) இந்நிவந்தத்தை உறுதிப்படுத்தியதோடு அதனைச் செப்பேட்டுப்  பட்டயமாகவும் பொறிக்கச் செய்தான். 1867 முதல் நாகப்பட்டினத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகள் மூலம் இங்கு பௌத்தம் பரவியிருந்ததை உணரமுடிகிறது.
பௌத்த மையங்கள்
     இவை தவிர புத்தர் சிற்பங்கள் மற்றும் கோயில்கள் இருந்த இடங்களாக இப்பகுதியில் பூதமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம், சங்கமங்கலம், திருவிலந்துறை, கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், எலையனூர், பெருஞ்சேரி, கோட்டப்பாடி, மாயவரம் (மயிலாடுதுறை) போன்ற இடங்ளைக் கூறலாம். தஞ்சைப் பெரியகோயிலிலும் புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
நாயக்கர் காலக் கல்வெட்டு
     தஞ்சையை ஆண்ட மன்னர்களில் முக்கியமான இடத்தை வகிப்பவர்கள் சோழர், நாயக்கர் மற்றும் மராட்டியர்களே. தஞ்சை வரலாற்றில் பெரும் பங்கு வகித்தவர்கள் சோழர்களாவர். களப்பிரர்கள் ஆட்சியில் இருந்த தமிழகத்தை மீட்ட விஜயாலயச்சோழன் தஞ்சையில் சோழர் ஆட்சியைப் புதுப்பித்தபிறகே மீண்டும் சோழர் ஆட்சி சிறப்பான நிலைக்கு வந்தது. சோழ மண்டலத்தில் சோழப் பேரரசர்கள் காலத்தில் போற்றப்பெற்ற பௌத்தம் பின்னர் மெல்லமெல்ல அருக ஆரம்பித்தது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இறுதி நிலையை அடைந்தது. இவ்வாறு மறையத் தொடங்கிய பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் செவ்வப்ப நாயக்கர் காலத்திற்குப் பிறகு தென்படவே இல்லை.
பௌத்த இறுதிச்சுவடுகள்
   பௌத்தத்தின் இறுதிச்சுவடுகளை தன்னகத்தே கொண்டு பெருமை பெற்றுள்ள  நகர் கும்பகோணம் ஆகும். தேவாரப் பாடல்கள் பெற்ற 274 தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள 127 தலங்களில் திருக்குடமூக்கு என்னும் கும்பகோணம் உள்ளது. அங்குள்ள கும்பேஸ்வரர் கோயிலில், பௌத்தம் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.    இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற கல்வெட்டே அந்தச் சான்றாகும். இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்டதாகும். இது குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜுலைத்திங்கள் ஆகும்.   இக்கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்.
      விக்கிரம வருடம் ஆடி மாதம் 22ஆம் தேதி
      செவ்வப்ப நாயக்க ஐயன் தர்மமாக
      திருவிலந்துறை புத்தர் கோயிலில்
      தீத்தமாமருந்தார் நாயகர் நிலத்திலே
     திருமலைராசபுரத்து விசேச
      மகாசனங்கள் வாக்கால் வெட்டிப் போகையில்
     திருமலைராசபுரத்தில் அகரத்தில்
     திருப்பணி சேர்வையாக விட்ட நிலம்....
     கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில் திருநாகேஸ்வரம்- திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை.  செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக அளித்ததைக் கும்பகோணம் கல்வெட்டு கூறுகின்றது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை புத்தர் கோயிலொன்று பௌத்தர்களால் போற்றப் பெற்று வந்ததற்கான இறுதிச்சான்றாகத் திகழ்வது இந்தக் கல்வெட்டேயாகும். களப்பணி மேற்கொண்டபோது அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றையோ புத்தர் சிற்பத்தையோ காணமுடியவில்லை. எனினும் தஞ்சை மாவட்டத்தில் 16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் இருந்ததை இக்கல்வெட்டு தெளிவாக எடுத்துரைக்கிறது. சோழர்களைப் போல நாயக்கர்கள் பௌத்தத்திற்கு ஆற்றிய பங்கினையும், காஞ்சீபுரம், பூம்புகார், நாகப்பட்டினம் போன்றவற்றைத் தொடர்ந்து கும்பகோணத்தில் பௌத்தத்தின் பதிவையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

துணை நின்றவை
அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, கும்பகோணம், 1992
கலைக்களஞ்சியம், தொகுதி 7, தமிழ் வளர்ச்சிக்கழகம், சென்னை, 1960
சதாசிவப்பண்டாரத்தார், டி.வி., காவிரிப்பூம்பட்டினம், மாதவி மன்றம்,
      மேலப்பெரும்பள்ளம், 1959
சோமலெ, நமது தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், பாரி நிலையம், சென்னை,
       1961
பாலசுப்ரமணியன், குடவாயில்., பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள், தஞ்சாவூர்
     நாயக்கர் வரலாறு, கையெழுத்துப்படி
வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 11, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991
வேங்கடசாமி, மயிலை.சீனி., பௌத்தமும் தமிழும், தென்னிந்திய சைவ
     சித்தாந்த நூற்திப்புக்கழகம், சென்னை, 1957bபொ
Epigraphia Indica, Vol.XIX (1927-28), No.36, Kumbakonam inscription of Sevvappa Nayaka.

*தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 1, ஏப்ரல் 1996, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இதழில் வெளியான கட்டுரையின் திருந்திய வடிவம். இக்கட்டுரையை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.

-முனைவர் பா.ஜம்புலிங்கம்

எனது முனைவர் பட்ட ஆய்விற்காக சோழ நாட்டைச் சார்ந்த புத்தர் சிற்பங்களைப் பற்றிய குறிப்புகளைச் சேகரிக்க பிப்ரவரி 1999இல் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்குச் சென்றிருந்தேன்.  எனது கட்டுரைகளில் அத்தொகுப்பு பற்றி குறிப்பிட்டு வருகிறேன். அந்நிறுவனத்தார் மேற்கொள்ளும் சமணத்திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சமணர் சிற்பங்களைப் பார்க்க விரும்பி முனைவர் நா.முருகேசன் தலைமையிலான குழுவினர் என்னைத் தொடர்பு கொண்டனர்.  எனது ஆய்வு பௌத்தம் தொடர்பானதாக இருப்பினும், எனது வலைப்பூவில் களப்பணியில் கண்ட சமணர் சிற்பங்களைப் பற்றி ஓர் இடுகை இட்டிருந்தேன். அதனடிப்படையில் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது அத்திட்டத்திற்கு உதவ இசைந்தேன். எனது மேற்பார்வையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்ற திட்டத்தை மேற்கொள்ளும் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களை அழைத்தபோது அவரும் மனமுவந்து எங்களுடன் இணைந்துகொண்டார். 3.11.2011 அன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணி மேற்கொண்டோம். அப்போது ஒரு புதிய சமணர் சிற்பத்தைக் கண்டுபிடித்தோம். அதனைப் பத்திரிக்கைகள் மூலமாக வெளிவுலகிற்குக் கொணர்ந்தோம். அக்களப்பணியைப் பற்றிய பதிவே இம்மாத இடுகையாகும். 

1.செங்கங்காடு: புத்தர் சிற்பங்களைத் தேடி அலைந்தபோது தில்லைவளாகம் தெற்குப்பகுதியில் வேம்பழகன்காடு (செங்கங்காடு) என்னுமிடத்தில் 1999இல் நான் பார்த்த சமணர் சிற்பத்தை தற்போது பார்த்தோம். இச்சிற்பத்தைப் பற்றி எனது ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளேன். சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள நூலில் இக்கண்டுபிடிப்பு பற்றிய பதிவு உள்ளது.  முன்பு நான் வந்ததை நினைவுகூர்ந்தார் அங்கிருந்த திரு வி.என்.கோவிந்தசாமி வைத்தியர். அப்போது இச்சிற்பத்தைப் புகைப்படம் எடுத்தபோது அருகிலிருந்த சிலர் நான் புகைப்படம் எடுத்ததைக் கண்டித்து புகைப்படக் கருவியை என்னிடமிருந்து பறித்து வாக்குவாதம் செய்ததும், தப்பித்தோம் பிழைத்தோம் என்று நான் அங்கிருந்து திரும்பியதும் எனக்கு நினைவிற்கு வந்தது. கடந்த முறை நடந்ததைப் பற்றி  நான் எதுவும் பேசவில்லை. வாஞ்சையுடன் உதவினார் வைத்தியர்.  சிற்பத்தைப் புகைப்படம் எடுத்தோம். அருகில் மற்றொரு சிற்பம்  இருப்பதாக அவர் கூறினார். தகவலுக்கு  நன்றி கூறிவிட்டுக் கிளம்பினோம்.
