Friday, February 3, 2012

முனைவர் பா. ஜம்புலிங்கம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்.  சோழ நாட்டில் காணப்படும் பௌத்தச் சுவடுகளைப் பற்றிக் குறிப்பிடத் தக்க ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.  தன்னுடைய களப் பணியில் எதிர்கொண்ட அனுபவங்களை அவர் இனி நம்முடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். இந்த
வாரம் அறிமுகத்துடன்...

1993இல் தொடங்கி தொடர்ந்து நான் மேற்கொண்டுவரும் பௌத்த ஆய்வு தொடர்பாகக் களப்பணி சென்றபோது பல அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு கிடைத்தது. களத்தில் இறங்கும் முன்பாகச் சிந்திக்கத் தொடங்கியபோது ஆய்வு செய்ய விரும்பும் என்னுடைய விருப்பத்திற்கு வந்த ஆதரவைவிட மாற்றுக் கருத்துக்கள் அதிகம் இருந்தன. பல நண்பர்களும் ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது.
·    தம்பி, நீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும்.
·    உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல்.
·  ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவசியமா இதுல தலையிடாதே. உன்னால முடியாது.
·    வேலையும் பாத்துக்கிட்டு, ஆய்வும் செய்யறதா அது எப்படி?
·    ஏம்ப்பா படிச்சுட்டு இன்னம நீ ஆசிரியரா ஆவப்போறியா. இப்படியே இருந்து  
     வேலையைப் பார்த்துக்கிட்டு ஏதாவது பதவி உயர்வு கிடைக்குதான்னா பார்.
·    கிளார்க் வேலை பாக்குற உனக்கு அதெல்லாம் முடியாது.
·    எப்பயும் எங்களப் போல ஆய்வுச் சிந்தனையோட இருந்தாத்தான் ஆய்வுல ஈடுபடலாம்.
·    அங்கங்க சில நூல்களைப் படி. குறிப்பெடு. காலவாரியாகத் தொகுத்துவிடு.
·    தடயமே இல்லாத ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்வது வீண்.
·    தலைப்பு அப்படியே இருக்கட்டும், சிரமமின்றி செய்திகளைத் தொகுத்து 
     உள்ளடக்கத்திற்குத் தந்துவிடு.
·    ஏதாவது 200-300 பக்கங்களுக்குச் செய்திகளைத் தொகுத்து ஆங்காங்கே  
     தலைப்புகள், உள் தலைப்புகள் கொடுத்து முடித்துவிடு.
·    அப்பப்ப சில கட்டுரைகளை எழுது. ஒண்ணா தொகுத்துடு. ஆய்வேடு தயார்.
·    உன்னால முடியாது. ரொம்ப ஆசைப்பட்டா ஒண்ணு செய்.
     காளியம்மன்கோயில், மாரியம்மன் கோயில் வரலாறுன்னு எடுத்து ஏதாவது
     எழுதிக்கொடுத்து முடிச்சுடு.
·    நாலு புத்தகத்தைப் பாரு. அங்கங்க தொடர்பான செய்தியை சேத்துக்க.முடிச்சுடு.
·    இல்லாததைத் தேடி அதில் புதியவற்றைக் கண்டுபிடி. வரலாற்றுக்கு உதவும்.
·    முன்னவர்கள் போட்ட பாதையில் செல். புதியதாக எதையாவது
     வெளிக்கொணர முடிகிறதா என்று பார்.
·    எளிதில் எவரும் தொடாத துறை. கண்டிப்பாகச் சாதிக்கலாம்.
·    நேரம் காலம் பார்க்காம அலையணும். அப்பத்தான் முடியும்.
·    பௌத்த சமயச் சுவடு எதுவுமே இல்லை. ஆய்வை ஆரம்பித்தாலும் முடிக்க முடியாது.
