Friday, January 20, 2012

பின்னிணைப்பு - 4

பின்னிணைப்பு
4. ஆசிவக மதம்

    அழிந்தொழிந்துபோன இந்த மதம் இப்போது முழுதும் மறக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றிக் கூறுவது அமைவுடையது.

    பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வடஇந்தியாவில் தோன்றியது. இந்த  மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரி புத்திரர் என்பவர். பாலி மொழியில் இப்பெயர் மக்கலி புத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலி புத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி என்று கூறும்.

    'மக்கலி' என்பது வடநாட்டில் பண்டைக்காலத்தில் இருந்த இரந்துண்டு வாழும் ஒருவகைக் கூட்டத்தார்க்குப் பெயர் என்றும், அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் ஆகையால் இவருக்கு 'மக்கலி புத்திரர்' என்னும் பெயர் வந்ததென்றும் சிலர் கூறுவர். 'மக்கலி' என்பது இவருடைய தந்தையின் பெயர். ஆகையால் இவருக்கு 'மக்கலி புத்திரர்' என்னும் பெயர் வழங்கியதென்று வேறு சிலர் உரைப்பர்.

    மக்கலி அல்லது மற்கலி என்பவர், ஆருகத மதத்தையுண்டாக்கிய மகாவீரரும், பௌத்த மதத்தையுண்டாக்கிய கௌதமபுத்தரும் உயிர்வாழ்ந்திருந்த அதே காலத்தில் இருந்தவர். மகாவீரர் ஆருகத மதக்கொள்கையை உலகத்தாருக்குப் போதித்து வந்த காலத்தில் அவரது புகழையும் செல்வாக்கையும் கேள்வியுற்ற மற்கலி அவரிடம் சென்று அவரைச் சார்ந்திருக்க விரும்பினார். ஆனால், மற்கலியின் மாறுபட்ட ஒழுக்கங்களையும் குணங்களையும் அறிந்த மகாவீரர், அவர் தம்மைச் சார்ந்திருக்க உடன்படவில்லை. ஆயினும், மற்கலி எவ்வாறோ மகாவீரரின் உடன்பாடு பெற்று, அவருடன் சில ஆண்டு தங்கியிருந்தார். பின்னர், அவருடன் மாறுபட்டுத் தனியே பிரிந்துபோய், ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார். அதுதான் 'ஆசிவக மதம்' அல்லது 'ஆஜீவகமதம்' என்பது. ஆருகத மதக்கொள்கைகள் சிலவற்றையும், தாம் உண்மை என்று கண்ட கொள்கைகளையும் திரட்டி, மற்கலி இந்த மதத்தை உண்டாக்கினாரென்று சொல்லப்படுகின்றது.

    சற்றேறத்தாழ, கி.மு. 500 இல் மற்கலி காலமானார் என்று கருதப்படுகின்றது. இவர் காலஞ்சென்ற பதினாறு ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவீரர் வீடுபெற்றார் என்பர். மாகாவீரர் வீடுபெற்ற சில ஆண்டுகளுக்குப் பின்னர், கௌதமபுத்தர் நிர்வாணம் அடைந்தார்.

    ஆசீவகர், பௌத்தர், ஜைனர், வைதீகர் ஆகிய மதத்தவர்களுக்குள் எப்போதும் சமயப்பகை இருந்து கொண்டிருந்தது.

    ஆசீவக மதக்கொள்கைகளைக் கூறும் நூலுக்கு 'நவகதிர்'  என்பது பெயர். இந்த நூலில் நில அணு, நீர் அணு, தீ அணு, வளி அணு, உயிர் அணு என்னும் ஐம்பொருளைப் பற்றிக் கூறியுள்ளதென்பர். கருமை, நீலம், செம்மை, பொன்மை, வெண்மை, தூயவெண்மை என்னும் ஆறுவகைப் பிறப்பு உண்டென்பதும், தூய வெண்மைப் பிறப்புத்தான் மிக உயர்நிலைப் பிறப்பென்பதும், இப்பிறப்பினை அடைந்தவர் தாம் வீட்டுலகம் சேர்வர் என்பதும் இந்த மதக்கொள்கை. எண்பத்து நான்கு இலட்சம் மகா கல்ப காலம் வரையில் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து உழலுமென்றும், அந்தக் காலம் கடந்ததும் அவை வீடுபேறடையுமென்றும், இந்த நியதிமாறி உயிர்கள் வீடு பேறடையாவென்றும் கொண்டது இந்த மதம் என்பர். இந்த நியதிக்கு நூலுருண்டை உதாரணமாகக் கூறப்படும். ஒரு நூலுருண்டையைப் பிரித்தால், நூல் எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு வரையில்தான் அது நீளுமே தவிர, அதற்குக் குறைவாகவோ அதிகமாகவோ நீளாதது போல, உயிர்கள் யாவும் மேற்சொன்ன நியதிக்குக் கட்டுப்பட்டே நடக்கும். நல்லறிவு பெற்று நல்ல செயல்களைச் செய்பவன் விரைவில் வீடு பெறான்.  அவனுக்கு நியமிக்கப்பட்ட காலம் வரையில் அவன் பிறந்து இறந்து உழன்றே ஆகவேண்டும். மோட்சமடையும் நிலையிலிருந்து ஒருவன் காலநியதியைக் கடந்து, தீயகருமங்கள் செய்து மீண்டும் பிறந்திறந்து உழல முயன்றாலும், அவன் அவ்வாறு செய்ய இயலாது என்பதும் அவனுக்கு ஏற்பட்ட நியதிப்படி அவன் வீடுபேறடைந்தாக வேண்டும் என்பது இம்மதக் கொள்கைகளில் சிலவாம்.

    நவகதிரையன்றி, 'ஆதித்தியம்' என்னும் நூலும் இந்த மதத்தாருக்குண்டென்று தெரிகின்றது. இது, "ஆசீவக சங்க சமயத்தவருக்கு ஆதித்தியமென்பதொரு நூலுண்டு. மற்றது ஆதித்தனைப் பற்றியிருக்கும்; அது சோதிசாத்திரமென உணர்க. அன்றியேயும், ஆதித்தனைப் போல மீண்டும் அவர் வானமண்டல வரவுடையாரெனப்படுவர்" என்று கூறும் தக்கயாகப்பரணி (183-ஆம் தாழிசை) உரைப்பகுதியினால் இது அறியப்படும்.

    மற்கலிக்குப் 'பூரணர்' என்னும் பெயரும் உண்டு. களங்கமற்ற ஞானமுடையவராகலின், அவருக்கு இப்பெயர் உண்டாயிற்றென்பர். இந்தப் பூரணருடைய இயல்பு கீழ்க்கண்டவாறு 'நீலகேசி'  என்னும் நூலில் கூறப்பட்டிருக்கின்றது.

        'உரையா னிறைவ னுணலு மிலனாய்த்
        திரையா னரையான் றெரிவில் லுருவம்
        வரையா வகைவா னிடுவில் லனையன்
        புரையா வறிவிற் புகழ்பூ ரணனே.'
                                        (ஆஜீவக வாதச் சருக்கம் 15 - ஆம் செய்யுள்)

    (உரை) 'வாக்கியப் பிரவிருத்தியும், புத்தியும், நரை திரை முதலாயினவுமுடையனல்லனாகி ஆகாசதலத்து இந்திர தனுசுபோலத் தோன்றும் தோற்றத்தையுடையனாகிக் குற்றப்படாத அறிவையுடையவன் பூரணனென்னும் எம்முடைய ஆப்தன் என்றவாறு.'

    ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்பது தக்கயாகப்பரணியுரையினால் அறியப்படுகின்றது. இதனை,

        'தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்
        பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே'

என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் துணியலாம்.

    மேலே காட்டிய உரைப்பகுதியில், ஆருகதரிலே ஆசீவகர் என்று காணப்படுகிறது. அஃதாவது, ஆசீவகமதம் ஆருகதமதமாகிய ஜைனமதத்தின் ஒரு பிரிவு என்று கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், 'மணிமேகலை','நீலகேசி' என்னும் நூல்களில், ஆருகதமதம் (ஜைனம்) வேறு, ஆசீவக மதம் வேறு என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் இந்த மதம் ஜைன மதத்தின் ஒரு பிரிவு எனத் தவறாகக் கருதப்பட்டது. இத்தவற்றினைத்தான் மேலே காட்டியபடி தக்கயாகப்பரணி உரையாசிரியர் எழுதியிருக்கிறார். நிகண்டுகளும் ஆசீவக மதம், ஆருகத மதத்தின் பிரிவு என்றே கூறுகின்றன.

    'சாவகர் அருகர் சமணர் ஆகும்;
    ஆசீ வகரும் அத்தவத் தோரே'             (சேந்தன் திவாகரம்)

    'சாவகர் அருகர் சமணர் அமணர்
    ஆசீவகர் தாபதர் அத்தவத் தோரே'      (பிங்கலநிகண்டு)

    'சிவஞான சித்தியார்' என்னும் சைவ சமய நூலிலே, இந்த மதம் ஜைன மதத்தின் பிரிவுகளில் ஒன்றாகக் கூறியிருக்கின்றது. இந்தத் தவற்றினை ஞானப்பிரகாசர் என்னும் உரையாசிரியர் எடுத்துக் காட்டியிருக்கின்றார். 'திகம்பரமொப்பினும் அநேகாந்தவாதிகளாகிய நிர்க்கந்த ஆசீவகனென்க' என்று எழுதியிருக்கிறார். அஃதாவது, ஆசீவகர் ஜைனரில் திகம்பரரை (நிர்க்கந்தரை)ப் போன்ற கொள்கையுடையவரெனினும், அவரின் வேறானவர் என்று விளக்கியுள்ளார். 'மணிமேகலை', 'நீலகேசி' என்னும் இரண்டு நூல்களைத் தவிரப் பிற்காலத்து நூல்களாகிய  'சிவஞான சித்தியார்' , 'தக்கயாகப்பரணி', 'திவாகரம்',  'பிங்கலநிகண்டு' முதலானவை ஆசீவகமதத்தை (திகம்பர) ஜைன மதம்  என்றே கூறுகின்றன. இவ்வாறு கருதப்பட்டதற்குக் காரணம் ஆசீவகமதத்தவரும் திகம்பர ஜைன மதத்தவரும் மேற்கொண்டு வந்த பொதுவான சில கொள்கைகளாகும். உடையின்றி யிருத்தலும், குளியாமல் அழுக்குடம்புடன் இருத்தலும் இவை போன்ற சில வெளிப்பார்வைக்குப்  பொதுவாகத் தோன்றிய கொள்கைகளைக் கண்டு, இவ்விரு சமயத்தவரும் ஒரே சமயத்தவரென்று தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். வெளியொழுக்கத்தில் ஒன்றாகத் தோன்றினாலும் இவ்விருவருடைய தத்துவக் கொள்கைகள் வெவ்வேறானவை. இவ்வாறு ஆசீவகமதத்தினர் திகம்பர ஜைன மதத்தினராகப் பிறகாலத்தில் தவறாகக் கருதப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமன்று வடநாட்டிலும் அவர் இவ்வாறே கருதப்பட்டு வந்தனர்.

    இந்த மதத்தைப் பற்றிய உண்மை வரலாறுகளும் கொள்கைகளும் இப்போது முழுவதும் கிடைக்கவில்லை. இப்போது கிடைப்பன எல்லாம் இந்த மதத்தின் பகைவர்களால் எழுதப்பட்டவை. ஆகவே, நடுநின்று கூறாமல் சார்பு பற்றிக் கூறியுள்ளன என்று கருதப்படுகின்றது. 'மணிமேகலை' என்னும் பௌத்த நூலிலும்  (சமயக்கணக்கர் தந்திறங்கேட்ட காதை),  'நீலகேசி' என்னும் ஜைன நூலிலும் (ஆசீவகவாதச் சருக்கம்),  'சிவஞான சித்தியார்'  என்னும் சைவ நூலிலும் (பரபக்கம் ஆசீவக மதம்) இந்த மதக்கொள்கைகள் எடுத்துக் கூறி மறுக்கப்பட்டுள்ளன. இந்த மதத்தைப் பற்றி அறிய விரும்புவோர்க்கு மேற்சொன்ன தமிழ் நூல்களும் (Encyclopaedia of Religion and Ethics by James Hashings)  என்னும் நூலும் உதவி புரியும்.

    இந்த மதம் தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் பரவியிருந்தது. தமிழ்நாட்டிலே சமதண்டம் என்னும் ஊரிலே இந்த மதத் தலைவர்கள் இருந்ததாக 'நீலகெசி' என்னும் நூல் கூறுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும், கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, ஆசீவக மதத்திற் சேர்ந்து துறவுபூண்டதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது.

        'கண்ணகி தாதை கடவுளர் கோலத்
        தண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
        புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்'
                                                  (நீர்ப்படைக்காதை)

என வரும் அடிகளால் அறியலாம்.

    இராசராச சோழன் காலத்தில் பொறிக்கப்பட்ட சிலாசாசனங்களில் 'ஆசுவ கடமை' என்னும் ஆயம் (வரி) குறிக்கப்பட்டிருப்பதைக் கொண்டு, ஆசீவகமதத்தாருக்கு அக்காலத்தில் ஆயம் விதிக்கப்பட்டிருந்ததாகக் கூறுவர் சிலர். இதை மறுத்து, சாசனங்களில் கூறப்பட்டுள்ள 'ஆசுவ கடமை' என்பது செம்பு அல்லது பித்தளைப் பாத்திரங்களைச் செய்யும் கன்னாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்குமே தவிர, ஆசீவக மதத்தாருக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறிக்காது என்றும், அவ்வாறு கூறுவது தவறு என்றும் பேராசிரியர் திரு. சக்கரவர்த்தி நயினார் அவர்கள் தாம் பதிப்பித்துள்ள 'நீலகேசி' யின் ஆங்கில முன்னுரையில் விளக்கமாக எழுதியிருக்கின்றார்கள். ஆகவே,  ஆசீவக மதத்தாருக்கு இறை விதிக்கப்பட்டிருந்ததாகக் கருதுவது தவறாகும்.

No comments:

Post a Comment