2.ஜாம்பவானோடை: சுமார் 1 கிமீ கால்நடையாகச் செல்லவேண்டியிருந்தது. முன்பு பெய்திருந்த மழையின் காரணமாக நடப்பதே சிரமமாக இருந்தது. ஒரே சேறு. ஒரு காலை ஊன்றிவிட்டு மறுகாலை எடுப்பதற்குள் அடுத்த கால் உள்ளே பதிந்துவிட, நடக்க மிகவும் சிரமப்பட்டு உரிய இடத்தைச் சென்றடைந்தோம். அங்கு இரு தேவியருடன் இருந்த அய்யனார் சிற்பம் இருந்தது. அங்கிருந்து கிளம்பினோம். அப்போது அங்கிருந்தோர் தோலி என்னும் இடத்தில் ஒரு சிற்பம் இருப்பதாகக் கூறினர். சிற்பத்தைத் தேடிக்கொண்டே பயணித்தோம்.
3.தோலி: திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலையில் சங்கேந்தி அருகேயுள்ள தோலிக்கு வந்து சேர்ந்தோம். எங்களது முந்தைய களப்பணியில் பார்க்காத புதிய சமணர் சிற்பத்தைக் கண்டபோது எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் மிகவும் அழகாக அச்சிற்பம் இருந்தது. உரிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். இச்சிற்பம் தொடர்பான செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிட்டோம்.     
4.பஞ்சநதிக்குளம்: பஞ்சநதிக்குளம் செல்லும்முன் அங்குள்ள சிற்பம் பற்றிய பின்னணியைப் பார்ப்போம். கடந்த ஆண்டு தினமணி இதழில் வேதாரண்யம் பகுதியில் கவனம் பெறாமல் கிடக்கும் பழைமையான பொருள்கள் குறித்து படங்களுடன் வெளிவந்த செய்தியில், தொன்மையான பொருள்களை ஆய்வு மேற்கொண்டு வரலாற்றுப் பதிவுகளை அறிய வலியுறுத்தப்பட்டிருந்தது (17.8.2010). அச்செய்தியில் முள்ளியாற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு தலையில்லா சிற்பத்தின் புகைப்படமும், ஒரு கல்வெட்டின் புகைப்படமும் இருந்தன. தலையில்லாத  சிற்பம் புத்தராக இருக்குமோ என்ற ஐயம் எனக்கு எழுந்தது. உடன் தினமணி நிருபர் திரு கே.பி.அம்பிகாபதி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.  சமணராக இருப்பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணம் என்னும் திட்டத்திற்கு உதவியாக இருக்கும் என்ற நிலையில் திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களையும் அழைத்துக்கொண்டேன். இருவரும் 19.8.2010 அன்று அப்பகுதிக்குச் சென்றோம்.  எங்களின் கள ஆய்வில் திரு அம்பிகாபதி மிகவும் துணையாக இருந்தார். சிற்பம் இருந்த இடத்திற்கு அவர் எங்களை அழைத்துச் சென்றார். துணிதுவைக்கப் பயன்படுததப்பட்டு வந்த கல்லைப் புரட்டிப் பார்த்தபோது அது சமணர் சிற்பம் என்பது உறுதியானது. களப்பணியின்போது அருகில் எப்பகுதியிலும் தலைப்பகுதி காணப்படவில்லை. தொடர்ந்து, தலையில்லாமல் இருந்த அந்த சமணர் சிற்பத்தைப் பற்றிய  செய்தி வெளியானது (தினமணி, 21.8.2010). அதன் தலைப்பகுதியைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றதாகவும், இப்பணியில் தமிழ்ப்பல்கலைக் கழகக் கல்வெட்டுத்துறை ஆய்வாளர் திரு மன்னை.பி.பிரகாஷ் ஈடுபட்டிருந்ததாகவும், தலையில்லா சிற்பம் இருந்த இடத்திலிருந்து கிழக்கே சுமார் 1500 மீட்டர் தொலைவில் உள்ள முத்துவீரன்குளத்திலிருந்து தலைப் பாகம் கண்டெடுக்கப்பட்டதாகவும் படத்துடன் செய்தி வெளியானது (1.11.2011). இப்பின்னணியில் தற்போதைய களப்பணியின்போதும் திரு அம்பிகாபதி அவர்களைத் துணைக்கு அழைத்தோம். எமது வேண்டுகோளை ஏற்று அவர் வந்தார். அச்சிற்பத்தைச் சென்று பார்த்தோம். முதன்முதலாகப் பார்த்தபோது கிட்டத்தட்ட கழிவு நீரைப்போல தேங்கிய நீரில் மிக மோசமாகக் கேட்பாரற்றுக் கிடந்த அச்சிற்பம் தற்போது மேலசேத்தியில் ஒரு மரத்தின் அடியில் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டோம். மனதிற்கு ஒரு நிறைவு ஏற்பட்டது.  அதனை புகைப்படம் எடுத்தோம். களத்தில் உதவிய அவருக்கும் பிற நண்பர்களுக்கும் நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். காலைப்பயணத்தில் இதுவரை மழை இல்லாமல் இருந்தது. நாகப்பட்டினத்தை நெருங்க நெருங்க மழை தூற ஆரம்பித்தது.   