இன்னும் இவைபோல பலப்பல கருத்துகள். அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு பலத்த சிந்தனைக்குப் பின் ஆய்வுக் களத்தில் இறங்கினேன். பௌத்தம் என்ற நிலையில் தத்துவம் அல்லது இலக்கியம் என்ற பின்னணியில் ஆய்வை மேற்கொண்டு முடித்துவிடலாம் என்ற அசட்டுத் துணிச்சல். என் ஆய்வுக் காலம் தொடங்கி என்னை நெறிப்படுத்தும் அறிஞர்களில் ஒருவரான குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களிடம் பேசும்போது, இது தொடர்பாகப் பல ஆய்வுகள் வெளிவந்துவிட்டதாகவும், களப்பணிதான் முக்கியம் என்றும், களப்பணி மூலமாக ஆய்வு மேற்கொள்ளும்போது பல புதிய செய்திகளை வரலாற்றுலகிற்கு அளிக்க முடியும் என்று கூறி என் ஆய்வுக் களத்தின் திசையை மாற்றினார். விளைவு பௌத்தக் களப்பணி. களத்தில் இறங்கும் முன்பாக எதிர்கொள்ளும் வேறு பிற சிக்கல்களையும் சமாளிக்க வேண்டிய நிலை. கிடைக்கும் ஓய்வு நேரத்திலும், விடுமுறை நாள்களிலும் மட்டுமே களப்பணி மேற்கொள்ளும் சூழல். திடீரென விடுப்பு எடுத்துக்கொண்டுக் கிளம்ப முடியாத நிலை. களப்பணிக்காக ஆகும் செலவினம் பற்றிய மலைப்பு. இதனிடையே இதற்கு முன் இத்துறையில் ஆய்வு செய்த அறிஞர்களைத் தொடர்ந்து, பல புதியனவற்றை வெளிக்கொணர முடியும் என்ற உறுதி என்னுள் தோன்ற, அனைத்துத் தடைகளையும் மீறி துணிவோடு களத்தில் குதித்தேன்.
        பிறந்த மண் சோழ நாட்டில் கும்பகோணம். சமய உலகில் காஞ்சீபுரத்திற்கு ஈடாக தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கோயில் நகரம். காஞ்சியைப்போல அனைத்துச் சமயங்களையும் போற்றிய நகரம். பல்லவர் காலந்தொட்டு வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் அருகிலிருந்தமை என் வரலாற்று ஆர்வத்தையும் சமய ஆர்வத்தையும் ஊக்குவித்தது. பௌத்த ஆய்வில் களப்பணி மூலமாக பல புதிய செய்திகளை வெளிக்கொணரலாம் என்ற நம்பிக்கையும், உறுதியும் என் எண்ணத்திற்குப் பலம் தந்தது.
ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) பட்ட ஆய்வுத் தலைப்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்பதாகும். முனைவர் பட்ட ஆய்விற்கு மாவட்டங்களை அதிகப்படுத்தி சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பைத் தெரிவுசெய்தேன். ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வுத் தலைப்பை விரிவுபடுத்தி அதே பொருளில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டால் ஒரு குறிப்பிட்ட துறைக்கு முழுமையான பங்கினைச் செலுத்த முடியும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை. எனவே அவ்வாறே ஆய்வினைத் தொடர்ந்தேன். சோழ நாடு என்ற நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் (தஞ்சாவூர், திருவாரூர்-, நாகப்பட்டினம்), ஒருங்கிணைந்த திருச்சி (திருச்சி-, அரியலூர், பெரம்பலூர்,  கரூர்) மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் அடங்கும். 1993இல் ஆய்விற்காகப் பதிவு செய்தபோது நான் பிறந்த கும்பகோணத்தில் பௌத்த சமயத்தின் இறுதிச் சுவடைக் குறிக்கும் ஒரு கல்வெட்டு இருக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. பள்ளிப் பருவம் தொடங்கி கல்லூரிப் பருவம்வரை பாடம் படிக்க எனக்கும் என் நண்பர்களுக்கும் அடைக்கலம் தந்தது கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரகாரம்தான். அக்கோயிலில் உள்ள செவ்வப்ப நாயக்கர் காலக் கல்வெட்டு கி.பி. 1580வரை அப்பகுதியில் ஒரு பௌத்தக் கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு களப்பணியின் போதும் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவையாகும். இவ்வாறான அனுபவங்களை அவ்வப்போது பகிர்ந்துகொள்வோமா?  
தொடரும்... 
 

1 comment:

  1. மிக விரிவான தகவல்பெட்டகம். சிறப்பு. மிக்க நன்றி.
    மகிழ்ச்சி. வணக்கம்

    ReplyDelete