Thursday, January 19, 2012

திரிபிடக வரலாறு

                                          திரிபிடக வரலாறு

பௌத்த வேதத்திற்குத் திரிபிடகம் என்பது பெயர். பாலி மொழியிலே இது திபிடகம் என்று கூறப்படும். திரிபிடகம் என்பதற்கு மூன்று கூடை என்பது பொருள். அதாவது மூன்று வகுப்பு என்பது பொருள். பிடகத்தைப் பிடக்கு என்று தேவாரம்  கூறுகிறது. வட இந்தியாவிலே அக்காலத்தில் பெரும்பான்மையோர் வழங்கிவந்த அர்த்தமாகதி எனப்படும் பாலிமொழியிலே புத்தர் பெருமான் தம் கருத்துக்களை வெளியிட்டார். நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் புத்தர் பெருமான் தம் கொள்கைகளை நாடெங்கும் போதித்து வந்த போதிலும், அவர் அக்கொள்கைகளை நூல் வடிவமாக எழுதி வைக்கவில்லை. ஆனால், அவருடைய சீடர்கள், அவருடைய போதனைகளை இரண்டு சம்ஹிதை (தொகுப்பு) களாகத் தொகுத்துப் பாராயணம் செய்துவந்தனர். அத் தொகுப்புகளில், பிக்குகளும் பிக்குணிகளும் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களைக் கூறுகிற விநயம் என்பது ஒன்று; தர்மம் (அறநெறி) என்பது மற்றொன்று.
   புத்தர் பெருமான் நிர்வாணமோட்சம் அடைந்த சில திங்களுக்குப் பின்னர், மகதநாட்டுத் தலைநகரமான ராஜ கிருஹ நகரத்திற்கு அண்மையில் இருந்த சத்தபணி என்னும் மலைக் குகையிலே கார்காலத்தைக் கழிக்கும் பொருட்டு ஐந்நூறு தேரர்கள் (வயது முதிர்ந்த பிக்குகள்) ஒருங்கு கூடினார்கள். இதுவே பிக்கு சங்கத்தார் கூடிய முதல் மாநாடு ஆகும். புத்தருடைய முக்கிய சீடர்களில் ஒருவராகிய மகாகாசிபர் இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். புத்தர்பெருமான் அருளிய விநய போதனைகளை அவருடைய மற்றொரு முக்கிய சீடராகிய உபாலி என்பவர் ஓதினார். இன்னொரு முக்கிய சீடராகிய  ஆநந்தர், புத்தர் அருளிய தம்ம போதனைகளை ஓதினார். இவ்வாறு இந்த முதல் சங்கத்திலே விநயபிடகம், தம்ம(அபிதம்ம) பிடகம் என்னும் இரண்டு பிடகங்கள் மட்டும் தொகுக்கப்பட்டன. (சூத்திர பிடகம் என்னும் மூன்றாவது பிடகம், அபிதம்ம பிடகத்திலிருந்து பிற்காலத்தில் பிரித்துத் தொகுக்கப் பட்டது.) இவ்வாறு ஆதியில் இரண்டு பிடகங்களாக இருந்தவை பிற்காலத்திலே, மூன்று பிடகங்களாகத் தொகுக்கப்பட்டன. ஆகவே, முதலில் கூறியபடி இவற்றிற்குத் திரிபிடகம் என்று பெயர் உண்டாயிற்று.
  திரிபிடகம் தொகுக்கப்பட்ட பிறகும், அவை எழுதா மறையாகவே இருந்தன. பிடகங்களைப் பிக்குகள் நாள்தோறும் ஓதி, பாராயணம் செய்து வந்ததோடு அவற்றைத் தன் சீடர்களான பிக்குகளுக்கும் கற்பித்து ஓதுவித்து வந்தனர். இவ்வாறு, புத்தருடைய அருள் வாக்குகள், எழுதப்படாமல் எழுதாமறையாக இருந்து, ஆசிரிய மாணவர் வழிமுறையாக நெடுங்காலம் ஓதப்பட்டன.
