Friday, February 3, 2012

முனைவர் பா.ஜம்புலிங்கம்,
கண்காணிப்பாளர்,
 தமிழ்ப்பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் 613 010

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பௌத்தம் என்ற தலைப்பில்  ஆய்வியல் நிறைஞர்  பட்டத்திற்குப் பதிவு செய்து ஆய்வைத் தொடங்கியபோது பௌத்தம் தொடர்பான பதிவுகளைத் தேடி களப்பணி மேற்கொண்டேன்.  அவ்வாறான ஒரு களப்பணியின்போது கும்பகோணம் அருகே புத்தர் கோயில் இருந்ததற்கான ஒரு கல்வெட்டு கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் இருப்பதை அறிந்தேன்.  கும்பகோணம் பகுதியில் பௌத்தம் இருந்ததற்கான அந்த அரிய சான்றை மையமாகக் கொண்டு கட்டுரை எழுதினேன். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்ப்பொழில் இதழில் வெளியான என்னுடைய முதல் கட்டுரை அதுவேயாகும். அக்கட்டுரையே இம்மாத இடுகையாகும். என்னுடைய அந்த கட்டுரையையும், பிற கட்டுரைகளையும் வெளியிட்டு வரும் தமிழ்ப் பொழில் இதழுக்கு நன்றி. இனி பௌத்தச் சுவட்டைத் தன்னகத்தே கொண்ட கும்பகோணத்திற்குப்  பயணிப்போம்........... 

