Friday, February 3, 2012

சோழ நாட்டில்

  சோழ நாட்டில் பல இடங்களில் புத்தரைச் சமணர் என்றும், சமணரைப் புத்தர் என்றும் கூறிவருவதைக் களப்பணியில் காணமுடிந்தது. ஆய்வின் ஆரம்ப நிலையில் எனக்கு இந்தக் குழப்பம் இருந்தது. சிற்பத்தின் அமைப்பினைத் தெளிவாகப் புரிந்துகொண்டு உறுதி செய்வதில் சுணக்கம் இருந்தது. தொடர்ந்து மேற்கொண்ட களப்பணி புத்தர் சிற்பத்திற்கும், சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தியது. புத்தரைத் தேடிச் சென்று சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைப் பார்த்த அனுபவம் இம்மாதப் பதிவு.
     மயிலை சீனி.வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற நூலில் புதுக்கோட்டைப் பகுதியில் புத்தர் சிற்பங்கள் உள்ள இடங்களில் ஒன்றாக ஆலங்குடிப்பட்டியைக் குறிப்பிடுகிறார். அந்நூலில் அவர் பின்வருமாறு கூறுகிறார். "ஆலங்குடிப்பட்டி: குளத்தூர் தாலுகாவில் உள்ள ஊர். இங்கு 3 அடி 6 அங்குலம் உயரமுள்ள புத்தர் உருவச்சிலை இருக்கிறது". அவரைத் தொடர்ந்து பிற அறிஞர்கள் அவர் சொன்ன கருத்தை அப்படியே கூறியுள்ளனர். கூடுதல் செய்தி எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புதுக்கோட்டைப் பகுதியில் ஆலங்குடிப்பட்டி சென்று புத்தரைக் கண்டுபிடிக்க பல முறை களப்பணி மேற்கொண்டேன். முதல் முறை தஞ்சாவூர்-திருவெறும்பூர்-புலியூர் வழியாகவும், அடுத்த முறை தஞ்சாவூர்-திருவெறும்பூர்-காந்தளூர்/சூரியர் வழியாகவும் சென்றேன். மூன்றாவது முறை தஞ்சாவூர்-புதுக்கோட்டை-கீரனூர் வழியாகச் சென்றேன். பலவாறான தடங்களில் செல்லும்போது புதிய செய்திகள் கிடைப்பதோடு, புதிய சிற்பங்கள் கண்டுபிடிக்கவும் வாய்ப்பாகும் என்ற நிலையில் அவ்வாறு களப்பணி மேற்கொண்டேன்.   