5.நாகப்பட்டினம் :  நாகப்பட்டினம் பகுதிக் களப்பணியில் எங்களுடன் மழையும் சேர்ந்துகொண்டது. அப்பகுதியில் சமணர் சிற்பங்கள் இருப்பதாக நாகப்பட்டினம் வரலாற்று ஆர்வலர் குழு உறுப்பினர் திரு க.இராமச்சந்திரன் கூறியிருந்ததன் அடிப்படையில் அவரைத் தொடர்பு கொண்டோம். அவர் கண்டுபிடித்த மூன்று சிற்பங்களைக் காண்பிக்க  அவர் எங்களுடன் சேர்ந்து கொண்டார். முதலில் வெளிப்பாளையம் பகுதியில் ஒரு மில்லில் சமணர் சிற்பம் இருப்பதை அழைத்துச்சென்று காட்டினார். அமர்ந்த நிலையில் தியான கோலத்தில் உள்ள அச்சிற்பத்திற்கு மகாவீரர் ஜெயந்தி அன்றும் பிற விழா நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவதாக அங்கிருந்த திரு சீதாராமன் தெரிவித்தார். அவர் அச்சிற்பத்தைப் போற்றும் விதம் பாராட்டும் வகையில் இருந்தது. வாழ்த்து தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.  
6.சிராங்குடி புலியூர்: அடுத்ததாக அவர் எங்களை நாகூர் ஆழியூர் சாலையிலுள்ள சிராங்குடி புலியூர் அழைத்துச்சென்றார். அங்கு ஒரு சிறிய சமணர் சிற்பம் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. அவ்வப்போது அருகிலுள்ளோர் பூசை செய்வதை அறியமுடிந்தது.
7.பள்ளியன்தோப்பு:  அவர் எங்களை அழைத்துச்சென்ற மூன்றாவது இடம் பள்ளியன்தோப்பு. ஏப்ரல் 2010இல் சிக்கல் அருகே ஒரு புத்தர் சிற்பத்தின் இடுப்புப்பகுதிக் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார் (The Hindu, 23.4.2010). அதற்கு முன்னர் ஒரு முறை அப்புகைப்படத்தைக் காண்பித்து அது புத்தரா என்று அவர் கேட்க, அது புத்தர் அல்ல என்று கூறியிருந்தேன். இக்களப்பணியின்போது அச்சிற்பத்தைப் பார்க்கும் ஆவலைக் கூறவே, அவர் எங்களை அங்கும் அழைத்துச்சென்றார். மிதமாக இருந்த மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. மகிழ்வுந்தை விட்டு இறங்க இயலா நிலை. அவ்வளவு மழை. அருகில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எங்களது பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, நான்கைந்து குடைகளை வாங்கிவந்துவிட்டார் இராமச்சந்திரன். பல இடங்களில் புகைப்படம் எடுக்கும் முன் தெளிவிற்காக தண்ணீரைத் தெளித்து புகைப்படம் எடுத்தோம். இங்கு அந்நிலை ஏற்படவில்லை. அச்சிற்பம் மழையால் நனைந்திருந்தது. நேரில் பார்த்தபின் அது புத்தர் அல்ல என்பதை அவரிடம் உறுதியாகக் கூறினேன். இது பற்றி பிறிதொரு இடுகையில் விரிவாக விவாதிப்போம்.  இந்த மூன்று சிற்பங்களைப் பற்றிய செய்தியையும் வெளிக்கொணர்நத  அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டுக் கிளம்பினோம்.
8.வைப்பூர் :  கொஞ்சம் கொஞ்சமாக இருட்ட ஆரம்பித்தது. இருட்டுவதற்குள் நேரத்தை வீணாக்காமல் அருகே வேறு ஏதாவது சமணர் சிற்பம் இருக்கிறதா என யோசிக்கும்போது தில்லை கோவிந்தராஜன் வைப்பூரில் சமண சிற்பம் உள்ளதாக குடவாயில் சுந்தரவேலு 2006இல் கூறியிருந்ததை நினைவுகூர்ந்தார் (தினத்தந்தி, 8.4.2006). அதன் அடிப்படையில்  நாகூர் திருவாரூர் சாலையில் கங்களாஞ்சேரி அருகே உள்ள வைப்பூர் சென்றோம். மழையும் தொடர்ந்தது. விசாரித்து சிற்பம் இருந்ததாக உள்ள இடத்திற்கு வந்துசேர்ந்தோம். பெருமாள் கோயிலில் இருந்த அச்சிற்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய்விட்டதாகத் தெரிவித்தனர். அந்தச் சமணரை புத்தர் என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்ததைக் களப்பணியின்போது அறியமுடிந்தது. இருட்டு அதிகமாகக் கவ்வ ஆரம்பிக்கவே அங்கிருந்து கிளம்பினோம்.
இக்களப்பணியின்போது நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சில இடங்களில் சிற்பங்கள் பாதுகாப்பின்றி இருப்பதையும், சில இடங்களில் பாதுகாப்பாகப் போற்றப்படுவதையும் காணமுடிந்தது. எமது தேடலின்போது ஆங்காங்கு உள்ளவர்களிடம்  சிற்பங்களின் முக்கியத்துவத்தையும், அதன் அருமை பெருமைகளையும் கூறியபோது அவர்கள் ஆர்வமாகக் கேட்டவிதம் பாராட்டும் வகையில் இருந்தது. ஒரே நாளில் எட்டு சிற்பங்களைப் பார்த்தது மனதுக்கு நிறைவாக இருந்தது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் களப்பணியை  முடித்துத் திரும்பினோம். மகிழ்வுந்தில் திரும்பிக் கொண்டிருக்கும்போது திரு முருகேசன் இப்பகுதியில் வேறு இடங்களில் சமணர் சிற்பங்கள் ஏதேனும் உள்ளனவா எனக் கேட்டபோது களப்பணியில் முன்னர் நான் பார்த்த வேறு சில சமணர் சிற்பங்களைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது. திரு தில்லை கோவிந்தராஜன் அவர் பார்த்த சமணர் சிற்பங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். மும்முரமாக அடுத்த களப்பணிக்கான திட்டமிடல் ஆரம்பமானது தஞ்சாவூர் வந்து சேர்வதற்குள். 

நன்றி: களத்தில் உதவியவர்களுக்கும், தோலியில் சமணர் சிற்பத்தைக்கண்டுபிடித்த செய்தியை வெளியிட்ட தினமணி, தினத்தந்தி, The Hindu, Deccan Chronicle உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளுக்கும் நன்றி.

 
-முனைவர் பா.ஜம்புலிங்கம்
மே 2007இல் வளையமாபுரத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் சிற்பம் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது. அச்செய்திக்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த பூண்டி புட்பம் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் த.லட்சுமணமூர்த்தி அவர்கள் திருக்காட்டுப்பள்ளி அருகே தன் சொந்த ஊரான டி.கள்ளிக்குடியில் ஒரு சமணரைப் புத்தர் என்று கூறி அங்குள்ளோர் வழிபடுவதாகக் கூறியிருந்தார். அப்போது அவரிடம் சூன் 2003இல் அடஞ்சூர் என்னுமிடத்தில் நான் கண்டுபிடித்த புத்தர் என்றழைக்கப்படும் சமணரைப் பற்றிக் கூறியிருந்தேன். அவர் சொன்ன சிற்பத்தைப் பார்க்கும் வாய்ப்பு உடனடியாக அமையவில்லை. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3.11.2011 அன்று களப்பணி சென்றபோது இது பற்றிக் கூறியிருந்தேன். அடுத்த களப்பணியில் அச்சிற்பத்தைப் பார்க்கச் செல்லலாம் என முடிவெடுத்து பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஓரிரு நாளில் அவ்விடத்திற்குச் சென்றுவிட்டுத் தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர் அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அச்சிற்பம் திருட்டுப் போய்விட்டதாக உள்ளூரில் பேசிக்கொள்வதாகத் தெரிவித்தார். சிற்பம் இருந்த இடத்தையாவது பார்க்க வேண்டும் என ஆவல் வரவே, திரு லட்சுணமூர்த்தி அவர்களைத் தொடர்பு கொண்டேன். எப்போது வந்தாலும் உதவுவதாகக் கூறினார். களப்பணிக்கான திட்டம் உருவானது.  அக்களப்பணியின்போது குடவாயில் சுந்தரவேலு, சி.ஆர்.காயத்ரீ, பி.பிரகாஷ் மற்றும் என்.எஸ்.ராம்ஜி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்ட சமணர் சிற்பங்களைப் பார்க்க முடிவெடுத்து நானும் திரு தில்லை.கோவிந்தராஜனும் 20.11.2011 அன்று கிளம்பினோம். இம்முறை எங்களுடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைச் சேர்ந்த திரு பி.கருணாநிதி சேர்ந்துகொண்டார்.  
1.சித்திரக்குடி : சித்திரக்குடியில்  சமணர் சிற்பத்தைப் பார்த்தோம். ஆனந்தகாவேரி ஆற்றின்  இடது கரையில் அழகாக அமர்ந்திருந்தார் சமண தீர்த்தங்கரர்.
2.திருக்காட்டுப்பள்ளி : பேராசிரியர் லட்சுணமூர்த்தி சொல்லியிருந்த சமணரைப் பார்க்க அவரையும் அழைத்துக்கொண்டோம். பயணத்தின்போது அவருடைய பள்ளி நாட்களில் தன் தாத்தாவின் அன்புக்கட்டளையால் அச்சிற்பத்தை வணங்கிவிட்டுச் சென்றதை நினைவுகூர்ந்தார். சிற்பம் இல்லாவிட்டாலும் சிற்பம் இருந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளைக் கேட்டவுடன் மிக நெகிழ்ச்சியடைந்தார். அங்கு எங்களை அழைத்துச் சென்றார். அப்பகுதியில் நெடுநாளாக இருக்கும் அவரது உறவினர் ஆசிரியர் திரு சுந்தரராஜனை அறிமுகப்படுத்தினார். அவர் சில ஆண்டுகள் முன்பு வரை அச்சிற்பம் இருந்ததாகவும், பின்னர் திருட்டுப்போனதாகவும் கூறினார். அவரிடம்  ஏதாவது அச்சிற்பத்தின் புகைப்படம் இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்டு கிளம்பினோம்.
சங்கராம்பாடி சமணர் சிற்பத்துடன் 
கருணாநிதி, ஜம்புலிங்கம், லட்சுமணமூர்த்தி
3. சங்கராம்பாடி  : இளங்காடு-மேகளத்தூர் இடையே உள்ள சங்கராம்பாடி சென்றோம். இளங்காட்டைச் சேர்ந்த பெரியவர் திரு கோவிந்தராஜன் இடத்தை அடையாளம் காட்ட சுமார் 1 கிமீ வயல் வரப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலை. முழங்கால் வரை ஆடையை மடக்கிவிட்டு நடக்க ஆரம்பித்தோம்.பல இடங்களில் கால் உள் வாங்கியது. அருகிலுள்ள நாணலைப் பிடித்து நடந்தோம். பிடிமானம் இல்லாத இடங்களில் சிரமப்பட்டு நடந்து சென்று அருகிலுள்ள சற்று மேடான கன்னிமார் திடல் என்ற இடத்தை அடைந்தோம். அங்கிருந்த சமணரைப் பார்த்தோம். அவருக்கு முன்பு காசுகள் சிதறிக்கிடந்தன. அவரை எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தன. எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத அவர் அமைதியாக இருந்தார். பார்த்துவிட்டுத் திரும்பினோம். மறுபடியும் 1 கிமீ நடை. 
4.மாறநேரி: சமணர் சிற்பம் இருப்பதாகக் கேள்விப்பட்டு மாறநேரி சென்றோம். அங்கு சிற்பம் இல்லை. எங்களது தேடலைக் கண்டு எங்களுக்கு உதவ முன்வந்தார் அப்பகுதியைச் சேர்ந்த திரு தனபால். அவர் எங்களை அங்கிருந்த பசுபதீஸ்வரசுவாமி சிவன் கோயிலுக்கு அழைத்துச்சென்றார். சிற்பங்கள் தனியாக ஓரிடத்தில் வைக்கப்பட்டிருந்தன. விரைவில் குடமுழுக்கு நடக்கவுள்ளதாக அவர் கூறினார். கோயில் கிட்டத்தட்ட இடிபாடான நிலையில் இருந்தது. அக்கோயிலில் தீர்த்தங்கரர் சிற்பம் இருந்ததற்கான ஒரு பீடத்தைத் தில்லை கோவிந்தராஜன் காண்பித்தார். அதில் மூன்று யாளிகள் இருந்தன.  சிற்பம் இல்லாவிட்டாலும் பீடமாவது இருந்ததே என சமாதானப்படுத்திக்கொண்டு அதைப் புகைப்படம் எடுத்தோம். அருகிலுள்ள பிடாரி கோயிலில் சமணர் சிற்பம் இருப்பதாக அவர் கூறினார். சிறிது தூரம் வயலில் சென்று அக்கோயிலை அடைந்தோம். அவ்வாறான சிற்பம் இல்லை. திரும்பினோம்.
5.செம்பியன்களரி: சங்கராம்பாடியில் உதவிய திரு இளங்காடு கோவிந்தராஜன், திருவையாறு வட்டம் செம்பியன்களரியில் திரு சாமிநாதன் என்பவரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொண்டார். செம்பியன்களரியை அடைந்ததும் சமணரைத் தேடும் முன் சாமிநாதனைத் தேடினோம். அப்போதுதான் அவர் தோளில் மண்வெட்டி, கழுத்தில் துண்டு, கையில் கதிர் அரிவாளுடன் வயலுக்குச் சென்றுகொண்டிருந்தார். அவசரம் அவசரமாகச் சென்று பிடித்தோம். சமணரைப் பார்க்க வந்தது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த பெண்மணிகள் சிலர் இப்படிப் போய் எப்படிப் பார்ப்பீர்கள் என்றனர். அவர்கள் கூறியபோது எங்களுக்குப் புரியவில்லை. பின்னர்தான் அதற்கான காரணம் புரிந்தது. சங்கராம்பாடியில் இருந்தது போலவே வயலைத் தாண்டி செல்லவேண்டியிருந்தது. வயலில் நடக்கும்போது முழங்கால் வரை சேறு படாத வகையில் ஆடையைச் சரிசெய்து நடக்க ஆரம்பித்தோம். எங்களுக்கு முன் வேகமாக நடந்து சென்றார் சாமிநாதன். எங்களால் வேகமாக நடக்க முடியவில்லை. அவர் மண்வெட்டியை எடுத்து எதையோ வெட்டுவதைப் போலிருந்தது. நெருங்கியபின்னர்தான் அங்கு சிற்பம் இருப்பது தெரிந்தது. அடர்ந்த புற்களை அப்புறப்படுத்தினார். சமணர் வெளிப்பட்டார். 

செம்பியன்களரி சமணருடன் 
தில்லை கோவிந்தராஜன்
இன்னும் சிறிது புதைந்த நிலையில் சிற்பம் இருந்தது. அவர் மட்டும் இல்லாவிட்டால் அவ்வாறாக புல் மண்டிக் கிடக்கும் இடத்தில் அச்சிற்பத்தை எங்களால் பார்த்திருக்கமுடியாது. முன்பு வயலில் வேறொரு இடத்தில் இருந்ததாகவும், தற்போது பாதுகாப்பிற்காக முத்தாளம்மன் கோயில் அருகே வைத்திருப்பதாகவும் அங்கிருந்தோர் கூறினர்.
6.ஒரத்தூர் : திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஒரத்தூரில் சமுதாயக்கூடம் அருகே குளக்கரையில் மரத்தடியில் ஒரு சமணர் சிற்பத்தைப் பார்த்தோம். குளத்தில் குளித்துக்கொண்டிருந்த சிலர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை மொண்டு கொடுத்தனர். சிற்பத்தைக் கழுவிவிட்டு புகைப்படம் எடுத்தோம்.  
7.பழமார்நேரி  : களப்பணியில் நாங்கள் சென்ற அடுத்த இடம் திருவையாறு வட்டத்திலுள்ள எடுத்தநாண்துருத்தி எனப்படும் ரெங்கநாதம் கீழத்தெரு. அங்குள்ள விநாயகர் கோயிலில் இடது புறமாக அழகான ஒரு சிறிய மண்டபத்தில் பாதுகாப்பாக வழிபாட்டில் இருந்த சமணரைக் கண்டோம்.
8.அடஞ்சூர் : அன்றைய பயணத்தில் கடைசியாகப் பார்க்க வேண்டிய இடமான பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூரிலிருந்து 5 கிமீ தொலைவில் சிவந்தி திடல் அருகே உள்ள அடஞ்சூர் சென்றோம். ஏப்ரல் 2003இல் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் பூதலூரைச் சேர்ந்த திரு வீரமணி உதவியுடன் வந்து அச்சிற்பத்தைப் பார்த்தது எனக்கு நினைவிற்கு வந்தது. சிவந்தி திடல் அருகே 2 கிமீ தொலைவில் உள்ள காத்தவராயன் கோயில் எனப்படும் நல்லகூத்த அய்யனார் கோயிலுக்குச் செல்வதற்காக விசாரித்துக் கொண்டே சென்றபோது அங்கிருந்த சிலர் வேறு ஒரு கோயிலை அடையாளம் காட்ட அங்கு சென்றுவிட்டோம். கோயிலை நெருங்க நெருங்க இருட்ட ஆரம்பித்துவிட்டது. நான் பார்த்த கோயில் அது இல்லை என உறுதியாகத் தெரிவதற்குள் அதிகம் இருட்டாகிவிட்டது. செல்வதும் கடினம், இனி சென்றால் சிற்பம் இருந்தாலும் தெளிவாகப் பார்க்கமுடியாது என்ற நிலையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அவர்களிடம் அச்சிற்பம் மற்றும் கோயில் பற்றிய விவரங்களைக் கூறிவிட்டு, நாங்கள் மூவரும் தஞ்சாவூரை நோக்கித் திரும்பினோம். அப்போது அவர் தனக்குத் தெரிந்தவர்கள் அங்கிருக்கின்றார்களா என விசாரித்து எப்படியும் சிற்பம் பற்றியத் தகவலைத் தெரிவிப்பதாகக் கூறினார். நன்றிகூறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தோம். வழியில் ஒரு விஷ்ணு சிற்பத்தைக் காண்பித்தார் உடன்வந்த திரு கருணாநிதி.(களப்பணி முடிந்து சில நாள்கள் கழித்து அச்சிற்பம் பற்றி பத்திரிக்கைச் செய்தி வெளியிட்டார்). ஒரே நாளில் பல சிற்பங்களைப் பார்த்த நிறைவுடன் தஞ்சாவூர் வந்து சேர்ந்தோம்.
நான் வீட்டில் நுழைந்தபோது, எப்போது வந்தாலும் உடன் பேசச்சொல்லி  பேராசிரியர் லட்சுமணமூர்த்தி தொலைபேசியில் கூறியதாக என் மனைவி கூறினார். அவரைத் தொடர்பு கொண்டேன். நாங்கள் திரும்பியபின் உடனே அவர் அந்த இருட்டிலும் நண்பர்கள் உதவியுடன் அக்கோயிலுக்குச் சென்றதாகவும், அச்சிற்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப் போய்விட்டதாகவும் கூறினார். இச்செய்தியை திரு தில்லை கோவிந்தராஜன் அவர்களிடம் தெரிவித்தபோது, அதன் புகைப்படமாவது கிடைக்குமா என்றார். 2003இல் நான் எழுதிய கட்டுரையில் அப்புகைப்படம் உள்ளதைப்பற்றி கூறியபோது சமாதானமானார் அவர். இவ்வாறே திருக்காட்டுப்பள்ளி சமணரின் புகைப்படத்தையும் எப்படியாவது நாம் பெற்றுவிடுவோம் என்றார் திரு தில்லை கோவிந்தராஜன். டி.கள்ளிக்குடியில் பல இடங்களில் விசாரித்து, காணாமல் போனதாகக் கூறப்படும் சமண தீர்த்தங்கரரின் புகைப்படத்தைத் தேடிப் பெற்று ஒரு வாரத்திற்குள் என்னிடம் நேரில் கொண்டுவந்து கொடுத்தார் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி.   

நன்றி : இக்களப்பணிக்கு முழுக்காரணமாக இருந்ததோடு (சித்திரக்குடி தவிர அனைத்து இடங்களுக்கும் வந்து)  டி.கள்ளிக்குடி சமணர் புகைப்படத்தைப் பெற்றுத் தந்த பேராசிரியர் லட்சுமணமூர்த்தி அவர்களுக்கும், களப்பணிக்காகத் திட்டமிட்டு முடிந்தவரை அதிகமான இடங்களைப் பார்க்க முயற்சிகள் மேற்கொண்டு உடன் வந்த திரு தில்லை கோவிந்தராஜன், திரு கருணாநிதி மற்றும் களத்தில் உதவிய திரு சுந்தரராஜன், திரு தனபால், திரு இளங்காடு கோவிந்தராஜன், திரு சாமிநாதன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சிற்பங்களைக் கண்டுபிடிக்க அடிப்படையாக அமைந்த செய்திகளைத் தந்த ஆய்வாளர்களுக்கும் நன்றி.               

உங்களுடன் பகிர்ந்துகொள்ள மற்றொரு செய்தி
3.12.2011 அன்று சென்னையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தார் வைரவிழாவையொட்டி விழா நடத்தினர். நிறுவன வளர்ச்சியில் நூல் ஆசிரியராக இணைந்து பங்கேற்று வருவதற்காகப்பெருமைப்படுத்தும் வகையில் எனக்குப் பொன்னாடை அணிவித்து, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர். நூற்றுக்கும் மேற்பட்ட நூலாசிரியர்கள் இவ்விழாவில் பெருமைப்படுத்தப்பட்டனர். அந்நிறுவனத்தார் நான் எழுதிய ஐந்து நூல்களை வெளியிட்டுள்ளனர்.  என் எழுத்துக்கள் நூல் வடிவம் பெற உதவிய அந் நிறுவனத்திற்கும், என் எழுத்துப்பணியை ஊக்குவித்து வரும் அந்நிறுவன முதன்மைச்செயன்மையர் திரு ச.சரவணன் அவர்களுக்கும் என் நன்றி.