குடந்தையின் பெருமை
     எப்போதும் வற்றாத நீர்ப்பெருக்கையுடைய காவிரி நதி பாயும் நாடு சோழ நாடு. இதற்கு வளநாடு, சென்னி நாடு, அபய நாடு, கிள்ளி நாடு, செம்பியர் நாடு, அகளங்க நாடு, பெருநீர் நாடு, பொன்னிநாடு எனப் பல பெயர்கள் உண்டு. இந்நாட்டின் பெருமையை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார் :
      பூவினுள் பதுமம் போலும் புருடருள் திருமால் போலும்
     காவினுள் கற்பம் போலும் கலைகளுள் ஞானம் போலும்
     ஆவினுள் காரான் போலும் அறத்துனுள் இல்லறமே போலும்
     நாவினுள் மொய்ந்நாம் போலும் நாட்டினுள் சோழ நாடும்
   இத்தகைய பெருமை உடைய சோழ நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அமைந்துள்ளது. சோழ நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் இம்மாவட்டத்தில் கலைக்களஞ்சியமாக விளங்கும் பல சைவ மற்றும் வைணவக் கோயில்களையும் சங்கர மடம், சாரங்கதேவர் மடம், மௌனசாமி மடம் போன்ற பல மடங்களையும் தன்னகத்தே கொண்டது கும்பகோணம்.
  கும்பகோணத்திற்கு புனித யாத்திரை செல்வோர் அங்குள்ள பஞ்சகுரோசத் தலங்களுக்கும் சென்று விதிப்படி நீராடித் தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே அங்கு செல்ல வேண்டும் என்பர். திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, கருப்பூர் என்பவையே அவை. அமுதம் நிறைந்த குடம் சிவபெருமான் திருவருளால் சிதைந்து அதிலுள்ள அமுதம் நாலாப்பங்களிலும் பரவி ஐந்து குரோசம் வரையில் சென்று செழுமையாக்கியதால் இந்தத் தலங்கள் சிறப்பு பெற்றதாகக் கூறுவர். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல, கும்பகோணத்துக்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன. இத்தகு பெருமை வாய்ந்த இந்த நகருக்கு குடமூக்கு, குடந்தை என்ற பெயர்களும் உண்டு. 
காவிரிப்பூம்பட்டினம்
   கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பௌத்தத்தின் தாக்கத்தினை காஞ்சீபுரத்திற்கு அடுத்தபடியாக காவிரிப்பூம்பட்டினத்திலும், நாகப்பட்டினத்திலும் காணமுடியும்.
  சங்ககாலத் தமிழ்நாட்டில் சோழ மன்னர்க்குரிய தலைமை நகரங்களுள் ஒன்றாகவும் இந்நாட்டு வணிக வளர்ச்சிக்குக்குரிய கடற்றுறைப் பட்டினமாகவும் விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்ட தற்போதைய பூம்புகார். இங்கு ஏழு விகாரைகள் இருந்தன என்பது சிலப்பதிகாரம், மணிமேகலை கூறும் செய்தி. பூம்புகாரின் பகுதியாக விளங்கிய இந்நாளைய மேலையூரில் பூமிக்கடியில் புதையுண்டிருந்த புத்த விகாரைப் பகுதியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிப்ரவரி 1995இல் இப்பகுதியில் கடலுக்கடியில் நான்காவது கட்ட அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.
நாகப்பட்டினம்
   இடைக்காலச் சோழர் ஆட்சியில் நாகப்பட்டினம் தமிழகக் கிழக்குக் கடற்கரையில் சோழர்களின் முக்கியத் துறைமுகமாக மட்டுமன்றி சமய மையமாகவும் சிறந்து விளங்கியது. இங்கு கி.பி.11ஆம் நூற்றாண்டில் ஸ்ரீவிஜய  நாட்டின் மன்ன் சைலேந்திர வம்சத்தினைச் சேர்ந்த திருமாற விஜயோத்துங்கவர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபோது ராஜராஜன் (கி.பி.985-1014) அதனை ஊக்குவித்ததாக லெய்டன் பட்டயம் கூறுகிறது. சோழ மன்னனின் உடன்பாட்டுடன் கட்டப்பட்ட இந்த புத்த விகாரத்திற்கு நிவந்தமாக ஆனைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக அளிக்கப்பட்டது. அவன் இறந்தபிறகு அவனது மகன் ராஜேந்திரன் (கி.பி.1012-1044) இந்நிவந்தத்தை உறுதிப்படுத்தியதோடு அதனைச் செப்பேட்டுப்  பட்டயமாகவும் பொறிக்கச் செய்தான். 1867 முதல் நாகப்பட்டினத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தர் செப்புத்திருமேனிகள் மூலம் இங்கு பௌத்தம் பரவியிருந்ததை உணரமுடிகிறது.
பௌத்த மையங்கள்
     இவை தவிர புத்தர் சிற்பங்கள் மற்றும் கோயில்கள் இருந்த இடங்களாக இப்பகுதியில் பூதமங்கலம், புத்தமங்கலம், போதிமங்கலம், சங்கமங்கலம், திருவிலந்துறை, கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், எலையனூர், பெருஞ்சேரி, கோட்டப்பாடி, மாயவரம் (மயிலாடுதுறை) போன்ற இடங்ளைக் கூறலாம். தஞ்சைப் பெரியகோயிலிலும் புத்தர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
நாயக்கர் காலக் கல்வெட்டு
     தஞ்சையை ஆண்ட மன்னர்களில் முக்கியமான இடத்தை வகிப்பவர்கள் சோழர், நாயக்கர் மற்றும் மராட்டியர்களே. தஞ்சை வரலாற்றில் பெரும் பங்கு வகித்தவர்கள் சோழர்களாவர். களப்பிரர்கள் ஆட்சியில் இருந்த தமிழகத்தை மீட்ட விஜயாலயச்சோழன் தஞ்சையில் சோழர் ஆட்சியைப் புதுப்பித்தபிறகே மீண்டும் சோழர் ஆட்சி சிறப்பான நிலைக்கு வந்தது. சோழ மண்டலத்தில் சோழப் பேரரசர்கள் காலத்தில் போற்றப்பெற்ற பௌத்தம் பின்னர் மெல்லமெல்ல அருக ஆரம்பித்தது. விஜயநகரப் பேரரசின் காலத்தில் இறுதி நிலையை அடைந்தது. இவ்வாறு மறையத் தொடங்கிய பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள் செவ்வப்ப நாயக்கர் காலத்திற்குப் பிறகு தென்படவே இல்லை.
பௌத்த இறுதிச்சுவடுகள்
   பௌத்தத்தின் இறுதிச்சுவடுகளை தன்னகத்தே கொண்டு பெருமை பெற்றுள்ள  நகர் கும்பகோணம் ஆகும். தேவாரப் பாடல்கள் பெற்ற 274 தலங்களில் காவிரிக்குத் தென்கரையில் உள்ள 127 தலங்களில் திருக்குடமூக்கு என்னும் கும்பகோணம் உள்ளது. அங்குள்ள கும்பேஸ்வரர் கோயிலில், பௌத்தம் கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்ததற்கான சான்று கிடைத்துள்ளது.    இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற கல்வெட்டே அந்தச் சான்றாகும். இக்கல்வெட்டு செவ்வப்ப நாயக்கரின் ஆட்சியின்போது விக்கிரம ஆண்டு ஆடி மாதம் 22ஆம் நாள் எழுதப்பட்டதாகும். இது குறிக்கும் நாள் கி.பி.1580ஆம் ஆண்டு ஜுலைத்திங்கள் ஆகும்.   இக்கல்வெட்டு கூறும் செய்தி பின்வருமாறு அமையும்.
      விக்கிரம வருடம் ஆடி மாதம் 22ஆம் தேதி
      செவ்வப்ப நாயக்க ஐயன் தர்மமாக
      திருவிலந்துறை புத்தர் கோயிலில்
      தீத்தமாமருந்தார் நாயகர் நிலத்திலே
     திருமலைராசபுரத்து விசேச
      மகாசனங்கள் வாக்கால் வெட்டிப் போகையில்
     திருமலைராசபுரத்தில் அகரத்தில்
     திருப்பணி சேர்வையாக விட்ட நிலம்....
     கும்பகோணம்-காரைக்கால் நெடுஞ்சாலையில் திருநாகேஸ்வரம்- திருநீலக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறுகிராமம் எலந்துறை.  செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் திருவிளந்துறை என அழைக்கப்பெற்றது. இவ்வூரின் கிழக்கே அமைந்த ஊர் திருமலைராஜபுரம். திருமலைராஜபுரம் அந்தணர்கள் கிராமமாகவும், எலந்துறை பௌத்தர்கள் கிராமமாகவும் திகழ்ந்தன. திருமலைராஜபுரத்திற்குப் புதிய பாசன வாய்க்கால் வெட்டியமையால் எலந்துறையிலிருந்த புத்தர் கோயிலின் நிலத்திற்கு இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய திருமலைராஜபுரத்து ஊரார் தங்கள் ஊரில் உரிய அளவு நிலத்தை புத்தர் கோயிலுக்காக அளித்ததைக் கும்பகோணம் கல்வெட்டு கூறுகின்றது. கி.பி.1580இல் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள எலந்துறையில புத்தர் கோயில் இருந்ததை இதன்மூலம் அறியமுடிகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை புத்தர் கோயிலொன்று பௌத்தர்களால் போற்றப் பெற்று வந்ததற்கான இறுதிச்சான்றாகத் திகழ்வது இந்தக் கல்வெட்டேயாகும். களப்பணி மேற்கொண்டபோது அவ்வூரில் புத்தர் கோயில் இருந்ததற்கான சான்றையோ புத்தர் சிற்பத்தையோ காணமுடியவில்லை. எனினும் தஞ்சை மாவட்டத்தில் 16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் இருந்ததை இக்கல்வெட்டு தெளிவாக எடுத்துரைக்கிறது. சோழர்களைப் போல நாயக்கர்கள் பௌத்தத்திற்கு ஆற்றிய பங்கினையும், காஞ்சீபுரம், பூம்புகார், நாகப்பட்டினம் போன்றவற்றைத் தொடர்ந்து கும்பகோணத்தில் பௌத்தத்தின் பதிவையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

துணை நின்றவை
அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு, கும்பகோணம், 1992
கலைக்களஞ்சியம், தொகுதி 7, தமிழ் வளர்ச்சிக்கழகம், சென்னை, 1960
சதாசிவப்பண்டாரத்தார், டி.வி., காவிரிப்பூம்பட்டினம், மாதவி மன்றம்,
      மேலப்பெரும்பள்ளம், 1959
சோமலெ, நமது தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், பாரி நிலையம், சென்னை,
       1961
பாலசுப்ரமணியன், குடவாயில்., பௌத்தத்தின் இறுதிச்சுவடுகள், தஞ்சாவூர்
     நாயக்கர் வரலாறு, கையெழுத்துப்படி
வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 11, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1991
வேங்கடசாமி, மயிலை.சீனி., பௌத்தமும் தமிழும், தென்னிந்திய சைவ
     சித்தாந்த நூற்திப்புக்கழகம், சென்னை, 1957bபொ
Epigraphia Indica, Vol.XIX (1927-28), No.36, Kumbakonam inscription of Sevvappa Nayaka.

*தமிழ்ப்பொழில், துணர் 70, மலர் 1, ஏப்ரல் 1996, கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இதழில் வெளியான கட்டுரையின் திருந்திய வடிவம். இக்கட்டுரையை வெளியிட்ட அவ்விதழுக்கு நன்றி.

No comments:

Post a Comment