   விநயபிடகத்தை ஓதிய பிக்குகள் விநயதரர் என்றும், சூத்திரபிடகத்தை ஓதிவந்தவர் சூத்ராந்திகர் என்றும், அபிதம்மபிடகத்தை ஓதிவந்தவர் அபிதம்மிகர் என்றும் பெயர் வழங்கப் பட்டனர் .   இவ்வாறு திரிபிடகங்களைப் பாராயணம் செய்துவந்த பிக்குகளுக்குப் பாணகர் என்பது பெயர். தீக பாணகர், மஜ்ஜிம பாணகர், சம்யுத்த பாணகர், அங்குத்தர பாணகர், ஜாதக பாணகர், தம்மபதப் பாணகர் முதலிய பெயர்களைப் பௌத்த மத உரை நூல்களில் காணலாம்.1
 1. (திரிபிடக நூலைப் பாராயணம் செய்த பௌத்த பிக்குகளாகிய இந்தப் பாணகரையும் தமிழ்நாட்டிலே பண்டைக் காலத்தில் யாழ் வாசித்து இசை பயின்ற பாணர் என்பவர்களையும் பெயர் ஒற்றுமைகொண்டு இருவரும் ஒருவரே என மயங்கக் கூடாது.)
   அன்றியும், இப்பிடகங்களை ஓதிய பிக்குகளில் பல உட்பிரிவினரும் இருந்தனர். அவ்வுட் பிரிவினர், பிடகங்களின்  உட்பிரிவுகளை மட்டும் ஓதிவந்தனர். உதாரணமாகக் கூறுவாம்; புத்தருடைய  சீடர்களில் ஒருவராகிய ஆநந்தரைத் தலைவராகக் கொண்ட பிக்குகள், சூத்திரபிடகத்தின் ஒரு பிரிவாகிய தீகநிகாயப் பகுதியை ஓதிப் பாராயணம் செய்துவந்தனர். மற்றொரு சீடராகிய சாரிபுத்தரைத் தலைவராகக் கொண்ட பிக்குகள் மஜ்ஜிம நிகாயப் பகுதியை ஓதிவந்தனர். மகாகாசிபரைத்  தலைவராகக் கொண்ட பிக்குகள்  சம்யுத்த நிகாயப் பகுதியையும், அநுருத்தரைத்  தலைவராகக் கொண்ட பிக்குகள் அங்குத்தர நிகாயப் பகுதியையும் பாராயணம் செய்து வந்தார்கள்.
  பௌத்த மதத்தில், பிற்காலத்திலே பிளவுகள் ஏற்பட்டுப் பிரிவுகள் உண்டாயின. புத்தர் வீடுபேறடைந்து நூற்றுப் பத்தாண்டுகளுக்குப் பின்னர்பிக்கு சங்கத்தில் புதிதாகத் தோன்றிய சில பழக்கவழக்கங்களைக் கண்டிக்கும்பொருட்டு, வைசாலி நகரத்தில் 700 பிக்குகள் மாநாடு கூடி எட்டுத் திங்கள்வரை ஆராய்ந்து, புதிய வழக்கங்களைக் கூடாதென்று தடுத்தார்கள். கண்டிக்கப்பட்ட 10,000 பிக்குகள் ஒருங்கு சேர்ந்து தனிப் பிரிவாகப் பிரிந்து போயினர் என்று தீபவம்சம் என்னும் நூல் கூறுகிறது. புத்தருடைய பழைய கொள்கைகளைப் பின்பற்றிவரும் பௌத்த மதத்துக்குத் தேரவாத பௌத்தம் என்றும், (இதற்கு ஹீனயானம் என்று தவறாகப் பெயர் வழங்குகிறது) புத்தர்காலத்தில் இல்லாத புதிய கொள்கைகளைக் கொண்ட பௌத்த மதத்திற்கு மகாயான பௌத்தம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன. அவ்விரு பெரும்பிரிவுகளிலும் அநேக உட்பிரிவுகள் உண்டு.
   இலங்கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நாளாவது வரையில், பழைய தேரவாத பௌத்தம் நிலைபெற்றுள்ளது. இத்தீவிலேயும் கி.மு முதல் நூற்றாண்டிலே புதிய  கொள்கைகள் பௌத்தமதத்தில் புகத் தொடங்கின. ஆகவே, தேரவாத பௌத்த பிக்குகள் ஒருங்குகூடி, ஆதிக்கொள்கைக்குப் புறம்பான புதிய கொள்கைகள் திரிபிடகத்தில் நுழையாதபடி போற்றவேண்டும் என்னும் கருத்தோடு, அதுவரையும் எழுதாமறையாக இருந்த திரிபிடகத்தை நூல் வடிவமாக எழுதினார்கள். இலங்கைத் தீவை கி.மு 29 முதல் 17 வரையில் அரசாண்ட வட்ட காமினி அபயன் என்னும் அரசன் காலத்தில் திரிபிடகம் முதல்முதல் நூல் வடிவமாக எழுதப்பட்டது என்று மகா வம்சம் என்னும் நூல் (xxxiii 100-101) கூறுகிறது. இலங்கைத் தீவிலுள்ள மலைய நாட்டிலே, மாத்தளை என்னும் ஊருக்கருகிலிருந்த ஆலோக (அலு) விகாரை என்னும், பௌத்தப் பள்ளியிலே திரிபிடகம் பொற்றகட்டில் எழுதப்பட்டு அவ்விகாரையில் ஒரு கற்பாறையின் கீழ்ச் சேமித்து வைக்கப் பட்டதென்று கூறப்படுகிறது.
  திரிபிடகம் , நூல்வடிவாக எழுதப்பட்ட பிறகும், நெடுநாள் வரையில் வாய்மொழியாக ஓதும் பழக்கம் வழக்காற்றில் இருந்து வந்தது. பின்னர் அவ்வழக்கம் கைவிடப்பட்டது.
  பிடகம் என்றால் கூடை என்று பொருள். எனவே, திரிபிடகம் என்றால், மூன்று கூடை என்று பொருள்படும்அதாவது மூன்று தொகுப்பு என்பது கருத்து. பிடகத்தை பிடக்கு என்று தேவாரம் கூறுகிறது. திரிபிடகம்  பாலி மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. தொன்று தொட்டுப் புத்தரைப் பின்பற்றி வருகிற தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. (பிற்காலத்தில் உண்டான மகாயான பௌத்த நூல்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டவை.) பிடகங்களும் அவற்றின் பிரிவுகளும் வருமாறு:
I.விநய பிடகம்: இரண்டு பிரிவுகளையுடையது. அவை: 1. விநயபிடகம், 2. பாதிமோக்கம் என்பன.
II. சூத்திர பிடகம்: ஐந்து பிரிவுகளையுடையது. அவை: 1. தீக நிகாய, 2. மஜ்ஜிம  நிகாய,  3. சம்யுத்த  நிகாய, 4. அங்குத்தர  நிகாய, 5. குட்டக  நிகாய என்பன.
 ஐந்தாவது பிரிவாகிய குட்டக  நிகாயம் பதினைந்து உட்பிரிவுகளையுடையது. அவ்வுட் பிரிவுகளாவன:
1.குட்டக பாதம், 2. தம்ம பதம், 3. உதானம், 4. இதிவுத் தகம், 5. ஸத்தநி பாதம், 6. விமான வத்து 7. பேதவத்து, 8. தேரகாதை, 9. தேரிகாதை, 10. ஜாதகம், 11. (மகா) நித்தேசம், 12. படிசம்ஹித மக்கா, 13. அபதானம், 14. புத்த வம்சம்,15. சரியா பிடகம் என்பன.
 III. அபிதம்ம பிடகம்: ஏழு பிரிவுகளையுடையது. அவை: 1. தம்மசங்கணீ , 2. விபங்கம்,  3. கதாவத்து, 4. பஞ்ஞத்தி அல்லது பண்ணத்தி  (புக்கல பஞ்ஞத்தி), 5. தாதுகதை, 6. யமகம், 7. பட்டானம் என்பன.
 திரிபிடக நூல்களுக்குப் பிற்காலத்திலே உரையாசிரியர்கள் பாலிமொழியிலே உரைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகள் நாலதுவரையில் தேரவாத பௌத்தர்களால் பயிலப்பட்டு வருகின்றன. அவ்வுரைகளாவன:-
 பிடக நூலின் பெயர்                                       உரைநூலின் பெயரும், உரையாசிரியர் பெயரும்
 I.விநய பிடகம்
1. விநயபிடகம்                                              ஆசாரிய புத்தகோஷர், சமந்தபாசாதிக என்னும் உரையை எழுதினார்
2. பாதிமோக்கம்                                             ஆசாரிய புத்தகோஷர், கங்கா விதரணீ  என்னும் உரையை எழுதினார்
II. சூத்திர பிடகம்
1. தீக நிகாய                                                   ஆசாரிய புத்தகோஷர், ஸூமங்கள விலாஸினீ  என்னும் உரையை எழுதினார்     
2. மஜ்ஜிம  நிகாய                                          ஆசாரிய புத்தகோஷர், பபஞ்சஸூடனீ  என்னும் உரையை எழுதினார்
3. சம்யுத்த  நிகாய                                         ஆசாரிய புத்தகோஷர், ஸாரத்த பகாஸினீ  என்னும் உரையை எழுதினார்
4. அங்குத்தர  நிகாய                                          ஆசாரிய புத்தகோஷர், மனோரதபூரணீ  என்னும் உரையை எழுதினார்
5. குட்டக  நிகாய
 1.குட்டக பாதம்                                              ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்
2. தம்ம பதம்                                                  ஆசாரிய புத்தகோஷர், தம்மபதாட்டகதா என்னும் உரையை எழுதினார்
3. உதானம்                                                     ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
4. இதிவுத் தகம்                                              ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
5. ஸத்தநி பாதம்                                           ஆசாரிய புத்தகோஷர், பரமார்த்த ஜோதிகா என்னும் உரையை எழுதினார்
6. விமான வத்து                                            ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
7. பேதவத்து                                                   ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
8. தேரகாதை                                                  ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
9. தேரிகாதை                                                 ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார்
10. ஜாதகம்                                                     ஆசாரிய புத்தகோஷர், ஜாதகாத்தகதா  என்னும் உரையை எழுதினார்
11. (மகா) நித்தேசம்                                        உபசேனர், ஸத்தம பஜ்ஜோதிகா  என்னும் உரையை எழுதினார்
12. படிசம்ஹித மக்கா                                    மகாநாமர், ஸத்தம பகாஸினீ   என்னும் உரையை எழுதினார்
13. அபதானம்                                                 விஸூத்தஜன  விலாஸினீ  என்னும் உரை நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை
14. புத்த வம்சம்                                              ஆசாரிய புத்ததத் தேரர்  மதுராத் விலாஸினீ  என்னும் உரையை எழுதினார். (இவர் சோழ நாட்டுத் தமிழர்)
15. சரியா பிடகம்                                            ஆசாரிய தர்ம பால மகாதேரர் (தமிழர்), பரமாத்த தீபனீ  என்னும் உரையை எழுதினார் 
III. அபிதம்ம பிடகம்    
1. தம்மசங்கணீ                                              ஆசாரிய புத்தகோஷர், அத்தஸாலினீ என்னும் உரையை எழுதினார்
2. விபங்கம்                                                    ஆசாரிய புத்தகோஷர், ஸம்மோஹ வினோதனீ  என்னும் உரையை எழுதினார்
3. கதாவத்து                                                       ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா  என்னும் உரையை எழுதினார்
4. புக்கல பஞ்ஞத்தி                                        ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
5. தாதுகதை                                                   ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
6. யமகம்                                                        ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
7. பட்டானம்                                                       ஆசாரிய புத்தகோஷர், பஞ்சப்பகரண அட்டகதா என்னும் உரையை எழுதினார்
   இதுகாறும் கூறப்பட்டவை பழைய பௌத்தமாகிய தேரவாத பௌத்த நூல்கள். இவையன்றி, இன்னும் சில நூல்கள் தேரவாத பௌத்தத்தில் உள்ளன. விரிவஞ்சி அவற்றை இங்குக் கூறாமல் விடுகிறோம். தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலேயே எழுதப்பட்டவை. பழைய தேரவாத பௌத்தத்தை ஈனயானம் என்றும் கூறுவர்.
   தேரவாத பௌத்தத்திலிருந்து, பிற்காலத்தில் பிரிவுண்டது மகாயான பௌத்தம். மகாயான பௌத்தர்கள், திரிபிடகத்தில் உள்ள சில பகுதிகளைத் தள்ளியும், கௌதம புத்தர் கூறாத வேறு சில கருத்துக்களைப் புகுத்தியும் தமது  மதநூல்களை அமைத்துக் கொண்டனர்மகாயான பௌத்தர்கள் தம் மதநூல்களை வடமொழியில் எழுதிவைத்தனர். அந்நூல்களின் பெயர்களைவிரிவஞ்சி ஈண்டுக் குறிக்காமல் விடுகிறோம்.
   தமிழிலே, சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி (2 முதல் 5 ஆவது சருக்கம் வரையில்) என்னும் நூல்களில் பௌத்த மதத்தத்துவங்கள் கூறப்பட்டு மறுக்கப்படுகின்றன. இவை முறையே சைவ, சைன மதத்தவரால் எழுதப்பட்டவை. மணிமேகலை 30  ஆவது காதையிலே தேரவாத பௌத்த தத்துவங்கள் விரிவாகக் கூறப்படுகின்றன. மணிமேகலையைத் தவிர, ஏனைய குண்டலகேசி முதலிய பௌத்தத் தமிழ் நூல்கள் இறந்துவிட்டன.

No comments:

Post a Comment