மே 1999
தஞ்சை-புதுக்கோட்டை-கீரனூர் வழியாகக் களப்பணி. ஆலங்குடிப்பட்டிக்கு பேருந்து வசதி குறைவாக உள்ளதாகக் கூறினர். பயண நேரத்தை வீணாக்காமல் இருக்கவும், உடன் இடத்தைச் சென்றடையவும் எண்ணி விசாரித்தபோது கீரனூரிலிருந்து தென்றம்பட்டி வரை  பேருந்து வசதி உள்ளதை அறிந்தேன். என் பயணம் தஞ்சாவூர் புதுக்கோட்டை கீரனூர் தென்றம்பட்டி என்ற நிலையில்  அமைந்தது.  மிகவும் சிறிய கிராமம். வாடகைக்கு மிதிவண்டி எடுக்கும் வாய்ப்பு இல்லை. அப்பகுதியில்  போவோர் வருவோர் துணையுட்ன் ஆலங்குடிப்பட்டி செல்லலாம் என்றால் எவரும் தென்படவில்லை. மறுபடியும் யோசிக்க ஆரம்பித்தால் மனம் மாறிவிடும் என்ற நிலையில் உடன் தென்றம்பட்டியிலிருந்து ஆலங்குடிப்பட்டி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவ்வப்போது புத்தர் சிற்பம் பற்றி யாருக்காவது தெரிகிறதா என்று விசாரித்துக் கொண்டே சென்றேன். அப்பகுதியில் இரு சிற்பங்கள் இருந்ததாக ஒருவர் கூறினார். மற்றொருவர், "போய்க்கிட்டே இருங்க, இன்னம் கொஞ்ச தூரம் போனீங்கன்னா ஒங்க சோத்துக்கை பக்கம் ஒரு புத்தர் இருக்கும்" என்றார். துணைக்கு அவரை அழைத்தேன். தன் இயலாமையைக் கூறிவிட்டு அவர்  சென்றுவிட்டார். கிட்டத்தட்ட பொட்டல் காடு போன்ற இடம். தொடர்ந்து நடந்தேன். அலுப்பாக இருந்தது. சிற்பம் இருப்பதற்கான தடயம் எங்கும் இல்லை. சிறிது தூரத்தில் நடுத்தர வயதுள்ள ஒரு பெண்மணி சுள்ளி ஒடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தேன். "என்னா செலைன்னு தெரியாங்குங்க. ஆனா அப்படியே போனீங்கன்னா ஒரு செலையைப் பாக்கலாம். அப்புறம் தள்ளிப் போனீங்கன்னா கொஞ்ச தூரத்துல மேட்டுல ஒரு செலை இருக்கு" என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள்  அருகிலிருந்த மரத்திலிருந்து திடீரென ஒருவர் குதித்தார். முண்டாசோடும் முரட்டு மீசையோடும் என்னை நோக்கி வந்த அவர் கேட்ட முதல் கேள்வி "பொம்பளைகிட்ட ஒனக்கு என்னய்யா பேச்சு?". எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சிற்பத்தைத் தேடுவதைப் பற்றிக் கூறினேன். அவர் எதையும் காதில் வாங்குவதாகத் தெரியவில்லை. "அப்படியே போ. வேற யார்ட்டயாவது விசாரிச்சுக்க" என்று என்னிடம் சிறு மிரட்டல் விட்டுவிட்டு அப்பெண்மணியிடம், "ஏண்டி, வந்த வேலையைப் பாக்க மாட்டியா. வர்றவங்களுக்குத் தெரியாதா? எல்லாம் தேடிக்குவாங்க. ஒன் வேலையைப் பார்" என்றார். மேலும் பேசாமல் பயணத்தைத் தொடர்ந்தேன். அந்தப் பெண்மணி கூறியபடி சிறிது தூரம் நடந்து சென்றபின் எனக்கு வலப்புறமாக சிற்பம் இருப்பதைக் கண்டேன். அருகில் சென்று பார்த்தேன். அது அய்யனார் சிற்பம். அய்யனாரைப் புத்தர் என்று கூறியுள்ளார்கள்.அருகில் யாராவது இருக்கிறார்களா என்று ஏக்கத்துடன் தேடினேன். பயனில்லை. புத்தர் சிற்பத்தைக் காணமுடியவில்லையே என்ற எண்ணத்துடன் தொடர்ந்து நடந்தேன். அதிக தூரம் நடந்துவிட்டேன். எதிரில் ஒருவர் தென்பட்டார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். தென்னேந்திரன்பட்டியைச் சேர்ந்த ராம்கண்ணு என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இரு வேறு சிற்பங்கள் இருப்பது பற்றிக் கூறி அவரிடம் கேட்டேன். "மேட்ல சிவநாதர்ன்னு ஒரு புத்தர் செலை இருக்கு வெளியில் இருந்து பாத்தால் தெரியாது. உள்ளே அடர்ந்த செடிகள் உள்ள இடத்துல அது இருக்கு" என்றார். உடன் வந்து அடையாளம் காட்டமுடியுமா என்று கேட்டதும் உடன் ஒத்துக் கொண்டார். சாதாரணமாக சாலையில் போவோருக்குத் தெரியாதபடி உள்ளடங்கி இருந்த ஓர் இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு சற்றுப் புதையுண்ட நிலையில் இருந்த சிற்பத்தைக் காண்பித்தார். "இந்த இடத்துப் பேரு கோட்டைமேடு. இந்த புத்தரைச் சிவநாதர்ன்னு சொல்லுவாங்க" என்றார். இரண்டு மணி நேர அலைச்சலுக்கு நல்ல முடிவு கிடைத்தது என்று எண்ணிக் கொண்டே சிற்பத்திற்கு அருகில் சென்று பார்த்தேன். அமர்ந்த நிலை. நெருங்க நெருங்க அது புத்தர் இல்லை என்பது தெரிந்தது. சமண தீர்த்தங்கரர் சிற்பத்திற்குரிய கூறுகள் அச்சிற்பத்தில் காணப்பட்டன. சிற்பத்தைப் புகைப்படம் எடுத்தேன். அழைத்து வந்து காண்பித்தவரிடம் அந்த சிற்பம் சமணத் தீர்த்தங்கரர் என்று கூறினேன். சுமார் 50க்கும் மேற்பட்ட புத்தர் சிற்பங்களைக் களப்பணியில் நேரில் பார்த்த நிலையில் அந்த சிற்பம் புத்தர் சிற்பம் இல்லை என்பதை என்னால் உறுதியாக உணரமுடிந்தது. ஏதோ புதிய கண்டுபிடிப்பைக் கண்டதுபோல் உடன் வந்தவருக்கு மகிழ்ச்சி. "இன்னம எல்லார்கிட்டயும் இது சமணர்ன்னு சொல்லுவேங்க. இதுவரைக்கும் நாங்க எல்லாம் இந்த செலையை சிவநாதர்ன்னும், புத்தர்ன்னும் சொல்லிக்கிட்டிருந்தோங்க" என்று கூறி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். அவரிடம் நன்றி கூறிவிட்டுக் கிளம்பினேன். ஆலங்குடிப்பட்டியை முடிந்தவரை சுற்றிப் பார்த்தேன். வேறு எங்கும் புத்தர் சிற்பம் காணப்படவில்லை. மயிலை சீனி வேங்கடசாமி, சமணர் சிற்பத்தைப் புத்தர் என்று கூறியுள்ளார். அவரைத்தொடர்ந்து பின்வந்தவர்கள் அக்கருத்தை அப்படியே கூறியுள்ளனர் என்பதை உணர்ந்தேன்.

ஆகஸ்டு 2003 
இந்த சமணர் சிற்பம் எனது ஆய்விற்குப் பிறிதொரு வகையிலும் உதவியாக இருந்தது. புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்திற்கு ஒரு கருத்தரங்கிற்காகச் சென்றபோது, சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகம் தமிழக மாவட்டங்களில் உள்ள சமணர் சிற்பங்கள் குறித்த நூல் வெளியிடுவதாக அறிந்தேன். புத்தர் சிற்பங்களைத்தேடிச் சென்றபோது ஆலங்குடிப்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் நான் கண்ட சமண தீர்த்தங்கரர் சிற்பங்களின் புகைப்படங்களை அருங்காட்சியகத்தாருக்கு அனுப்பிவைத்திருந்தேன். சென்னை அருங்காட்சியகம் வெளியிட்ட Iconography of the Jain images in the districts of Tamil Nadu (Dr K.Kannan & Thiru K.Lakshminarayanan, Government Museum, Chennai, 2002 என்ற நூலில் ஆலங்குடிப்பட்டியில் உள்ள சமண சிற்பம் பற்றிய செய்தி படத்துடன் வெளிவந்தது. களப்பணி மேற்கொண்டிருக்காவிட்டால் நானும் பிற அறிஞர்களைப் போல ஆலங்குடிப்பட்டி சமணரைப் புத்தர் என்று கூறியிருப்பேன். அத்துடன் ஒரு சமணரைக் கண்டுபிடிக்கும் அரிய வாய்ப்பையும் இழந்திருப்பேன்.   

2 comments: